search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை எதிர்த்து காங்கிரஸ் தொகுதி வாரியாக பொதுக்கூட்டம்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
    X

    மோடியை எதிர்த்து காங்கிரஸ் தொகுதி வாரியாக பொதுக்கூட்டம்: திருநாவுக்கரசர் அறிவிப்பு

    மோடியை எதிர்த்து காங்கிரஸ் தொகுதி வாரியாக பொதுக்கூட்டம் நடத்தபடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படாத நாட்டு மக்களே இல்லை என்கிற அளவில் கடந்த 80 நாட்களாக பல்வேறு துன்பங்களை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    கருப்புப் பணமும் ஒழியவில்லை. கள்ளப் பணமும் ஒழியவில்லை என்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் இந்திய பொருளாதாரமே பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ராகுல்காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    பா.ஜ.க.வின் மக்கள் விரோத நடவடிக்கையை ஒருங்கிணைத்து செயல் படுத்துவதற்காக பண மதிப்பு நீக்க எதிர்ப்பு செயலாக்கக் குழு முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் இணைத் தலைவராக முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி, முன்னாள் எம்.பி. ஆரூண் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நாளை மறுநாள் (31-ந் தேதி) தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து நடைபெற கருத்தரங்கம் உள்ளது. பணமதிப்பு நீக்கம் மக்கள் படும் வேதனை என்கிற தலைப்பில் நடைபெறுகிற கருத்தரங்கத்தை புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைக்கிறார். கர்நாடக மாநில மின்துறை அமைச்சரும், தென்மாநில ஒருங்கிணைப்பாளருமான டி.கே. சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    கருத்தரங்கில் பொருளா தார ஆலோசகர் நரேன் ராஜ கோபாலன், சமூக சிந்தனையாளர் ஆனந்த் சீனிவாசன், சமூக செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

    முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் குமரி அனந்தன், இளங்கோவன், கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் மற்றும் யசோதா, மாணிக்கம் தாகூர் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

    கருத்தரங்கில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக ஒருங்கிணைப்பாளர் ரகுமான் கான், அகில இந்திய செயலாளர் சின்னா ரெட்டி ஆகியோர் நிறைவுரை ஆற்று கிறார்கள்.

    இக்கருத்தரங்கில் பங்கேற்பதன் மூலமாக தமிழகத்தில் அடுத்தகட்டமாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக 234 சட்ட மன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய கூட்டங்களை நடத்துவதன் மூலமாக பா.ஜ.க.வின் ஜனநாயக, சட்டவிரோத நடவடிக்கைகளை மக்களிடம் தோலுரித்துக் காட்டுவோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×