search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபையில் நடைபெற்ற அத்துமீறல் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து
    X

    தமிழக சட்டசபையில் நடைபெற்ற அத்துமீறல் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து

    தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-

    தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தீராத கறையாகும். எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையோடு தி.மு.க. நின்றிருந்தால், இவ்வளவு மனவேதனையும், வெட்கப்படத்தக்க, தி.மு.க.வின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்காது.

    சபாநாயகர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் உரியதாக இல்லவே இல்லை. வெட்கமும், வேதனையும் பட வேண் டிய தலைகுனிவான நிலை.

    நடந்தவைகள் நடந்தவைகளாகட்டும் - இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக நடக்கட்டும் என்று அண்ணா கூறிய கருத்தை நினைவூட்டுகிறோம்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தமிழக சட்டசபையின் மாண்புகளையும், ஜனநாயக நெறிமுறைகளையும் காவு கொடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான சசிகலா பினாமி அரசு வெற்றி பெற்றிருக்கிறது. தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக இருந்து சட்டப்பேரவைத் தலைவரும், நியாயவாதிகளாக காட்டிக்கொள்வதற்காக தி.மு.க.வினரும் அரங்கேற்றிய ஜனநாயகப் படுகொலைகள் கண்டிக்கத்தக்கவை. இந்த இருகட்சிகளின் வன்முறையால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்றிருப்பதை தமிழக மக்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.

    மொத்தத்தில் தமிழக சட்டப்பேரவை மாண்பும், ஜனநாயகமும் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்டவர்களை தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்தமைக்காக தமிழ்நாட்டு மக்கள் வருத்தப்பட வேண்டும். தேர்தலின் போது பணத்திற்கு ஆசைப்பட்டு தவறானவர்களுக்கு வாக்களித்ததன் தீய விளைவுகளை ஒட்டுமொத்த தமிழகமும் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

    பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    சட்டசபையில் வாக்கெடுப்பு நடந்தது என்று சொல்வதைவிட நடத்தப்பட்டு, வெற்றி பெற்றிருக்கிறது. தற்போதைய அமைச்சரவை எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளால் வெற்றி பெற்றார்களா? இல்லை எதிர்க்கட்சியினரை தாக்கியதால் வெற்றி பெற்றார்களா? சட்ட சபையா? சட்டையை கிழித்த சபையா?

    வாக்குகளால் வெற்றியா? வாங்கப்பட்டதால் வெற்றியா? எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக சிந்தித்தார்களா? தந்திரமாக சிந்திக்க வைக்கப்பட்டார்களா? கூவத்தூரில் கூட்டி வைக்கப்பட்டதன் காரணம் என்ன? எதிர்க்கட்சி ரகசிய வாக்கெடுப்பு கேட்டார்கள். ஆனால், சபாநாயகர் எதிர்க்கட்சியை வெளியேற்றிவிட்டு ரகசியமாக வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கிறார்.

    தமிழ்நாட்டை ஆள்பவர்கள் காப்பாற்றுகிறார்களா? ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:-

    சட்டசபையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையொட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர அனைத்து பகுதியினரும் ஒத்துழைக்க வேண்டும்.

    நடைபெறும் நிகழ்வுகள் தமிழகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் தலைகுனிவை ஏற்படுத்தக்கூடியது.

    பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.:-

    சட்டசபை கூடியதில் இருந்து தி.மு.க. நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது வன்முறைகள் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என்பதை உணரமுடிகிறது. தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன், தி.மு.க.வை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    சட்டசபையில் நடந்தேறிய விரும்பத்தகாத நிகழ்வுகள் யாவும் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தி உள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. உறுப்பினர்களால் சபாநாயகருக்கும், அவை காவலர்களால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் சட்டைகள் கிழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வேதனைக்குரிய இந்த அவலத்தை வன்மையாக கண்டிக்கிறோம். களேபரங்களுக்கு இடையே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கிறார். எனினும் கவர்னரால் இந்த வெற்றி ஏற்கப்படுமா? சட்டப்படி இது செல்லுமா? என்பது கேள்விக்குறியே.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    சட்டசபையில் ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறி இருக்கிறது. மக்கள் மன்றத்தை நாடி, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே சரியான தீர்வாக இருக்கும். சட்டசபையில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு கவர்னர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார்:-

    சட்டசபையில் இன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கண்டனத்துக்கு உரியது. எதிர்க்கட்சியினர் சபாநாயகரை தாக்கி அவரது இருக்கையில் அமர்ந்து, அநாகரிகமாக நடந்து கொண்டது தவறு என்றாலும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சட்டசபையில் தாக்கி இருப்பதும் கண்டனத்துக்குரியது.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-

    நம்பிக்கை வாக்கெடுப்பை இன்னொரு நாளில் ஒத்திவைத்திருந்தால் விரும்பதாக நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாம். மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. தலைவர்கள் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வரம்பு மீறிய செயலில் ஈடுபட்ட சபை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்:-

    சபாநாயகரின் தவறான அணுகுமுறையால் மீண்டும் ஒரு ஜனநாயக படுகொலைக்கு சட்டசபை சாட்சியாக திகழ்ந்திருக்கிறது. எந்த நிலையிலும் மன்னார்குடி குடும்பத்தின் ஆட்சி நீடிக்கலாகாது என்பதே தமிழகத்து மக்களின் அழுத்தமான கருத்தாகும். மக்கள் விருப்பத்தை மனதில் நிறுத்தி சட்டம்-ஒழுங்கை காக்கவும் ஜனநாயக படுகொலையை தடுக்கவும் கவர்னர் இந்த ஆட்சியை கலைக்க அரசியல் அமைப்பு சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்த ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கவேண்டும்.

    இதே போன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், ஐக்கிய ஜனதாதளம்(தமிழ்நாடு) மாநில தலைமை பொதுச்செயலாளர் டி.ராஜகோபால், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் காஜா மொய்தீன், மக்கள் மாநாடு கட்சி தலைவர் க.சக்திவேல், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் சம்சுதீன் உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×