search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே சேவல் கண்காட்சி: ரூ.1 லட்சத்துக்கு விலை போன சண்டை சேவல்கள்
    X

    திண்டுக்கல் அருகே சேவல் கண்காட்சி: ரூ.1 லட்சத்துக்கு விலை போன சண்டை சேவல்கள்

    திண்டுக்கல் அருகே நடந்த சேவல் கண்காட்சியில் ரூ.1 லட்சத்துக்கு சண்டைச் சேவல் விற்பனையாகியது.

    வடமதுரை:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு திருவிழா நடத்தப்படுவது போல பல கிராமங்களில் சேவல் சண்டையும் நடத்தப்படும். ஆனால் சேவல் சண்டையின் போது அடிக்கடி மோதல்கள் உருவாகி வந்ததால் இதற்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது. இருந்தபோதும் பல கிராமங்களில் சேவல் சண்டை மறைமுகமாக நடத்தப்பட்டு வருகிறது. 

    மேலும் கோவில் திருவிழாக்களிலும், தங்கள் வீட்டு விஷேசத்தின் போதும் இதனை நடத்தி வருகின்றனர். இதற்காகவே பயிற்சி பெற்ற கட்டுச்சேவல் எனப்படும் சண்டை சேவல்களை வளர்த்து வருகின்றனர். இந்த சேவல்கள் சந்தையிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இதற்காக கண்காட்சி நடத்தப்பட்டு சேவல்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    திண்டுக்கல் அருகில் உள்ள சித்துவார்பட்டியில் பாரம்பரிய சேவல்களான கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சேவல்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் பங்கேற்றன. பாரம்பரிய சேவல்களான இவற்றின் மூக்கு கிளி போல இருக்கும். இவற்றின் வால்கள் விசிறி போல நீண்டு காணப்படும். இது போன்ற பாரம்பரிய சேவல்களை காப்பாற்றும் நோக்கில் அமைப்புகள் உருவாக்கப்பட்டு ஆண்டு தோறும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 

    அதன்படி இந்த ஆண்டு சித்துவார்பட்டியில் நடந்த சேவல் கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட கிளி மூக்கு, விசிறி வால், கீரி, கொக்கு வெள்ளை, கருஞ்செவலை, நூலான், மயில் நூலான், மயில் பூதி, பொன்ரம் உள்ளிட்ட பல்வேறு சேவல்கள் பங்கேற்றன.

    இந்த சேவல்களை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர். குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.70 ஆயிரம் வரை சேவல்கள் விற்பனையாகின. விஷேச வகை கிளி மூக்கு சேவல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை விலை போனது. இது போன்ற சேவல்கள் சண்டைக்காகவும் வீட்டில் அழகுக்காகவும் வளர்க்கப்படுவதாக அதனை வாங்கிய நபர்கள் தெரிவித்தனர்.

    கண்காட்சியில் இடம் பெற்ற சேவல்களை காண வந்த பார்வையாளர்கள் சேவல்களில் இத்தனை ரகங்களா? என ஆச்சரியத்துடன் வியந்தனர். இது தவிர முதல் தரத்தில் தேர்வான 5 சேவல்களுக்கு தலா 2 கிராம் தங்க நாணயமும், 2-வது தரத்தில் தேர்வான 20 சேவல்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×