search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாசர்பாடி - திருவொற்றியூர் மேம்பாலங்களை 28-ந்தேதி எடப்பாடி பழனிசாமி திறக்கிறார்
    X

    வியாசர்பாடி - திருவொற்றியூர் மேம்பாலங்களை 28-ந்தேதி எடப்பாடி பழனிசாமி திறக்கிறார்

    வியாசர்பாடி மற்றும் திருவொற்றியூர் மேம்பாலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரில் இருந்து மாதவரம், கொடுங்கையூர், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல திருவொற்றியூர் மாட்டு மந்தை ரெயில் நிலையத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.

    இங்கு பாலம் இல்லாததால் ரெயில்வே கேட் வழியாகவே வாகனங்கள் செல்கின்றன. இந்த ரெயில்வே வழித்தடத்தில் வட மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில்கள் என 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    தினமும் 100 தடவைக்கும் மேல் ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் இரு புறங்களிலும் எப்போதும் காத்துக்கிடக்கும் நிலையே ஏற்பட்டது.

    எனவே இங்கு பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மணலி பொது வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து போராட்டமும் நடத்தப்பட்டது.

    இதையடுத்து 2014-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாட்டு மந்தை ரெயில் நிலைய பகுதியில் பாலம் கட்ட ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தார் 18 மாதத்தில் பணிகளை முடித்து பாலம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தண்டவாளம் இருக்கும் பகுதியில் ரெயில்வே காரிடர் அமைக்கும் பணியை ரெயில்வேயுடன் இணைந்து செய்ய வேண்டி இருந்ததால் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மேம்பால பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே பாலத்தை உடனே திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதேபோல் வியாசர்பாடி சத்தியமூர்த்தி சாலை, பேசின் பிரிட்ஜ் இடையே கட்டப்பட்ட மேம்பாலத்தின் ஒரு பகுதியை ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். அந்த மேம்பாலத்தின் பேசின் பிரிட்ஜ் மார்க்கெட் சாலை பால பணி முடிந்துள்ளது. இதுவும் திறப்பு விழாவுக்காக காத்திருந்தது.

    இந்த பாலங்களை திறந்து வைக்கப்போவதாக தி.மு.க. மற்றும் பா.ம.க. சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



    இந்த நிலையில் இந்த 2 பாலங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இதற்கான விழா திருவொற்றியூர் மாட்டு மந்தை பகுதியில் வருகிற 28-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி மாட்டு மந்தை மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். பின்னர் விழா மேடையில் இருந்தபடியே வியாசர்பாடி பாலத்தையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

    விழாவில் நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

    திருவொற்றியூர் பகுதியில் பல பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எண்ணூர் விரைவு சாலை பணிகளுக்காக திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் வீடுகளை காலி செய்தவர்ளுக்கு இன்னும் மாற்று இடம் ஒதுக்கப்படவில்லை. இது தொடர்பாக போராட்டம் நடக்கிறது. மேலும் சிபிசிஎல் குழாய் பகுதிக்கும் பணிகள் தொடர்பாகவும் போராட்டம் நடந்து வருகிறது. ரெயில்வே பாதை விரிவாக்க பணிகளுக்காக வீடுகளை காலி செய்தவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    எனவே மேம்பாலம் திறப்பு விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×