search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலைப்பேட்டை தொகுதி
    X
    உடுமலைப்பேட்டை தொகுதி

    அதிமுக- காங்கிரஸ் மோதும் உடுமலைப்பேட்டை தொகுதி கண்ணோட்டம்

    அமைச்சர் உடுமலை ராதாகிருஷண்ன் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட, காங்கிரஸ் சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார்கள்.
    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மற்றொரு முக்கியத் தொகுதி உடுமலைப்பேட்டை. தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 125-வது இடத்தில் உள்ள தொகுதி. இத்தொகுதிக்குட்பட்ட உடுமலைப்பேட்டை நகராட்சி, நூற்றாண்டு பழமை வாய்ந்த நகராட்சி ஆகும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை, காற்றாலை, பஞ்சாலைகள், தென்னை நார் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இத்தொகுதி உள்ளது.

    அனைத்து சமூக மக்களும் இத்தொகுதியில் உள்ளனர். தெலுங்கு பேசும் மக்களும் அதிகளவில் இத்தொகுதியில் வசிக்கின்றனர். இத்தொகுதியில் மொத்தம் உள்ள மக்கள் தொகையில், கொங்கு வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் 25.38 சதவீதமும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் 17.5 சதவீதமும், கம்மவார் நாயுடு இனத்தை சேர்ந்தவர்கள் 9.62 சதவீதமும், 24, 12 பிரிவு செட்டியார்கள் இன மக்கள் 4.5 சதவீதம் பேரும், இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் 11.34 சதவீதம் பேரும் வசிக்கன்றனர்.

    உடுமலைப்பேட்டை தொகுதியில், 33 வார்டுகளை உள்ளடக்கிய உடுமலைப்பேட்டை நகராட்சி முழுமையாக வருகிறது. உடுமலைப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகள் இருந்தாலும், சின்ன வீரம்பட்டி, பெரிய கோட்டை, குறிஞ்சேரி ஆகிய 3 ஊராட்சிகள் மட்டுமே, உடுமலை சட்டப்பேரவையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

    அதேபோல், உடுமலை தாலுக்காவுக்குட்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, ஆமந்தக்கடவு, குப்பம்பாளையம், பெரியபட்டி, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, குடிமங்கலம், இலுப்பநகரம், அனிக்கடவு, வாகத்தொழுவு, வீதம்பட்டி, விருகல்பட்டி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம், தொட்டம்பட்டி, கொங்கல்நகரம், புதுப்பாளையம், பண்ணைக்கிணர் உள்ளிட்ட 23 ஊராட்சிகளும் இத்தொகுதியில் வருகின்றன.

    பொள்ளாச்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோளபாளையம், நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், எஸ்..மலையாண்டிபட்டினம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரபாளையம், கூலநாய்க்கன்பட்டி, கோமங்கலம்புதூர், சிஞ்சுவாடி, விரல்பட்டி, தாளவாய்ப்பாளையம், தொண்டாமுத்தூர், எஸ்.பொன்னாபுரம், ஊஞ்சவேலாம்பட்டி, ஜாமீன்கோட்டம்பட்டி, கள்ளிப்பட்டி, கொண்டகவுண்டன்பாளையம், மூலனூர், ஆவலப்பம்பட்டி, கொல்லம்பட்டி, ஏ.நாகூர், பூசாரிப்பட்டி, போலிகவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, மக்கினாம்பட்டி, நாட்டுக்கல்பாளையம் மற்றும் பழையூர் உள்ளிட்ட 29 ஊராட்சிகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், பொள்ளாச்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜமீன் ஊத்துக்குளி, சின்னம்பாளையம், குளேஸ்வரன்பட்டி, மற்றும் சமத்தூர் ஆகிய 4 பேரூராட்சிகள் உடுமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்டதாகும்.

    கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி, இத்தொகுதியில் வாக்காளர்கள் நிலவரம், ஆண் வாக்காளர்கள்- 1,30,001,பெண் வாக்காளர்கள்- 1,39,113, திருநங்கைகள்-  --- 23, மொத்த வாக்காளர்கள்- 2,69,137.

    கோரிக்கைகள்

    ஆனைமலையாறு- நல்லாறு அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரி ஏற்படுத்த வேண்டும். அனைத்து விரிவாக்கப் பகுதிகளுக்கும் திருமூர்த்தி அணை குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நூற்றாண்டுகளை கடந்த உடுமலை நகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    நகராட்சியை ஒட்டிய ஊராட்சிகளை இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக உடுமலை நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும் என்ற கிடப்பில் உள்ள திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. நகரில் பல ஆண்டுகளாக நிலவும் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்கும் வகையில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். தவிர, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துகளற்ற வாகன போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் வகையிலும் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும்.பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

    நகர சாலைகள் விரிவாக்கம் செய்ய வேண்டும். கிராமப்புறப் பகுதிகளில் உள்ள சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாகும். மேலும், இத்தொகுதியில் உள்ள பழமை வாய்ந்த குட்டைத்திடலை மேம்படுத்தும், மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும். சந்தை விரிவாக்கம், நகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

    மலைவாழ் மக்கள் இடிந்த வீடுகளை கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க. 7 முறையும், தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

    அதிமுக சார்பில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷண்ன் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

    1951- மவுனகுருசாமி நாயுடு (காங்கிரஸ்)
    1957- எஸ்.டி.சுப்பையா கவுண்டர் (சுயேட்சை)
    1962- ராஜகோபாலசாமி நாயக்கர் (காங்கிரஸ்)
    1967- எஸ்.ஜே.சாதிக்பாட்சா (தி.மு.க.),
    1971- எஸ்.ஜே.சாதிக்பாட்சா (தி.மு.க.)
    1977- பி.குழந்தைவேலு(அ.தி.மு.க.)
    1980- பி.குழந்தைவேலு - (அ.தி.மு.க.)
    1984- ஏசு.திருமலைசாமி கவுண்டர் (காங்கிரஸ்)
    1989- எஸ்.ஜே.சாதிக்பாட்சா (தி.மு.க.)
    1991- கே.பி.மணிவாசகம் (அ.தி.மு.க.)
    1996- செல்வராசு (தி.மு.க.)
    2001- சி.சண்முகவேலு (அ.தி.மு.க.,)
    2006- சி.சண்முகவேலு (அ.தி.மு.க.,)
    2011- பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.)
    2016- உடுமலை ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க)
    Next Story
    ×