search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதமான வாழைகளை படத்தில் காணலாம்.
    X
    சேதமான வாழைகளை படத்தில் காணலாம்.

    களக்காடு அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம் - 200 வாழைகள் நாசம்

    களக்காடு அருகே காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, கடமான், செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவைகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் களக்காடு அருகே உள்ள கக்கன்நகர் ஊருக்கு மேற்கு பகுதியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் பயிர் செய்துள்ளனர். இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் நடமாட்டம் காணப்படுகிறது.

    இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் காட்டுப்பன்றிகள் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சாய்த்து அவைகளை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயி அருண் என்பவருக்கு 200 வாழைகள் நாசம் அடைந்துள்ளன.

    நாசமான வாழைகள் 3 மாதமான வாழைகள் ஆகும். ரசகதலி, ஏத்தன் கதலி வகைகளை சேர்ந்த வாழைகள் ஆகும். விவசாயிகள் இரவில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    காட்டுப்பன்றிகள் மற்றும் வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    தற்போது களக்காடு மலையில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அவைகளின் அட்டகாசமும் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனை தடுக்க காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.




    Next Story
    ×