search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளச்சேரி தொகுதி
    X
    வேளச்சேரி தொகுதி

    வேளச்சேரி தொகுதி கண்ணோட்டம்

    அ.தி.மு.க.சார்பில் எம்.கே. அசோக், காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஹெச். ஹாசன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    சொத்து மதிப்பு

    எம்.கே. அசோக்

    1. கையிருப்பு- 2,32,000
    2. அசையும் சொத்து- ரூ. 1,70,17,013.17
    3. அசையா சொத்து- ரூ. 1,43,60,000

    ஒருகாலத்தில் வயல்வெளிகளும், நீர் நிலைகளும் சூழ சென்னையின் புறநகர் பகுதியாக இருந்தது வேளச்சேரி.

    காலப்போக்கில் அதன் வளர்ச்சி அண்ணாந்து பார்க்க வைத்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், பொழுது போக்கு இடங்கள், தொழில்நிறுவனங்கள் என்று இந்த பகுதி மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது.

    வேளச்சேரி தொகுதி

    தொகுதி மறு சீரமைப்பின்போது அடையாறு கிழக்கு, அடையாறு மேற்கு, வேளச்சேரி, தரமணி, பெசன்ட்நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி சென்னை மாநகராட்சியின் வார்டுகள் 151 முதல் 155 வரையிலான பகுதிகளை இணைத்து வேளச்சேரி சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.

    2011-ல் முதல் தேர்தலை இந்த தொகுதி சந்தித்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தொகுதி வரலாற்றில் முதல் பதிவை பதிவு செய்தது.

    இந்த தொகுதி முழுவதும் அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைந்துள்ளன. நன்கு வளர்ச்சி அடைந்த பிறகும் மழை தண்ணீர், கழிவுநீர் ஆகியவை வடிந்து செல் வதற்கான வழிமுறைகள் செய்யப்படவில்லை என்பது இந்த தொகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

    வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான் இங்கு அதிகளவில் வசிக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக உள்ளனர்.

    இந்த தொகுதிவாசிகள் என்று சொன்னால் தாழ்த்தப்பட்டவர்கள், நாயக்கர்கள் அதிகமாக உள்ளனர். கிராமணி, முதலியார், பிராம ணர்கள், கிறஸ்தவர்கள் ஆகிய சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர்.

    வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தாலும் சமூக ரீதியாகவும் வாக்குகள் கிடைத்து வருகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. இன்னும் சில இடங்களில் குடிநீர் இணைப்புகளும் கழிவுநீர் இணைப்புகளும் வழங்கப்படாமல் உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்பது தொகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.

    முக்கியமாக மழைக்காலம் வந்தால் பல தெருக்கள் தண்ணீரில் மிதக்கும். இது ஆண்டுதோறும் சந்திக்கும் பிரச்சினையாகி விட்டது. இதை நிரந்தரமாக தீர்ப்பதற்கான வழிமுறைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
    வேளச்சேரியின் அடையாளங்களாக இருப்பவை வேளச்சேரி ஏரி, ஆசியாவிலேயே மிகப்பெரிய ஷாப்பிங்மாலான ‘பீனிக்ஸ் மால்’, வேளச்சேரி பறக்கும் ரெயில்.

    கடற்கரையில் இருந்து மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி வழியாக பரங்கி மலையை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பறக்கும் ரெயில் திட்டத்தில் தற்போது வேளச்சேரி வரை ரெயில் இயக்கப்படுகிறது.

    வேளச்சேரியில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வழித்தடம் சுமார் 4 கி.மீட்டர்தான். ஆனால் பல ஆண்டுகளாக இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதையும் விரைந்து முடிக்க வேண் டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்புகளாலும், கழிவுநீர் கலப்பதாலும் மாசுபட்டு கிடக்கிறது. இந்த ஏரியை நன்றாக பராமரித்து பொழுது போக்கு இடமாக மாற்ற வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் கோரிக்கை.

    விஜயநகர் பஸ் நிலையம், 200 அடிரோடு, மேடவாக்கம் ரோடு, தரமணி ரோடு ஆகியவற்றை இணைக்கும் வகையில் பிரமாண்டமான மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியும் மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. இதை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.

    பீனிக்ஸ் மால் அமைந்துள்ள பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. எனவே தினமும் நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகக்கடுமையாக இருக்கிறது. எனவே அந்த பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண் டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கை.

    வேளச்சேரி தொகுதி

    அதேபோல் தரமணி, அம்பேத்கர் சட்டக் கல்லூரி அருகில் இருந்து தரமணி ரெயில் நிலையம், பெருங்குடி ரெயில் நிலையம் வழியாக வேளச்சேரி ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 200 அடி சாலை அமைக்கப்படுகிறது. இந்த வழித் தடத்தில் ஒரு கால்வாயின் மீது பாலம் அமைக்கும் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை பொது மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த சாலை அமைந்தால், விஜயநகர் பஸ் நிலைய பகுதியில் ஏற்படும் நெரிசல் பெருமளவு குறையும்.

    ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு கேட்டு வருபவர்கள் மழை நீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து வருவதாகவும் ஆனால் இதுவரை அந்த பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை என்றும் பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    மேலும் நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிப்பு, பல இடங்களுக்கு போலி பட்டாக்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளால் கண்டு கொள்ளப்படவில்லை என்பதும் பொதுமக்களின் குற்றச்சாட்டு. சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு, வேளச்சேரி பகுதியை அவலச்சேரி பகுதியாக உருமாற்றி உள்ளது. எனவே இரண்டு தொகுதிகளுக்கும் இடையூறாக இருக்கும் பெருங்குடி குப்பைக்கிடங்கை மாற்ற வேண்டும். அல்லது மாற்று வழி தேட வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் எம்.கே. அசோக் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஹெச். ஹாசன் களம் காண்கிறார்.

    2011 எம்.கே. அசோக் (அ.தி.மு.க.)
    2016 வாகை சந்திரசேகர் (தி.மு.க.)

    வாக்காளர்கள்

    மொத்தம்-  3,13,761
    ஆண்கள் -  1,55,197
    பெண்கள் -  1,58,473
    3- ம் பாலினம்-  91
    Next Story
    ×