search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ரெயிலில் கொள்ளை: 2 மாதமாகியும் துப்பு துலங்கவில்லை - சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறல்
    X

    சென்னை ரெயிலில் கொள்ளை: 2 மாதமாகியும் துப்பு துலங்கவில்லை - சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறல்

    சென்னை ரெயிலில் ரூ.5¾ கோடி பணம் கொள்ளை வழக்கில் சிறிய துப்பு கூட கிடைக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை ரெயிலில் ரூ.5¾ கோடி பணம் கொள்ளை வழக்கில் சிறிய துப்பு கூட கிடைக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர். சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகியும் கொள்ளையர்களை நெருங்க முடியவில்லை.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலை வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரிசர்வ் வங்கி பணம் ரூ.5¾ கோடி கொள்ளை போய் இருந்தது. ரெயில் பெட்டியின் மேற்கூரை உடைக்கப்பட்டு இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடைபெற்றது. ‘தி கிரேட் டிரெயின் ராபரி’ என்று இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த கொள்ளை வழக்கை ரெயில்வே போலீசார் முதலில் கையில் எடுத்து விசாரித்தனர். ஆனால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. பின்னர் இந்த வழக்கு தமிழக போலீசார் கையில் மாறியது. அதன்பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று சேலம், விருத்தாசலம், விழுப்புரம், சென்னை உள்பட இடங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடைபெற்ற ரெயில் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர், கார்டு, பணப்பெட்டியுடன் பாதுகாப்புக்கு சென்ற போலீசார், பார்சல் நிறுவன ஊழியர்கள், ரிசர்வ் வங்கி ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் பலமுறை விசாரணை நடந்து முடிந்துள்ளது.

    ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கொள்ளை சம்பவம் குறித்து இதுவரையில் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இதனால் சம்பவம் நடந்து 2 மாதங்களாகியும் கொள்ளையர்களை நெருங்க முடியவில்லை.

    சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோண விசாரணை நடத்தியும், கொள்ளை வழக்கில் மர்மம் நீடிக்கிறது.
    Next Story
    ×