search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  கருணை தெய்வம் காஞ்சி மகான்
  X
  கருணை தெய்வம் காஞ்சி மகான்

  கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

  கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
  மகபூப் நகரில் முகாமிட்டிருந்த மகா பெரியவா கேட்டுக் கொண்ட கோரிக்கை, அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி.ஆரால் அப்படியே நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கட்டுவதற்கு முந்தைய முதல்வர் சென்னாரெட்டி நான்கு லட்ச ரூபாய் தர ஒப்புக் கொண்டார். ஆனால், பணம் வந்து சேரவில்லை. அதை நிறைவேற்ற என்.டி.ஆர். ஒப்புக் கொண்டார். இதற்கு பாலமாக அமைந்தவர் பெரியவா பக்தரான வருமான வரித்துறை அதிகாரி டி.சி.ஏ. ராமானுஜம்.

  ‘‘இந்தத் தொகையான நான்கு லட்ச ரூபாயில் ஒரு திருத்தம்...’’ என்று போனில் பேசும்போது ஒரு கொக்கி போட்டார் ஆந்திர அரசின்  சீப் செக்ரெட்டரியான ராமன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமானுஜம் திகைத்துப்போனார்.

  ‘திருத்தமா? ஒருவேளை தொகையில் இருந்து ஏதேனும் குறைத்துத் தரப் போகிறார்களா? பெரியவா சொன்ன நான்கு லட்சம் வராதா?’ என்று கவலையானார் ராமானுஜம்.
  இருந்தாலும், குரலில் ஒரு உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, ‘‘சொல்லுங்கோ சார்...’’ என்று பெரியவாளை மனதுக்குள் பிரார்த்திருந்த படியே பேசி னார் ராமானுஜம்.
  ‘‘திருத்தம்னு நான் சொன்னவுடனே உங்களுக்கு ஒரு கவலை வந்துடுத்து போலிருக்கு. பயப்படாதீங்கோ. இது முதல்வர் என்.டி.ஆர். சொன்ன நல்ல திருத்தம்தான்’’ என்று பீடிகை போட்டார் ராமன்.

  குரலில் கொஞ்சம் சுரத்து கூட்டி, ‘‘சொல்லுங்கோ சார்... இது பெரியவா கொடுத்த வேலை சார். எப்படியும் அவர் நல்லபடியாவே முடிச்சு வைப் பார்ங்கிற நம்பிக் கை எனக்கு இருக்கு’’ என்றார் ராமானுஜம்.
  ‘‘வேற ஒண்ணுமில்லே... மகா பெரியவா சொன்ன நாலு லட்சத்துக்குப் பதிலா அஞ்சு லட்சமா சேங்ஷன் பண்ணி இருக் கார் முதல்வர் என்.டி.ஆர்...’’ என்றார் ராமன்.
  பிரமித்துப் போனார் ராமானுஜம்.
  ‘பணம் ஸ்ரீரங்கம் வருவதற்கு தாமதம் ஆகி விட்டது... இவரையாவது குடுக்கச் சொல்லு’ என்று என்.டி.ஆரைக் கேட்டுக் கொண்டதற்காக, இதுவரை ஆன தாமதத்தையும் கருத்தில் கொண்டு ஒரு லட்சம் சேர்த்து ஐந்து லட்சம் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார் போலிருக்கிறது என்.டி.ஆர்.! பூரித்துப் போனார் ராமானுஜம்.
  ‘‘நீங்கள் சொன்ன ஸ்ரீரங்கம் முகவரிக்கு இந்தத் தொகை நாளையே போய்ச் சேர்ந்து விடும்’’ என்றார் ராமன்.
  நெகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றியைச் சொன்னார் ராமானுஜம்.
  அவருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ‘மகா பெரியவா நமக்குக் கொடுத்த ஒரு விஷயத்தை நல்லபடியா பூர்த்தி செய்து விட்டோமே... இதை மகா பெரியவாளிடம் உடனே சொல்ல வேண்டும்...’ என்று மகபூப் நகருக்குப் புறப்பட்டார்.
  பெரியவா முகாமை அடைந்ததும், நேராக மகானிடம் சென்றார்.
  அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.
  புன்னகையுடன் ஆசிர் வதித்தார் பெரியவா. பிறகு, ‘என்ன?’ என்பது போல் ராமானுஜத்தின் முகம் பார்த்தார்.
  கடகடவென்று விஷயத் தைச் சொன்னார்.
  பெரியவா திருமுகத்தில் பரவசம். சந்தோஷம்.
  பொதுக் கார்யம் நல்லபடியாக முடிந்ததில் அந்த நடமாடும் தெய்வத்துக்கு அப்படி ஒரு பூரிப்பு.
  வலக் கை உயர்த்தி ராமானுஜத்தை ஆசிர்வதித்தவர் பிறகு சொன்னார்: ‘‘இந்த ஸ்ரீரங்கம் ராஜகோபுரப் பணியில் பெருமாள் நம்ம மூணு பேரை எப்படி இணைச்சு வெச்சிருக்கார், பார்த்தியா... ராஜகோபுரப் பணியைக் கையில எடுத்துண்டிருக்கிற அஹோபில மடம் ஜீயர் வடகலை. நீயோ தென்கலை. நானோ குறுக்குப்பூசி (அதாவது நெற்றியில் நேராக மூன்று கோடுகள் போட்டால் நாமம். அதையே படுக்கைவாட்டில் போட்டால் குறுக்குப்பூசியாம்). நாம மூணு பேரும் ஒத்துமையா லோக நலனுக்காக ஒரு பெரிய காரியம் நடத்தி இருக்கோம்’’ என்று சொல்லி விட்டுப் பெரிதாகச் சிரித்தார் மகா பெரியவா.

  மனம் கொள்ளாப் பூரிப்புடன் இதைக் கேட்டு நெகிழ்ந்த ராமானுஜம், மீண்டும் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.
  பிரசாதம் பெற்றுக் கொண்டு ஐதராபாத் புறப்பட்டார். பெரியவா அருளுக்குப் பாத்திரமான அன்பர்களின் பக்திபூர்வமான அனுபவங் களைப் பார்த்து வருகிறோம். இந்த வரிசையில், அடுத்து நாம் பார்க்கப் போவது அங்கம்மாள் என்கிற பக்தையின் அனுபவம். தற்போது 77 வயதாகும் அங்கம்மாள், சென்னையில் வசித்து வருகிறார்.  1961-ல் இவருக்கும் ராமபிரசாத் என்பவருக்கும் திருமணம் ஆனது. அப்போது அங்கம்மாளுக்கு வயது பதினாறு. எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் ராமபிரசாத்.

  ராமபிரசாத், அவரது பெற்றோருக்கு ஒரே மகன். எனவே, ராமபிரசாத்தின் தாயார் தனக்கு ஒரு பேரனோ, பேத்தியோ பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எந்தப் பாட்டிக்குத்தான் இப்படி ஒரு ஆசை இல்லாமல் இருக்கும்?
  திருமணம் ஆன புதிது. எண்ணூருக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் மகா பெரியவா அப்போது முகா மிட்டிருந்தார். பெரியவாளைத் தரிசிக்கப் போக வேண்டும் என்றால், படகில் பயணித்துதான் அடைய வேண்டும்.

  ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

  அங்கம்மாள், ராமபிரசாத் மற்றும் இவரது தாயார் ஆகிய மூவரும் பெரியவா முகாமிட்டி ருந்த அந்தக் கடல் பிரதேசத்துக்குச் சென்றார்கள். பெரியவாளைத் தரிசிக்கிற போது ராமபிரசாத்தின் தாயார் தனக்குப் பேரனோ, பேத்தியோ பிறக்க வேண்டும் என்று மனசாரப் பிரார்த்தித்துக் கொண்டார்.

  பெரியவாளிடம் நம் பிரார்த்தனைகளை நேருக்கு நேராகச் சொல்ல வேண்டும் என்கிற அவ சியமில்லை. மனசுக்குள் நினைத்துக் கொண்டாலே போதும். அது அந்த மகானை அடைந்து அனுகிரகமும் கிடைத்து விடும்.
  அப்படித்தான் ஆனது.
   
  ஆம்! அங்கம்மாளுக்குப் பதினெட்டு வயது இருக்கும்போது மகன் பிறந்தான்.
  தான் பாட்டி ஆகி விட்டதில் ராமபிரசாத்தின் தாய்க்கு சந்தோஷமான சந்தோஷம். பெரியவாளின் கருணையை நினைத்துப் பூரித்துப்போனார்.
  ராமபிரசாத் தின் தாய்க்கு - மருமகள் வேலைக்குப் போகக்கூடாது என்று எண்ணம். எனவே, திருமணம் ஆன பின் அங்கம்மாளை வேலைக்கு அனுப்புவதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. ஒரு அரசு உத்தி யோகத்தில் சேருவதற்கு உண்டான படிப்பு அங்கம்மாளுக்கு இருந்தது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.

  தொலை தொடர்புத்துறை, மின்சார வாரியம் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களில் இருந்தெல்லாம் வேலைக்கு சேரச் சொல்லி கடிதங்கள் வந்தன அங்கம்மாளுக்கு. அவற்றை அங்கம்மாள் உடனடியாக ஏற்றுக் கொண்டு பதில் அனுப்பி இருந்தார் என்றால், அரசு உத்தியோகம் கிடைத்திருக்கும்.

   ஆனால், மாமியாருக்குத்தான் இதில் விருப்பமே இல்லையே! இது போன்ற கடிதங்கள் வீட்டுக்கு வந்த மாத்திரத்தில் அவற்றை ஆத்திரத்தோடு கிழித்துப் போட்டு விடுவார் அங்கம்மாளின் மாமியார்.  மாமியாரின் இந்த செய்கைக்கு அங்கம்மாள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார். அவ்வளவு ஏன்... ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டார். அந்தக் காலம் அப்படி.

  மாமியாருக்குக் கட்டுப்பட்ட நல்ல மருமகளாக நடந்து கொண்டார். மாமியார்களும் மருமகள்களின் நலனையே பெரிதும் விரும்பிய காலம் அது. மனிதர்களில் ஒவ்வொ ருவரின் எண்ணங்களும் மாறுபடுகின்றன அல்லவா? ஒருவர் நினைப்பது போல் இன்னொருவரும் நினைப்பார் என்று சொல்ல முடியாது. வேலைக்கே போகக் கூடாது என்று அங்கம்மாளின் மாமியார் நினைக்கிறார்.
  ஆனால், அங்கம்மாளின் அம்மாவுக்குத் தன் மகள் வேலைக்குப் போக வேண்டும்... கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். காரணம், தன் மாப்பிள்ளை ராமபிரசாத் பணி புரிவது தனியார் நிறுவனத்தில். குழந்தைக் குட்டிகளுடன் குடும்பம் நடத்த அந்த சம்பளம் மட்டும் எப்படிப் போதும் என்று கவலைப்பட்டார்.
  எனவே, தன் மகள் அங்கம்மாள் நல்ல ஒரு அரசு உத்தியோகத்தில் அமர வேண்டும் என்று விருப்பப்பட்டார்.
  அங்கம்மாளின் தாயார் ஆசை நிறைவேறியதா? அதை நிறைவேற்ற வல்லவர் யார்?
  பெரியவாதானே!
  ஒரு நாள் மகா பெரியவாளின் தரிசனத்துக்குச் சென்றார் அங்கம்மாளின் தாயார். தன் பிரார்த்தனையை இவரும் நேரில் சொல்லவில்லை. மனதுக்குள்ளேயே வேண்டிக் கொண்டார்.
   மவுனப் பிரார்த்தனைக்கு மகானின் அருள் கிடைத்ததா?
  அங்கம்மாளுக்கு அரசு உத்தியோகம் கிடைத்ததா?

  Next Story
  ×