search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி ராமகிருஷ்ணன்
    X
    ஜி ராமகிருஷ்ணன்

    தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்- ஜி ராமகிருஷ்ணன்

    தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன். பிரசாரம் செய்த இடங்களிலெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன். பிரசாரம் செய்த இடங்களிலெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.

    கன்னியாகுமரியில் உள்ள 6 சட்டசபை மற்றும் பாராளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். சிவகங்கை மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி மக்கள் நலனுக்காக செயல்படும் கூட்டணி என்று பேசியுள்ளார்.

    மத்தியில் பாரதிய ஜனதா 7 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி உள்ளது. மாநிலத்தில் அ.தி.மு.க. 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. இரண்டு அரசுகளும் மக்கள் நலனை பாதுகாக்க தவறி விட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்று கூறி வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் சட்டத்தை ஆதரிப்பது வருத்தமளிக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராடிய 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சாத்தான்குளத்தில் தந்தை-மகனை போலீஸ் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்தனர். அ.தி.மு.க. ஆட்சியின் சட்டம்-ஒழுங்கிற்கு இது எடுத்துக்காட்டாகும்.

    அ.தி.மு.க.வினர் விளம்பரத்தில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்று கூறுகிறார்கள். பெண்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு பிரச்சனைகள் உள்ளது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரியே பாலியல் புகார் தெரிவித்தார். பொள்ளாச்சி சம்பவங்கள் போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது.

    பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தவறிவிட்டது. சமையல் கியாஸ் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டுமே 3 முறை கியாஸ்-பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகள் மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது.

    மக்களை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. மத்திய அரசின் எடுபிடி அரசாக அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் பாரதீய ஜனதா, அ.தி.மு.க.விற்கு எதிராக மக்கள் உள்ளனர். எனவே வருகின்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது, அனைவரும் கண்ணியமாக பேசவேண்டும் என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி, முதலமைச்சர் என யாரை விமர்சனம் செய்தாலும் கண்ணியத்துடன் பேச வேண்டும். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க அணிகளுக்கிடையிலான போட்டியில் தி.மு.க. வெற்றி பெறும்.

    மதத்தை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது தற்போது வெளியாகும் கருத்து கணிப்புகளில் தி.மு.க. வெற்றிபெறும் என்று முடிவு வந்து கொண்டிருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×