search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரம்ஜான் பண்டிகை- முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
    X

    ரம்ஜான் பண்டிகை- முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

    ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்புறக் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalanisamy #Ramadan
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்புறக் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இஸ்லாமியப் பெருமக்கள் இந்த புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து, உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடமும் அன்பு பாராட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்து, இறை சிந்தனையை மனதில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், இறைவனை தொழுது, ரம்ஜான் திருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

    புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கியது, 2600 உலமாக்கள் பயன்பெறும் வகையில் அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிருவாக மானியம் 1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தியது.

    பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களில் பழுது பார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3 கோடி ரூபாய் தொகுப்பு நிதி உருவாக்கியது, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை ஆண்டுதோறும் வழங்குவது, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு நேரடி நியமன முறையில் நிரம்பாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறை நீட்டிக்க அரசாணை வெளியிட்டது.

    மாவட்ட காஜிக்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஆற்றிவரும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு 1.3.2016 முதல் மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டம், போன்ற பல்வேறு நலத்திட்டங்களை இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு மேன்மையுற சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

    இந்த ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், இன்பம் பெருகட்டும், அன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் என்று வாழ்த்தி, என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy #Ramadan
    Next Story
    ×