search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கான செயல்மாதிரி ஆய்வகம்
    X

    அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கான செயல்மாதிரி ஆய்வகம்

    சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கான செயல்மாதிரி ஆய்வகத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
    சென்னை:

    சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கான செயல்மாதிரி ஆய்வகம், தாய் மண்டல பயிற்சி மையத்திற்கான கலந்தாய்வு அரங்கத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும், விபத்தில் காயம்பட்டவர்களுக்கு அளிக்கும் முதலுதவி குறித்த விழிப்புணர்வு குறுந்தகடினையும் வெளியிட்டு குறும்படத்தினை பார்வையிட்டனர்.


    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    இந்த அரசு ஏழை எளிய மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க வழிவகை செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சைக்கான செயல்மாதிரி ஆய்வகம் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கு பயனுள்ளதாக அமையும்.

    மேலும் தமிழ்நாட்டில் 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 31 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 24 தாலுகா மருத்துவமனைகள் என மொத்தம் 80 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சேவை திட்டத்தின் கீழ் (தாய்) விபத்து மற்றும் காயங்கள், விஷமுறிவு, மாரடைப்பு, பக்கவாதம், தீக்காயங்கள், குழந்தை மருத்துவ அவசரங்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த திட்டத்தினால் தமிழக அளவில் சாலை விபத்து தொடர்பான இறப்பு விகிதம் 2017 முதல் 2018 வரை 24.39 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் மட்டும் விபத்து தொடர்பான இறப்பு விகிதம் 8.3 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    தாய் சிகிச்சை மையங்களை உருவாக்கியதன் மூலம் இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் இறப்பு விகிதத்தை குறைத்துள்ளதால், இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசின் நிதி ஆயோக் குழு முடிவு செய்துள்ளது. மேலும் சென்னை அரசு பொது மருத்துவமனையால் விபத்தில் காயம்பட்டவர்களுக்கு அளிக்கும் முதலுதவி குறித்த விழிப்புணர்வு குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் தாமு, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×