search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் லாட்ஜ் அதிபர் வீட்டில் 37 பவுன் நகை, ரூ.1½ லட்சம் பணம் திருட்டு
    X

    கோவையில் லாட்ஜ் அதிபர் வீட்டில் 37 பவுன் நகை, ரூ.1½ லட்சம் பணம் திருட்டு

    கோவையில் லாட்ஜ் அதிபர் வீட்டில் 37 பவுன் நகை, ரூ.1½ லட்சம் பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்தவர் யூனுஸ் (வயது 48). இவர் மரக்கடை என்.எச்.ரோட்டில் லாட்ஜ் நடத்தி வருகிறார்.

    இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் யூனுஸ் குடும்பத்துடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார்.

    நேற்று இரவு அவர் மட்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோக்கள் திறந்து கிடந்தது. அதில் இருந்த 37 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கப்பணம், விலை உயர்ந்த வாட்சுகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் பெரிய கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு உதவி கமி‌ஷனர் ஜனார்த்தனன், இன்ஸ்பெக் டர் முருகாசலம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் மொட்டை மாடி கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் பீரோக்களில் இருந்த நகை மற்றும் பணம், விலையுயர்ந்த 3 வாட்சுகளை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. பீரோவில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்களை நாற் காலியில் எடுத்து வைத்து விட்டு மர்மநபர்கள் பணம், நகையை மட்டும் திருடி சென்றுள்ளனர்.

    சம்பவஇடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. யூனுசின் மகளுக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக நகை வாங்குவதற்காக பணத்தை சேர்த்து வைத்திருந்தாராம். அந்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    வீட்டில் ஆள் இல்லாததை அறிந்தே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என விசாரணை நடந்து வருகிறது. மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை அந்த பகுதியை சேர்ந்த பழைய கொள்ளையர்களின் கைரே கைகளுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள பேராசிரியர் வீட்டில் நடந்த 60 பவுன் நகை திருட்டு சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    இந்தநிலையில் லாட்ஜ் அதிபர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×