search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் உருக்காலை
    X
    சேலம் உருக்காலை

    தனியார் மயமாக்க எதிர்ப்பு - சேலம் உருக்காலை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக்காலை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சேலம்:

    சேலம் உருக்காலைையை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இதையடுத்து உருக்காலை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று காலை அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இரும்பாலையை தனியார் மயமாக்கக்கூடாது, உலக டெண்டரை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரும்பாலை 2-வது கேட்டில் இருந்து 3-வது கேட்டுக்கு ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த ஊர்வலத்தில் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    எல்.டி.எப். தொழிற்சங்கம் பெருமாள், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சுரேஷ்குமார், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் தேவராஜ், அண்ணா தொழிற்சங்கம் முருகேசன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ., உதயகுமார், வேங்கடபதி ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அவர்கள் பேசியதாவது:-

    உருக்காலையை சேலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது அண்ணாவின் கனவு திட்டம். கருணாநிதி முதல்வராக இருக்கும் போது அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் அழுத்தம் கொடுத்து சேலத்தில் இந்த தொழிற்சாலையை நிறுவினார்.

    பா.ஜ.க அரசு எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சேலம் இரும்பாலை நஷ்டத்தில் இயங்குவதாகவும், தனியாருக்கு கொடுக்க போவதாகவும் அதற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டே வந்தது. அதை கருணாநிதி தடுத்து நிறுத்தி வந்தார்.

    தற்போது பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மத்திய அரசு சார்பில் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக தனியாருக் தாரைவார்க்க உலக டெண்டர் விடப்பட்டுள்ளது.

    இதற்காக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உருக்காலை பொது நிறுவனமாக செயல்பட வேண்டும், தனியார் மயமாக்க கூடாது என்று சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து அதை வலியுறுத்தினார். அதேபோல் தொடர்ந்து டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்களும் மத்திய மந்திரியிடம் மனு கொடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    மேலும் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடும் வரை பல்வேறு போராட்டம் நடத்தப்படும். இதற்காக சென்னையிலும் வருகிற 18-ந் தேதி கோட்டை முன்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். தமிழக அரசு மத்திய அரசிடம் உருக்காலை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்று அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் உருக்காலைக்கு நிலம் கொடுத்தவர்கள் சங்கத்தினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து கொண்டனர்.

    Next Story
    ×