search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 முறை தீர்மானம் முன்மொழிந்ததால் நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது: முன்னாள் சபாநாயகர்கள் கருத்து
    X

    2 முறை தீர்மானம் முன்மொழிந்ததால் நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது: முன்னாள் சபாநாயகர்கள் கருத்து

    தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2 முறை தீர்மானம் முன்மொழிந்ததால் நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என முன்னாள் சபாநாயகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    சட்டசபையில் நேற்று நடந்த சம்பவம், ஓட்டெடுப்பு குறித்து முன்னாள் சபா நாயகர் சேடப்பட்டி முத்தையா கூறியதாவது:-

    சட்டசபையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் விதிமீறல்களாகும். ரகசிய ஓட்டெடுப்பு அல்லது சபையை ஒத்திவைத்து, எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்று வந்ததும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று 4 கட்சிகளும் கேட்ட நிலையில் சபை காவலர்கள் சபைக்குள் வரக்கூடாது. ஆனால் நேற்று சபாநாயகர் அவரது அறையில் இருந்த போது காவலர்கள் சபைக்குள் நுழைந்தது தவறான செயல்.

    உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் சொன்னால் மட்டுமே அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். ஆனால் நேற்று யார் பெயரையும் சபாநாயகர் சொல்லாமல் ஓட்டு மொத்தமாக வெளியேற்றியதும் தவறானது.

    சட்டசபை கூடியதும் முதலில் காலை 11 மணிக்கு ஓட்டெடுப்பு நடத்தும் தீர்மானத்தை முதல்வர் முன் மொழிந்தார். ஆனால் சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகு மீண்டும் வந்து அவர் முன் மொழிந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் இரண்டு முறை முன்மொழிந்தார் என்றால் சபை விதிப்படி அந்த தீர்மானம் நிச்சயமாக செல்லாது எனவே ஓட்டெடுப்பும் செல்லாது.

    சபாநாயகர் தனபால் உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்து சபையை நடத்துவது குறித்து முடிவு எடுப்பது தன்னுடைய அதிகாரம், உரிமை என்று கூறியுள்ளார். இது தவறான கருத்து. சபாநாயகருக்கு என தனியாக எந்த அதிகாரமும் கிடையாது. சபாநாயகருக்கு உறுப்பினர்கள் தான் அதிகாரம் அளிக்கின்றனர்.

    மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்களின் கோரிக்கையின் படியே சபாநாயகர் சபையை நடத்த வேண்டும். அதனால் தான் சபையில் சபாநாயகர் பேசும் போது ‘ உறுப்பினர்களின் முன் அனுமதியுடன்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவார். எனவே சபாநாயகர் நேற்று சபையை நடத்திய விதம் விதிமீறலாகும்.

    பல மாநிலங்களில் ரகசிய ஓட்டெடுப்பு நடந்துள்ளது. அதை பல நீதிமன்ற தீர்ப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. பிரபலமான எஸ்.ஆர் பொம்மை வழக்கின் தீர்ப்பின்படி பார்த்தால் வெளிப்படையான, நியாயமான ஓட்டெடுப்பு நடத்தினால் தான் செல்லும்.

    கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏக்கள் எப்படி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனரோ, அது போல் தான் சட்டசபையிலும் வைக்கப்பட்டனர். இதற்கு சட்டசபைக்கு அவர்களை ஏன்? அழைத்து வர வேண்டும். சபாநாயகர் நேராக கூவத்தூர் விடுதிக்கு சென்று ஓட்டெடுப்பு நடத்தி இருக்கலாம்.

    சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்திய முறை அனைத்தும் சட்ட விதிகளுக்கு முரணானது என்பதால் ஆட்சியை கலைக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான ஆவுடையப்பன் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்றத்தில் நேற்று கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு முறையாக நடத்தவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.

    ஏற்கனவே ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு நபரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளார்கள். இதனால் அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தார்கள் என்பதை சபாநாயகர் உணர்ந்து ரகசிய வாக்கெடுப்பிற்கு அனுமதி அளித்திருக்க வேண்டும். அப்படியில்லாதபட்சத்தில் வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.

    ஆனால் அதற்கெல்லாம் மாறாக சபாநாயகர் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டார். நம்பிக்கை தீர்மானம் தொடர்பான ஓட்டெடுப்பு நியாயமானதாக நடக்கவில்லை. சட்டமன்ற விதிகளின்படி சபாநாயகர் நடுநிலைமையுடன் செயல்படவில்லை. இது ஜனநாயகத்திற்கு சரியானதல்ல. ஏற்கனவே ஒருமுறை தீர்மானம் கொண்டு வந்து பின் 2-வதாக தீர்மானம் முன்மொழிந்ததும் சரியல்ல.

    எதிர்கட்சிகள் இல்லாத போது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்திருப்பதும் முறையானதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் துணை சபாநாயகரும், தி.மு.க துணை பொதுச்செயலாளருமான வி.பி துரைசாமி கூறியதாவது:-

    எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் 2 முறை சட்டசபையை ஒத்திவைத்த பிறகு எதிர்கட்சி உறுப்பினர்களை முழுமையாக வெளியேற்றி விட்டு தீர்மானம் வெற்றி பெற்றதாக பேரவை தலைவர் தீர்ப்பளித்து உள்ளார். சபாநாயகரின் இந்த தீர்ப்பை எதிர்த்து கோர்ட்டை அணுகினால் ஒரு நிமிடத்தில் அந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு விடும். பேரவை விதிகளை முழுமையாக தெரிந்து கொள்ளாத சபாநாயகர் தனபால் தி.மு.க மீது சாதி, பாகுபாடு குறித்து குற்றம்சாட்டி இருக்கிறார். தி.மு.க துணை பொதுச்செயலாளராக நானும், ஏராளமான பொதுக் குழு உறுப்பினர்களும் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறோம்.

    பேரவை தலைவர் தான் சாதி பாகுபாட்டை குறிப்பிட்டு சட்டசபையில் பேசியுள்ளார். இது போன்று பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×