search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்
    X
    கருணை தெய்வம் காஞ்சி மகான்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    ராமசாமியை நோக்கி வந்த காஞ்சி ஸ்ரீமடத்துச் சிப்பந்தி, ‘‘பெரியவா உங்களை வரச் சொல்றார்’’ என்றார்.

    மகானிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்து விட்டதே என்று சந்தோ‌ஷமானார் ராமசாமி. காரணம், தன் மனதில் இருக்கக் கூடிய ஒரு குழப்பத்துக்குப் பெரியவாளிடம் இருந்து பதில் வரப் போகிறது.

    அதாவது, ராமசாமி தம்பதியர்க்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை காரணமாக அவரது மாமனார் பிரமாண்டமான ஒரு ஹோமத்துக்குத் திருவிடைமருதூரில் ஏற்பாடு செய்திருந்தார். தான் விரைவில் தாத்தா ஆக வேண்டும் என்று அவருக்கு ஆசை. ஆனால், மாப்பிள்ளையான வக்கீல் ராமசாமிக்கு இந்த ஹோமம் நடத்துவதில் உடன்பாடில்லை.

    ‘இந்த ஹோமம் நடக்க வேண்டும் என்றால் பெரியவா இதற்கு அனுமதி தர வேண்டும்’ என்று மாமனாருக்கு ஒரு நிபந்தனை விதித்தார் ராமசாமி. இதற்கு ஒப்புக் கொண்டார் மாமனார்.

    பெரியவாளின் அனுமதியும் உத்தரவும் வேண்டித்தான் இந்தக் குடும்பமே திருவிடைமருதூர் வந்திருந்தது.

    ராமசாமியுடன் வந்திருந்த அவரது மனைவி, மாமனார் உட்பட வேறுயாரையும் வருமாறு பெரியவா அழைக்கவில்லை. ராமசாமிக்கு மட்டும்தான் உத்தரவு ஆகி இருந்தது.

    தன்னுடன் அமர்ந்திருக்கும் குடும்பத்தினரின் முகத்தைப் பார்த்தார். ‘போயிட்டு வாங்கோ’ என்று பார்வையால குடும்பத்தினர் உத்தரவு கொடுத்தனர்.

    தரையில் இருந்து எழுந்தார். சிப்பந்தியுடன் வேக வேகமாக நடந்தார்.

    மிகவும் சாதாரணமான ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தார் பெரியவா. மகானைப் பார்த்ததும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

    தனக்கு எதிரே ஓரிடம் காட்டி உட்காரச் சொன்னார் பெரியவா.

    பவ்யமாக அமர்ந்தார். கருணை வள்ளலின் திருமுகம் ஏறிட்டார் ராமசாமி.

    பெரியவா நேரடியாக வி‌ஷயத்துக்கு வந்தார்: ‘‘ராமசாமி... உனக்கு கர்மாவில் நம்பிக்கை உண்டா?’’

    கர்மா என்றால் விதி. அதாவது, ஒருவருடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்ட ஒன்று.

    ‘எல்லாம் விதிப்படிதான் நடக்கும்’. ‘விதியை வென்றவர் யாருமில்லை’. ‘அவன் விதி... எல்லாம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது’.

    இப்படி விதியின் தன்மையை வலியுறுத்த பல பழமொழிகள் சொல்வோம்.

    இதைத்தான் ராமசாமியிடம் பெரியவா கேட்டார்.

    ‘கர்மாவில் உனக்கு நம்பிக்கை உண்டா?’ என்றால், ‘விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்று நீ நம்புகிறாயா?’ என்று பொருள்.

    ஒவ்வொருவருக்கும் கர்மா அதன் பலன்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

    அதாவது, முந்தைய பிறவியில் ஒருவர் நல்ல காரியங்களை செய்திருக்கிறார் என்றால், அவருக்கு நற்பலன்கள் விளையும்.

    அதுபோல் முற்பிறவியில் ஒருவர் தீவினைகளை செய்திருக்கிறார் என்றால், அவருக்கு கெடுபலன்களே விளைந்து கொண்டிருக்கும்.

    ராமசாமிக்கு இதில் அசாத்திய நம்பிக்கை உண்டு. ‘எத்தகைய பலன்களைக் கர்மா கொடுக்க வேண்டுமோ, அதைத் தந்தே தீரும். அதை யாராலும் மாற்ற முடியாது. நற்பலன்கள் என்றால் சந்தோ‌ஷப்படலாம். கெடுபலன்கள் என்றால், அவற்றை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்’. இதில் திடமான நம்பிக்கை உண்டு.

    எனவே, பெரியவாளிடம் சொன்னார்: ‘‘ஆமாம் பெரியவா... கர்மா மீது எனக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டு.’’

    அடுத்து பெரியவா, ‘‘அப்படியானால், உன் மாமனார் இங்கே செய்யப் போவதாக இருக்கும் ஹோமம் முதலியவை வேண்டாம். அதற்கான முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். உடனே அவரிடம் சொல்லி விடு’’ என்றார்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    தன் மனதில் இருக்கக் கூடிய எண்ணத்தை பெரியவா அப்படியே பிரதிபலிக்கிறாரே என்று நெகிழ்ந்து போனார் ராமசாமி.

    ‘‘நிச்சயம் சொல்லிடறேன் பெரியவா. உங்க உத்தரவுப்படியே நடக்கும்’’ என்றார்.

    இதைப் பெரியவா இதோடு விட்டு விடவில்லை. பெரியவா சொன்னது சிலருக்குத் தவறுதலாக இன்னொரு தேவையில்லாத பொருளையும் கொடுத்து விடும். பெரியவா இதை உணராமலா இருப்பார்?

    ‘‘ஹோமம் செய்ய வேண்டாம்னு சொன்னவுடனே ஒரு தப்பான அர்த்தம் சில பேருக்குத் தோணும். அதாவது, ஹோமம் செய்யறதுனால பலன் இல்லையோனு நினைச்சுடக் கூடாது. ஹோமம் செய்வதன் மூலமாக கண்டிப்பாக அதற்குரிய நற்பலன்கள் உண்டு. அதுல எந்த விதமான சந்தேகமும் இல்லை. அதே வேளையில் கர்மா மீது உனக்கு நம்பிக்கை இருக்கின்றபடியால் இந்த ஹோமங்களை நீ செய்ய வேண்டாம் என்று சொன்னேன்’’ என்று விளக்கினார் பெரியவா.

    எப்பேர்ப்பட்ட விளக்கம் பாருங்கள்... ‘ஹோமம் செய்வதால் உரிய பலன் நிச்சயம் கிடைக்கும். என்றாலும், கர்மாவை முழு மனதாக நீ நம்புகிறபடியால் இந்த ஹோமங்கள் உனக்கு வேண்டாம்’ என்கிறார் பெரியவா.

    பெரியவாளுக்கு ராமசாமியின் கர்மா எப்படி என்று தெரிந்து விட்டது. அதனால் நாசூக்காக இந்த ஹோமம் நடைபெறுவதைத் தடுத்து விட்டார்.

    இதில் ஒரு வி‌ஷயம் கவனித்தீர்களா?

    தாங்கள் என்ன காரணத்துக்காகத் திருவிடைமருதூர் வந்திருக்கிறோம் என்று ராமசாமியோ, அவரது குடும்பத்தினரோ மகா பெரியவாளிடம் சொல்லவே இல்லை. ஆனாலும், தன் ஞான திருஷ்டியால் எல்லாவற்றையும் உணர்ந்து அச்சு பிசகாமல் அப்படியே சொல்லி இருக்கிறார் பெரியவா.

    இதன் மூலம் ராமசாமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பெரியவா மீது இருக்கிற பக்தி இன்னும் பன்மடங்கு பெருகியது.

    மகா பெரியவாளின் நினைவுத் திறன் என்பது அபாரமானது. அதாவது எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை ஏதோ நேற்று பார்த்தது போல் துல்லியமாக சம்பந்தப்பட்டவரிடம் சொல்வார். இதைக் கேட்கிறபோது சம்பந்தப்பட்டவருக்கு பிரமிப்பாக இருக்கும். காரணம், பெரியவா சொல்லச் சொல்ல பரவசத்தில் நெகிழ்ந்து போய் விடுவார். பெரியவா சொல்லச் சொல்லத்தான் பழைய நினைவுகள் சம்பந்தப்பட்டவரின் மனதில் நிழலாடும்.

    இது குறித்துப் பல அனுபவங்களை இதே தொடரில் பார்த்திருக்கிறோம்.

    நேற்று என்ன நடந்தது, போன வாரம் என்ன நடந்தது போன்ற சமீப நாட்களில் நடந்த சம்பவங்களையே மனிதர்களான நாம் வெகு சுலபத்தில் மறந்து விடுகிறோம். ஆனால், மகான்கள் அப்படியல்ல.

    வாருங்கள், அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைப் பார்க்கலாம்.

    ஒரு முறை மகா பெரியவா ஆந்திராவில் நடையாத்திரை மேற்கொண்டிருந்தார். பல்வேறு குக்கிராமங்களையும் கடந்து அங்கெல்லாம் முகாமிட்டபடியே தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார்.

    வழியில் தன்னைத் தரிசிக்கிற கிராமவாசிகளுக்கு ஆசிகள் வழங்கினார். பிரசாதங்கள் கொடுத்தார். தான் தங்கி இருக்கிற ஊர்களில் அவர்களுக்கெல்லாம் அன்னதானம் நடந்தது.

    பொதுவாக பெரியவாளுக்கு இயற்கையோடு ஒட்டிய இடங்களில் தங்குவது ரொம்பவும் பிடிக்கும். திறந்தவெளிகள், பசுக்கொட்டடி, கிணற்றடி, பழமையான சத்திரங்கள் இங்கெல்லாம் விருப்பப்பட்டுத் தங்குவார்.

    அப்படி ஒரு முறை ஆந்திராவின் ஒரு கிராமத்தில் சாலை ஓரத்தில் இருக்கிற கொட்டகையில் தங்கி இருந்தார். எந்த விதமான வசதிகளும் இல்லாத கொட்டகை அது. ஆனால், பெரியவா மிகவும் விரும்பி அங்கு தங்கினார்.

    அன்றைய தினம் தமிழகத்தில் இருந்து ஒரு பக்தர், தரிசனத்துக்கு வந்திருந்தார்.

    அவர் பெயர் கல்யாணம். சுங்கவரித் துறையில் உயரதிகாரியாக இருந்தார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

    பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். பிறகு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    ‘என்ன வி‌ஷயமா வந்திருக்கே?’ என்று மகான் ஜாடையில் கேட்டதும், கல்யாணத்தின் கண்கள் கலங்கின.

    எத்தனை பணம், காசு இருந்தாலும் ஒரு மனிதன் மனதில் நிம்மதி இருந்து விடுமா?

    பணம் இருப்பவர்கள் எல்லாம் நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்ல முடியாது. நிம்மதியுடன் இருப்பவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் என்றும் சொல்லி விட முடியாது.

    இரண்டும் வெவ்வேறு.

    அப்படித்தான் இந்தக் கல்யாணத்துக்கும். உத்தியோகம், சம்பளம் என்று எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், குடும்பத்தில் நிம்மதி இல்லை.

    இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும் என்றுதான் மகா பெரியவாளைத் தரிசிக்க இப்போது ஆந்திராவுக்கு விசாரித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

    Next Story
    ×