search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.10 கோடி பணத்துடன் திருப்பி ஒப்படைக்கப்பட்ட வேன்.
    X
    ரூ.10 கோடி பணத்துடன் திருப்பி ஒப்படைக்கப்பட்ட வேன்.

    பல்லடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 கோடி வங்கி பணம் திருப்பி ஒப்படைப்பு

    பல்லடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 கோடி வங்கி பணம் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டட பின்னர் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. #ElectionFlyingSquad #LokSabhaElections2019
    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள கரடிவாவியில் குண்டடம் வேளாண்மை துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குழந்தைசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் ரங்கசாமி உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படை நிலைக்குழுவினர் நேற்று பல்லடம் செட்டிபாளையம் சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது கோவையில் இருந்து வந்த ஒரு டெம்போ டிராவலர் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். தனியார் வங்கி போத்தனூர் கிளையிலிருந்து தூத்துக்குடியில் உள்ள வங்கி தலைமையகத்திற்கு 4 இரும்பு பெட்டியில் ரூ.10 கோடி ரொக்கம் கொண்டு செல்வது தெரியவந்தது. அந்த பணம் கொண்டு செல்ல எந்தவிதமான ஆவணமும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது அறிவுறுத்தலின் பேரில் திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரி ராஜசேகரன் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தனியார் வங்கி அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

    அதைத் தொடர்ந்து போத்தனூர் வங்கி கோவை மாவட்டத்தில் வருவதால் கோவை மாவட்ட வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் பல்லடத்திற்கு வந்தனர்.

    இதுகுறித்து போத்தனூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போத்தனூர் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு வங்கி அதிகாரிகளிடம் திருப்பூர் மற்றும் கோவை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் பணத்துக்கு உரிய ஆவணங்களை காண்பித்தனர். ஆவணங்களை பரிசோதனை செய்த அதிகாரிகள் வங்கி பணம் தான் என்பதை உறுதி செய்த பின்னர் திருப்பி ஒப்படைத்தனர்.

    இதேபோன்று ஊட்டி- கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தா பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கல்லட்டியில் இருந்து ஊட்டிக்கு சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் உள்ள பெட்டியில் கத்தை கத்தையாக ரூ.73 லட்சம் பணம் இருந்தது.

    விசாரணையில் தனியார் ஏஜென்சி மூலம் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு செல்லப்பட்டதாக கூறினர். இதனையடுத்து வேனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் பணத்துடன் வேன் விடுவிக்கப்பட்டது.

    இதேபோன்று கூடலூரில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.62 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது. ஊட்டி- மஞ்சூர் சாலை லவ்டேல் பகுதியில் நடத்திய சோதனையில் ரூ.50 ஆயிரத்து 500 சிக்கியது. கல்லாறில் வியாபாரி கமல்ராஜ் என்பவரிடம் ரூ.54 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. குன்னூரில் நடந்த சோதனையில் குண்டாடா பகுதியை சேர்ந்த விவசாயி ஆனந்தனிடம் ரூ.65 ஆயிரம் சிக்கியது.

    சிறுமுகை சத்தி மெயின்ரோடு கூத்தாமண்டி பிரிவில் காரமடை வட்டாரவளர்ச்சி அலுவலர் பி.சைலஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியே வந்த மினி லாரியை சோதனை செய்தபோது டிரைவர் மாரியப்பன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 790 பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி புனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதேபோன்று அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த சரஸ்வதி என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 4 லட்சத்து 6,500 பறிமுதல் செய்யப்பட்டது.  #ElectionFlyingSquad #LokSabhaElections2019
    Next Story
    ×