search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க 8 லட்சம் பேருக்கு ரூபே டெபிட் அட்டை:  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்
    X

    கூட்டுறவு வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க 8 லட்சம் பேருக்கு ரூபே டெபிட் அட்டை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

    கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க 8 லட்சம் பேருக்கு ரூபே டெபிட் அட்டை விரைவில் வழங்க உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    சென்னை:

    நபார்டு வங்கி 36-வது ஆண்டு விழா மற்றும் சுய உதவிக்குழுக்கள் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டின் விவசாய கட்டமைப்புகளை மேம்படுத்தி விவசாய பெருமக்களின் வளர்ச்சிக்கும், கிராமப் பெண்களுடைய வாழ்வின் மலர்ச்சிக்கும் செயல்படுத்தப்பட்ட தமிழக அரசின் திட்டங்களில், அரசுடன் இணைந்து நபார்டு வங்கி ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கது.

    கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்கடனுக்கு நபார்டு வங்கி மறுநிதியுதவி அளித்து வருகிறது.

    கிராமச்சாலைகள் முதல் பாடசாலைகள் வரை, கால்நடை மருத்துவ மையங்கள் முதல் மீன்பிடி துறைமுகங்கள் வரை, விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் முதல் பொது விநியோக கிடங்குகள் வரை அனைத்து விதமான கிராம முன்னேற்றத்துக்கான திட்டங்களிலும் நபார்டு வங்கி தனது ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வரை கடனுதவி அளித்து வருவதை நான் இங்கே மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இத்திட்டத்தில் அதிக நிதியுதவி பெறும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்த உதவிகளை பயன்படுத்தி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி கல்விக்கும் வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சிக்கும் நபார்டு வங்கி வழி வகுத்துள்ளது.

    இதன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 41 ஆயிரம் நீர் பாசன ஏரிகள் புனரமைக்க வாய்ப்பு ஏற்படும்.


    இந்த ஆண்டு தமிழக அரசின் வரவு- செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானாவாரி நிலப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக வேளாண்மை உற்பத்தி கூட்டமைப்புக்களுக்கு நபார்டு வங்கி கடனுதவி உதவி அளிக்க உள்ளது.

    இது தவிர எளிதில் அழுகக் கூடிய காய்கறிகள், பழங்கள் உற்பத்தியை உயர்த்தி நிலை நிறுத்த, விநியோக தொடரமைப்பு மேலாண்மைக்கு 398 கோடி ரூபாய் கடனுதவியை நபார்டு வங்கி வழங்கியுள்ளது.

    பல்வேறு பருவகால மாற்ற திட்டங்களை, தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச் சூழல்துறையுடன் இணைந்து நபார்டு வங்கி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களையும் தீட்டி உள்ளது. இதனால் தமிழக விவசாயப் பெருங்குடி மக்களும், மீனவ நண்பர்களும் பெரும் பயன் அடைவார்கள்.

    இந்தியாவிலேயே பருவ கால மாற்றங்கள் தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரே அமைப்பு என்ற சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள நபார்டு வங்கியை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.

    இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் நதி நீர் இணைப்புத்திட்டங்களை செயல்படுத்தவும் நபார்டு வங்கி மாநில அரசுடன் கைகோர்ந்து, நீண்டகால நீர்பாசன நிதியின் மூலமாக உதவ இருக்கிறது.

    தாமிரபரணிநம்பியாறு, அத்திக்கடவு திட்டம் போன்றவை இதில் அடங்கும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள “நீரா உற்பத்தி” திட்டத்துக்கான உற்பத்தி தொழிற்சாலைகள் அமைப்பதற்கு உணவுப் பொருள் பதப்படுத்தும் நிதியிலிருந்து உதவ வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை.

    நபார்டு வங்கி தமிழ் நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை செயல்படுத்தவும், ரூபே டெபிட் அட்டை வழங்கவும், ஏ.டி.எம் இயந்திரங்களை நிர்மாணிக்கவும் மானிய உதவி அளித்து உள்ளது.

    கடந்த ஜீன் 12-ந்தேதி, நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு 40 ஏ.டி.எம். இயந்திரங்களை வாடிக்கையாளர்களுக்கு அர்பணித்து, ரூபே டெபிட் அட்டை வழங்கினேன்.

    தமிழ்நாட்டின் எட்டு லட்சம் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூபே டெபிட் அட்டை விரைவில் வழங்க உள்ளது.

    சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் தற்போதுள்ள கடனுதவி 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உள்ளது. இதில் வங்கிகளின் பங்களிப்பு 6300 கோடி அளவில்தான் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. வரும் ஆண்டுகளில் அனைத்து வங்கிகளும் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடனுதவியை அதிகரித்து, வங்கிகளின் பங்களிப்பை பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    தண்ணீரை பெருக்குவது, சேமிப்பது, காப்பது, மேலாண்மை செய்வது, மறு சுழற்சி செய்வது என பல்வேறு வகைகளிலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 6500 கிராமங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு 67 ஆயிரம் தண்ணீர் தூதுவர்களை நியமித்துள்ளது.

    இன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் சார்பாக துவங்கப்பட விருக்கும் “இன்குபே‌ஷன் மையத்துக்காக” நபார்டு 12.40 கோடி ரூபாய் அளவுக்கு மானிய உதவி வழங்குகிறது.

    இதன் மூலமாக வேளாண் துறையில் புதிய தொழில்முனைவோர்கள் உருவாகி அவர்கள் மூலமாக தமிழ்நாடு பயன் பெறும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    Next Story
    ×