search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி சிலை திறப்பு விழா: சென்னை வரும் சோனியா, ராகுலுக்கு பலத்த பாதுகாப்பு
    X

    கருணாநிதி சிலை திறப்பு விழா: சென்னை வரும் சோனியா, ராகுலுக்கு பலத்த பாதுகாப்பு

    கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக இன்று சென்னை வரும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Karunanidhi
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை 5 மணி அளவில் 2 சிலைகளும் திறக்கப்பட உள்ளன. இதற்கான விழா இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கிறார்.

    நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் க அன்பழகன் வரவேற்கிறார். துரைமுருகன், ஜெ அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். சிலை திறப்பு விழா முடிந்ததும் சோனியாவும், ராகுலும் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் சோனியா, ராகுல் மற்றும் 3 மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். ஒரே மேடையில் தலைவர்கள் பேசுகிறார்கள். சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் முதலில் சோனியா காந்தி மட்டுமே பங்கேற்பதாக இருந்தது.

    ஆனால் நேற்று பிற்பகலில்தான் ராகுலும் கூட்டத்தில் பங்கேற்க போகும் தகவல் வெளியானது. கடைசி நேரத்தில் ராகுலின் பயணத் திட்டம் திடீரென முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சோனியா- ராகுல் ஆகியோர் இன்று மாலை 4.30 மணிக்கு ஒரே விமானத்தில் சென்னை வருகிறார்கள். கிண்டி நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்பு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    சோனியா - ராகுல் வருகையையொட்டி சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி இன்று காலையிலேயே அண்ணா அறிவாலயம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. டெல்லியில் இருந்து வந்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலை திறக்கப்படும் இடத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதேபோல் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை போலீசாரோடு ஒருங்கிணைந்து டெல்லி அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். விழா முடிந்ததும் இன்று மாலையே சோனியா, ராகுல் ஆகியோர் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.



    முக ஸ்டாலின் திமுக தலைவரான பின்பு டெல்லி சென்று சோனியா, ராகுலை சந்தித்துப் பேசினார். அங்கு நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் கலந்து கொண்டார். தற்போது முக ஸ்டாலின் கூட்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சோனியா, ராகுல் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பின்பு நடப்பதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக தேர்தலை சந்திக்க கூட்டணியை பலப்படுத்தும் கூட்டமாக இது அமையும் என்று திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
    Next Story
    ×