search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு: ராமமோகனராவ் மீது நடவடிக்கை பாயுமா?
    X

    வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு: ராமமோகனராவ் மீது நடவடிக்கை பாயுமா?

    முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அதிகாரிகளின் ஆலோசனையை பெற வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் கடந்த 21-ந்தேதி வருமான வரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் புகுந்தும் வருமான வரி துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் கோட்டை வளாகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    ராமமோகன ராவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில், அவரது மகன் விவேக் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது. மொத் தம் 14 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையின்போது கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகளும், கிலோ கணக்கில் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. 100 கோடிக்கும் மேல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ராமமோகனராவ் மீது அடுத்தடுத்த நடவடிக்கைகள் உடனடியாக பாயும் என்றும் சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார் என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில் ராம மோகனராவ் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ராமமோகன ராவிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் பத்திரிகையாளர்கள் காத்து இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், நேற்று காலையில் ராம மோகனராவ் தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது அதிரடியாக பேட்டி அளித்த அவர், மத்திய அரசையும் கடுமையாக சாடினார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல் படியே தான் செயல்பட்டதாகவும் அவர் உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற சோதனை நடந்திருக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

    தமிழகத்தின் தலைமை செயலாளராக நானே நீடிக்கிறேன் என்று கூறிய ராம மோகனராவ், தலைமை செயலகத்தினுள் எனது அறையில் மத்திய பாதுகாப்பு படையினரோடு வருமான வரி துறையினர் நுழைவதற்கு தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி அளித்தாரா? யாருடைய அனுமதியை பெற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும், சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    எனது வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் பணமும், 50 பவுன் நகையும் மட்டுமே எடுத்துச் செல்லப்பட்டது. துப்பாக்கி முனையில் நான் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

    ராமமோகன ராவின் இந்த பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர். ராமமோகனராவ் கூறி இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசுதான் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    தமிழக பா.ஜனதா தலைவர்களும் ராமமோகனராவை கடுமையாக சாடி உள்ளனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்.பி., எச்.ராஜா உள்ளிட்டோர், ராமமோகனராவின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி இருப்பதுடன், பிரச்சினையை திசை திருப்ப அவர் முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.

    அதே நேரத்தில் ராம மோகனராவின் புகாருக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எந்த கருத்தும் கூறாமலேயே மவுனம் காத்து வருகிறார். இது அவருக்கு நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது.

    இப்படி ராமமோகன ராவின் பேட்டியால் தமிழக அரசு வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் புதிய பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியதும் ராம மோகனராவ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றே வருமான வரி அதிகாரிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் அதற்கு மாறாக பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்ததுடன், பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியது வருமான வரி துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து ராமமோகன ராவ் விவகாரத்தில் அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார்கள். வருமான வரி சட்டம் 132-ன் படி, வருமான வரி துறை இயக்குனராக இருப்பவர், எந்த ஒரு இடத்தில் புகுந்தும் சோதனை நடத்தலாம் என்கிற அதிகாரம் படைத்தவராவார். அதன்படியே தலைமை செயலகத்தில் புகுந்து சோதனை நடத்தப்பட்டது என்று விளக்கப்பட்டுள்ளது.

    வருமான வரிச் சட்டம் 132(2)-ன்படி, சோதனை நடத்தும் அதிகாரிகள் தங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம், அது மாநில போலீசையோ, அல்லது மத்திய பாதுகாப்பு படையையோ, பாதுகாப்புக்காக அமர்த்திக்கொள்ளலாம் அல்லது இவர்கள் இருவரையுமே பாதுகாப்பு பணிக்காக வரவழைத்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் வருமான வரி துறையினர் கூறியுள்ளனர்.

    ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் சூழல் பற்றியும், ராமமோகன ராவின் குற்றச்சாட்டுகள் குறித்தும் தமிழகத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தங்களது உயர் அதிகாரிகளுக்கு முறைப்படி தெரியப்படுத்தி உள்ளனர்.

    டெல்லி அதிகாரிகளின் ஆலோசனையை பெற்று அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வருமான வரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    ராமமோகனராவின் மகன் விவேக் வீட்டில் சோதனை நடத்த கோர்ட்டு மூலமாக வாரண்டு பெற்றிருந்தோம். ஒருவரது வீட்டில் சோதனை நடத்த வாரண்டு வாங்கினால், அதனை வைத்து அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

    இந்த அடிப்படையிலேயே விவேக்கின் தந்தையான ராம மோகனராவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது என்பதும் வருமான வரி துறையினரின் வாதமாக உள்ளது.

    இந்த வழியிலேயே சென்று, ராமமோகனராவ் மீதான அடுத்த கட்ட நடவடிக்கையும் பாயும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் வருமான வரித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அடுத்தடுத்த நாட்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது சாட்டையை இன்னும் வேகமாக சுழற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

    இதன் மூலம் ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் மீதான பிடி மேலும் இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×