என் மலர்

  செய்திகள்

  மனித நேயம் மறையவில்லை- தலையங்கம்
  X

  மனித நேயம் மறையவில்லை- தலையங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள 8 முஸ்லிம் இளைஞர்கள் ஒரு பெண்ணுக்கு செய்த உதவி நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. மனித நேயம் மடிந்து விடவில்லை என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த அந்த இளைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
  சென்னை:

  காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2 மாதமாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாடெங்கும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வன்முறைக்கு பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

  பாதுகாப்புப்படையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் இளைஞர்களைப் பார்க்கும் போது, அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் என்ன விரோதம் இருக்க முடியும் என்று சிந்திக்க தோன்றுகிறது. இது தொடர்பான விசாரணைகள், விவாதங்கள் முடிவில் காஷ்மீர் இளைஞர்களை பிரிவினைவாதிகள் அழிவுப்பாதைக்கு அழைத்து செல்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிய வந்துள்ளது,

  அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்தும், பண ஆசை காட்டியும் பிரிவினை வாதிகள் வன்முறையை தினம், தினம் அரங்கேற்றி வருகிறார்கள். முதல்-மந்திரி மெகபூபா நேற்று இது தொடர்பாக ஒரு விழாவில் பேசுகையில், “ஐம்மு - காஷ்மீர் இளைஞர்களின் வாழ்க்கையை பிரிவினைவாதிகள் கெடுக்கின்றனர் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

  அவர் மேலும் கூறுகையில், பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்ல வேண்டிய வயதில் நமது இளைஞர்களும், சிறுவர்களும் தெருக்களில் கற்களுடன் திரிகிறார்கள். அவர்கள் கைகளில் பணம் புழங்குகிறது. அவர்களை தவறான பாதைக்கு பிரிவினைவாத தலைவர்கள் அழைத்து செல்கிறார்கள்.

  இதே பிரிவினைவாத தலைவர்கள் தங்கள் மகன்கள், மகள்களை வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் அதிக பணம் செலவு செய்து படிக்க வைக்கிறார்கள். ஆனால் நடுத்தர, ஏழை மக்களின் குழந்தைகளை போராட வாருங்கள் என்று அழைக்கிறார்கள். இது என்ன நியாயம்?” என்றார்.

  காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபாவே இப்படி சொல்லி வருந்துகிறார். இதன் மூலம் காஷ்மீர் இளைஞர்கள், அழிவுப்பாதையில் இருந்து ஆக்கப்பூர்வமான பாதைக்கு எப்போது திரும்புவார்கள் என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மக்களிடம் நிலவுகிறது.

  இந்த நிலையில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள 8 முஸ்லிம் இளைஞர்கள் ஒரு பெண்ணுக்கு செய்த உதவி நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. மனித நேயம் மடிந்து விடவில்லை என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த அந்த இளைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  மராட்டிய நகரில் உள்ள கவுசா பகுதியில் வசித்து வந்த வாமன் கதம் (65). இவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

  அவருக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை. இந்த காரணத்தால், இறுதிச்சடங்கு செய்வதற்கு உதவி கிடைக்காமல் அவரது மனைவி தடுமாறினார். செய்வதறியாமல் தவித்து நின்றார்.

  இதை அறிந்த மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் 8 பேர் தாமாக முன் வந்து இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

  மூங்கில் கழி, மண் பானைகள் அகர்பத்திகள், ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கி வந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் இறுதிச் சடங்கை அவர்கள் செய்தனர்.

  மனித நேயத்துக்கு எடுத்து காட்டாக விளங்கிய அந்த இளைஞர்களை மும்ப்ரா பகுதிவாசிகள் பாராட்டினர். மும்ப்ராவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதற்கிடையே மும்ப்ரா-கல்வா தொகுதி எம்.எல்.ஏ.வான ஜிதேந்திர அவாத், அந்த இளைஞர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக சமூக வலை தளமான முகநூலில் (பேஸ்புக்) குறிப்பிட்டுள்ளார். அது போல நிறைய பேர் பாராட்டுகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

  வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா என்று சொல்வார்கள். அதை 8 இஸ்லாமிய இளைஞர்கள் நிரூபித்து காட்டி இருப்பது பெருமையாக உள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நேசம், தேசம் எங்கும் பரவ வேண்டும்.
  Next Story
  ×