search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்தா புயல் பாதிப்பு: மத்திய குழுவிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு
    X

    வார்தா புயல் பாதிப்பு: மத்திய குழுவிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு

    வார்தா புயல் பாதிப்பு குறித்து மத்திய குழுவிடம் அரசு கேட்டுக்கொண்டபடி ரூ.22 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர்.
    சென்னை:

    வார்தா புயல் பாதிப்பு குறித்து மத்திய குழுவிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் த.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ரங்கநாதன் உள்ளிட்ட 14 பேர் இன்று காலை தலைமைச் செயலகம் வந்தனர்.

    அங்கு மத்திய குழுவினரை சந்தித்து தங்களது தொகுதிகளில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து மனு கொடுத்தனர்.

    பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் வருவதை அறிந்து அவர்களை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து தங்கள் தொகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்கூற வாய்ப்பு ஏற்படுத்தி தரும்படி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார். அந்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.

    மத்திய குழுவை வழி நடத்திச் செல்லும் அலுவலர்களை தொடர்பு கொண்டு கோரிக்கை மனு வழங்க நேரம் ஒதுக்கி தர கேட்டு இருந்தோம். 2 நாட்களாகியும் அரசின் சார்பில் எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. இதனால் 14 எம்.எல்.ஏ.க்கள் இன்று தலைமைச் செயலகத்துக்கு நேரடியாக வந்து மத்திய குழுவிடம் கோரிக்கை மனு கொடுத்தோம்.

    மத்திய குழுவினர் முதல்-அமைச்சரை சந்திக்கும் சமயத்தில் கோரிக்கை மனு கொடுக்கலாம் என்று முதல்-அமைச்சர் அறைக்கு சென்றோம். ஆனால் எங்களுக்கு அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. முதல்-அமைச்சரை மத்திய குழுவினர் சந்தித்த பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் கூட்ட அரங்கில் சென்று சந்தித்து புயல் பாதிப்பு பற்றி மனு கொடுத்து இருக்கிறோம்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களும், ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நூற்றுக்கணக்கான மின்மாற்றிகள் உடைந்து பழுதாகி உள்ளது. வீட்டுக் கூரைகளும் சேதம் அடைந்துள்ளன. 3 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. எங்கள் தொகுதிகளில் உள்ள பாதிப்பை தனித்தனியாக கண்டறிந்து மனுவாக கொடுத்து இருக்கிறோம்.

    அரசு கேட்டுக்கொண்டபடி ரூ.22,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×