என் மலர்

  செய்திகள்

  இன்றும் நாளையும் வங்கிகள் விடுமுறை: ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு
  X

  இன்றும் நாளையும் வங்கிகள் விடுமுறை: ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் இன்றும் நாளையும் இயங்காததால் ஏ.டி.எம்.களில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
  சென்னை:

  மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் நாடு முழுவதும் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

  வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பழைய நோட்டை மாற்றவும், பணத்தை எடுக்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

  வங்கிகளில் காலையிலையே வரிசையில் காத்து கிடக்கின்றனர். ஏ.டி.எம். மையங்கள் இன்னும் முழுமையாக செயல்படவில்லை. ஒரு சில ஏ.டி.எம்.கள் செயல்பட்டாலும் அங்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

  ஏ.டி.எம்.களிலும் பணம் உடனே தீர்ந்து விடுகின்றன. இதனால் வங்கிகளிலும் ஏ.டி.எம் மையங்களிலும் கூட்டம் குறையவில்லை.

  புதிய ரூ.2000 நோட்டுகள் மட்டுமே வினியோகிக்கப்படுவதால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.

  மளிகை கடை, ஓட்டல், சூப்பர் மார்க்கெட், இறைச்சி கடை, காய்கறி கடைகளில் புதிய நோட்டிற்கு சில்லரை கொடுக்க மறுப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிந்த போதிலும் அதற்கு முன்னதாகவே வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

  ரிசர்வ் வங்கியில் இருந்து அனைத்து வங்கிகளுக்கும் புதிய ரூ.2000 நோட்டு குறைந்த அளவில் வினியோகிக்கப்படுகிறது.

  தேவையான அளவுக்கு பணம் வராததால் வாடிக்கையாளர்கள் கேட்ட பணத்தை வங்கிகளில் கொடுக்க முடியவில்லை. ஒருவர் வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் வங்கியில் இருந்து பெறலாம் என்று அறிவித்து இருந்த போதும் அந்த தொகையினை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

  நாள் கணக்கில் காத்து கிடந்த மக்களுக்கு ரூ.4000, ரூ.5000 என குறைந்த அளவிலேயே பணம் கொடுக்கப்படுகிறது. இதனால் சாதாரண அடித்தட்டு மக்கள் அவசர தேவைக்கு பணம் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.

  வங்கிகளில் ஏற்பட்ட பணபற்றாக்குறை படிப்படியாக அதிகரித்து நேற்று முதல் பணபட்டுவாடா ஒரு சில வங்கிகளில் நிறுத்தப்பட்டது. பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் காத்து கிடந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

  பணம் கிடைக்காத விரக்தியில் பல இடங்களில் வங்கி ஊழியர்களுடன் பொதுமக்கள் மோதல் போக்கிலும் ஈடுபட்டனர். இதனால் பாங்கியின் கதவுகளை மூடிவிட்டனர்.

  இந்த நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டு வினியோகிக்கப்பட்டால் இந்த சில்லரை தட்டுப்பாடு, பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீரும் என்று வங்கி அதிகாரிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.

  ஆனால் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டுமே புதிய ரூ.500 நோட்டு வினியோகிக்கப்பட்டதால் புழக்கத்திற்கு முழுமையாக வரவில்லை. ஒருசில ஏ.டி.எம்.களில் மட்டுமே புதிய நோட்டு கிடைத்தது.

  ரூ.300 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு நேற்று விமானம் மூலம் வந்துள்ளது. இதன் மூலம் பணத்தட்டுப் பாட்டை சமாளிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

  வங்கிகளில் நிலவி வரும் பணத்தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இன்றும், நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

  தற்போது வங்கிகளில் மட்டுமே பணம் மாற்றவும், எடுக்கவும் முடியும். வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் வங்கிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.

  பணப்புழக்கம் இயல்பான நிலைக்கு வராத நிலையில் வங்கிகள் மூடப்பட்டதால் பணப்பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை போன்றவை அடியோடு முடங்கியது.

  இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் வங்கிகளை செயல்படாமல் முடக்குவது சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல் என்று வாடிக்கையாளர்கள் மனம் குமுறுகிறார்கள்.

  வங்கிகள் மூடப்பட்டதால் அதனுடன் இணைந்த ஏ.டி.எம். மையங்களின் சேவைகளும் முடங்கின. ஏற்கனவே 90 சதவீத ஏ.டி.எம். மையங்கள் செயல்படவில்லை.

  ஸ்டேட் வங்கி மற்றும் ஒரு சில தனியார் வங்கி ஏ.டி.எம்.கள் மட்டும் இன்று செயல்பட்டன. ஏதாவது ஒரு ஏ.டி.எம்.மில் பணம் இருப்பது தெரிந்தால் அந்த வழியாக செல்லக்கூடியவர்கள் அங்கு குவிந்து விடுகின்றனர்.

  இதனால் நீண்ட வரிசை உடனே உருவாகி விடுகிறது. இது போன்ற காட்சிதான் கடந்த சில நாட்களாக சென்னையில் நிலவுகிறது.

  2 நாட்கள் வங்கி மூடப்பட்டதால் சிறு வியாபாரிகளும், தொழில் நிறுவனங்களும், வர்த்தக பிரமுகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பணம் டெபாசிட் மட்டுமின்றி கோடிக்கணக்கான காசோலை பரிவர்த்தனையும் முடங்கியது.

  இந்த 2 நாட்களில் ஏற்படும் பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அளவிற்கு திங்கட்கிழமை பணம் வினியோகம் செய்யப்பட வேண்டும். அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் பணத்தை அனுப்ப வேண்டும். திங்கட்கிழமை காலையில் ஊழியர்கள் பணிக்கு வந்து அதன் பிறகு பணம் எடுக்க சென்றால் மதியத்திற்கு பிறகுதான் பணம் கிடைக்கும்.

  அதனால் பொதுமக்களின் நலனை கருதி திங்கட்கிழமை காலையில் தேவையான அளவிற்கு பணம் வினியோகிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
  Next Story
  ×