search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் கவர்னர் செயல்பாடு குறித்து முடிவு எடுக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
    X

    புதுவையில் கவர்னர் செயல்பாடு குறித்து முடிவு எடுக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

    புதுவை கவர்னர் மற்றும் அரசாங்கம் இடையே நடந்து வரும் மோதல் குறித்து அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று நாராயணசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்ற அதே நேரத்தில் புதுவையின் புதிய கவர்னராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார்.

    அவர் பதவி ஏற்றதில் இருந்தே தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார். இதனால் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட தொடங்கியது. பின்னர் அரசு திட்டங்கள் பெரும்பாலானவற்றுக்கு தடை போடும் வகையில் கவர்னருடைய செயல்பாடு இருந்தது. இதனால் மோதல் மேலும் அதிகரித்தது. இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக அரசின் பல்வேறு பணிகளும் முடங்கின.

    இந்த நிலையில் கவர்னரின் ஆதரவு அதிகாரியாக செயல்பட்டு வந்த நகராட்சி கமி‌ஷனர் முதலியார்பேட்டை தொகுதியில் தன்னிச்சையாக பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியதையடுத்து அவர் மீது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் உரிமை மீறல் பிரச்சினையை சட்டசபையில் கொண்டு வந்தார்.

    இதையடுத்து அதிகாரி சந்திரசேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார். அதை ஏற்று தலைமை செயலாளர் மனோஜ் பரிதா கமி‌ஷனர் சந்திரசேகரனை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக அதிகாரி கணேசனை கமி‌ஷனராக நியமித்தார். ஆனால் கவர்னர் இந்த உத்தரவை ரத்து செய்தார்.

    சபாநாயகர் உத்தரவை மீறி கவர்னர் நடந்து கொண்டதால் அது சபை உரிமை மீறல் பிரச்சினையாக கருதப்பட்டது. எனவே உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தப்பட்டது.


    இந்த பிரச்சினையால் கவர்னருக்கும், அரசுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதுடன் எந்த பணியும் நடக்காத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அரசியல் ரீதியாகவும் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுசம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டது.

    இதில் பங்கேற்கும்படி 23 அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கூட்டம் ஆனந்தா இன் ஓட்டல் கருத்தரங்க கூடத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.


    முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், எம்.என்.ஆர். பாலன், விஜயவேணி, தனவேலு, தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா, அ.தி.மு.க. நிர்வாகிகள் ரவீந்திரன், பாப்புசாமி.

    தி.மு.க. சார்பில் வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார், தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., காரைக்கால் அமைப்பாளர் நாஜிம், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் விசுவநாதன், நாரா. கலைநாதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் ராஜாங்கம், முருகன், பெருமாள், விடுதலை சிறுத்தைகள் சார்பில் தேவ. பொழிலன், அமுதவன் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், பாரதீய ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    கூட்டத்தில் கவர்னருடைய செயல்பாடுகள் குறித்து என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. பல்வேறு கட்சியினரும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.

    Next Story
    ×