search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நளினி
    X
    நளினி

    நளினி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? - ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

    7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
    சென்னை:

    ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை செய்தது.

    கடந்த 8 மாதங்களாக இந்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார்.

    சென்னை ஐகோர்ட்

    இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா,சி.சரவணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நளினி தரப்பில் ஆஜரான வக்கீல் ராதாகிருஷ்ணன், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட கவர்னர் அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 8 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்துத் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கவர்னருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக நீண்ட காலம் இருக்க முடியாது. கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்காததால், மனுதாரர் உள்பட 7 ஏழு பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படுகின்றனர்’ என்று வாதிட்டார்.

    தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘அமைச்சரவை பரிந்துரையை பரிசீலிக்க வேண்டும் என்று கவர்னருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. கவர்னருக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கிறது.

    7 பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசின் பரிந்துரை கவர்னரின் பரிசீலனையில் உள்ளது’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

    Next Story
    ×