search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. வெற்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
    X

    தி.மு.க. வெற்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்தால் தி.மு.க. வெற்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள நன்றி மடலில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 3 வாரங்களாகக் கழகத்தின் தொண்டர்கள் தொடங்கி நிர்வாகிகள் வரை அனைத்துத் தரப்பினரும் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து ஆர்.நே.நகர் இடைத்தேர்தல் களத்தில் அயராது பணியாற்றியதை நேரில் நெருங்கிப் பார்த்து அறிந்தவன் நான்.

    எந்தத் தேர்தல் களமாக இருந்தாலும் தி.மு.க. தொண்டர்களின் பணி சிறப்பானதாகவே இருக்கும். அதனை வலியுறுத்தி கடந்த வாரத்தில் கூட உங்களுக்கு மடல் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தின் வரிகள் வீணாகாதபடி தேர்தல் களத்தில் கழகத்தினரின் பணியும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் ஒத்துழைப்பும் நமக்கு பெருமிதமாகவும், அரசியல் எதிரிகளுக்கு அடிவயிறு கலங்கும் வகையிலும் அமைந்திருந்தது.

    அ.தி.மு.க. தொடங்கப்பட்டபிறகு நடந்த தேர்தல்களில் ஆர்.கே.நகர் தொகுதியின் முடிவுகள் நம்மைவிட சற்று கூடுதலாக அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை அளித்திருக்கிறது என்றாலும், இந்த இடைத்தேர்தல் களத்தில், ஆளுங்கட்சியினரும் அதிலிருந்து பிரிந்து நிற்பவர்களும் மிரண்டு போகும் வகையில் கழகத்தினரின் தேர்தல் பணி மிகச் சிறப்பாக அமைந்து, வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில் கருத்துக் கணிப்புகள் பலவும் வெளியாகிக் கொண்டிருந்தன.


    கணிப்புகளைவிட உழைப்பினை நம்புவதே அறிஞர் அண்ணா காலம் தொடங்கி தலைவர் கலைஞரின் வழிகாட்டுதலில் தொடரும் கழகத்தின் அரசியல் இலக்கணம். அதனை நிரூபிக்கும் வகையில் கழகத்தினர் இரவுபகல் பாராது தேனீக்களாய் சுழன்று, வாக்குகளை சேகரித்தனர். கழகத்தின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளரே ஓர் எளிய தொண்டன் என்பதால் எளிதில் அணுகக்கூடிய மக்களின் ஊழியனாக அவர் களப்பணியாற்றினார்.

    மார்ச் 28அன்று கழகத்தின் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தொடங்கி, ஏப்ரல் 9-ந்தேதி இரவு வரை நடந்த தேர்தல் பிரச்சாரம் வரை நான் பங்கேற்ற அனைத்திலும் பொது மக்களின் பேராதரவு வெளிப்பட்டது.

    ஆர்.கே.நகரில் உதயசூரியன் உதிக்கப்போகிறது என்பதை நம்மைவிட மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் நன்றாக அறிந்திருந்தனர். அதனால்தான் ஆளுகின்ற கட்சியினர் அனைத்துவகை அதிகாரங்களையும் பயன்படுத்தி, ஓட்டுக்கு நோட்டு என புது இரண்டாயிரம் ரூபாய் தாள்களை ஒன்றுக்கு இரண்டு மூன்று என்று ஒவ்வொரு வாக்குக்கும் வாரி இரைத்தனர். அது குறித்த வீடியோ பதிவுகளே வெளியாகி, தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது.

    பணம் விநியோகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நேர்மையான முறையில் இடைத்தேர்தல் நடைபெற வழிகாண வேண்டும் என்பதை தேர்தல் ஆணையத்திடம் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம், இடைத் தேர்தலையே நிறுத்தி விட்டது. வகுப்பில் ஒரு மாணவன் முறைகேடான வகையில் தேர்வு எழுதினால், அந்த மாணவனை வெளியே அனுப்புவதுதான் முறை. அதைவிடுத்து, தேர்வையே மொத்தமாக ரத்து செய்வது என்பது அந்த மாணவனைத் தப்பிக்க வைக்கின்ற செயல் மட்டுமின்றி, நம்பிக்கையுடன் தேர்வு எழுதும் மற்ற மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

    கழகத்திற்கு மக்களிடமும், மாற்று முகாம்களிலும் அதிகரித்து வரும் ஆதரவைப் பொறுக்க முடியாமல், அதிகாரத்தை வைத்திருப்போர் பணப்பெட்டியையும் அதிகாரத்தை அனுபவித்துவிட்டு பதவியிழந்தோர் சவப்பெட்டியையும் நம்பி தேர்தல் களத்தை சந்தித்தனர். அதற்கெல்லாம் கலங்காமல், கழகத் தொண்டர்களாகிய உங்களின் உழைப்பை நம்பி நமது வேட்பாளர் நம்பிக்கையுடன் பயணித்தார்.

    ஆர்.கே.நகரையும் சென்னையின் பிற பகுதிகளையும் சேர்ந்த கழகத்தினர் மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆர்வத்துடன் வந்த தொண்டர்கள், வெற்றியை அடைந்தே தீருவோம் என்ற லட்சிய இலக்குடன் பணியாற்றினர்.

    இடைத்தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைவதற்கு முந்தைய நாளின் நடு இரவில் வெளியாகியுள்ளது.மிக அதிக அளவிலான தேர்தல் கண்காணிப்பாளர்கள், துணை ராணுவத்தினர் என பாதுகாப்புப்பணி பலமாகத் தோன்றினாலும் ஆள்பவர்களின் முறைகேடுகளை தடுக்க முடியாமல் இடைத்தேர்தலை நிறுத்தியுள்ளனர். இது தற்காலிக முடிவுதான். கழகத்தின் வெற்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அடுத்த அறிவிப்பு இடைத்தேர்தலாக இருந்தாலும், பொதுத்தேர்தலாக இருந்தாலும் ஆர்.கே.நகரில் மட்டு மல்ல, தமிழகம் முழுவதும் கழகத்தின் வெற்றிக் கொடி பறக்கும் என்ற நம்பிக்கையை இடைத்தேர்தல் களத்தில் பணியாற்றி கழகத் தொண்டர்கள் கூட்டணிக் கட்சியினரின் உழைப்பு உறுதி செய்துள்ளது.

    தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளான உங்களின் அயராத உழைப்புக்கு, செயல்தலைவர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.

    Next Story
    ×