search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: ஆந்திரா செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தம்
    X

    முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: ஆந்திரா செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தம்

    மாநில சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
    வேலூர்:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அங்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் அரசு பஸ்கள் எல்லை வரை மட்டுமே சென்றன. அங்கிருந்து ஆந்திராவுக்கு செல்லவில்லை.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம், கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்கு 71 அரசு பஸ்களும், திருவள்ளூர், திருத்தணி வழியாக 35 பஸ்களும் செல்கின்றன.

    திருப்பதி, காளகஸ்தி, நெல்லூர், சத்தியவேடு நாயுடுபேட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

    பந்த் காரணமாக அனைத்து பஸ்களும் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய எல்லைகள் வரை இயக்கப்பட்டன.

    இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக திருப்பதி கோவிலக்கு சென்ற பக்தர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். நடுவழியில் இறக்கி விடப்பட்டதால் வேறு வாகனம் ஏதாவது கிடைக்குமா? என்று அங்கேயே காத்து கிடந்தனர்.

    வேலூரில் இருந்து சித்தூர், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை.

    வேலூர் - திருப்பதி இடையே இயக்கப்படும் 55 ஆந்திர மாநில அரசு பஸ்கள் சித்தூர், திருப்பதி ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டன. தமிழக அரசு பஸ்கள் வேலூரில் நிறுத்தப்பட்டன.

    வெளியூர்களில் இருந்து திருப்பதி வந்த தமிழக பக்தர்கள் வேலூர் பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இதனால் பயணிகள் தவித்தனர். பின்னர் ரெயில் மூலம் திருப்பதி செல்ல முடிவு செய்து காட்பாடிக்கு புறப்பட்டு சென்றனர்.
    இதேபோல வேலூரில் இருந்து சித்தூர், திருப்பதி செல்லும் 32 தனியார் பஸ்களும் இன்று இயக்கப்படவில்லை.

    திருப்பதிக்கு பஸ்கள் ஓடாததால் வேலூர் பஸ் நிலையத்தில் திருப்பதி மார்க்கம் பகுதி வெறிச்சோடி கிடந்தது.

    ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் ரெயில்கள் வழக்கம் போல ஓடின. இதனால் காட்பாடி, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    Next Story
    ×