search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ்காந்தி படுகொலையை காங்கிரசார் மறக்கவில்லை: திருநாவுக்கரசர்
    X

    ராஜீவ்காந்தி படுகொலையை காங்கிரசார் மறக்கவில்லை: திருநாவுக்கரசர்

    விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கார்த்தி ப.சிதம்பரம் பேசவில்லை என்றும், ராஜீவ்காந்தி படுகொலையை காங்கிரசார் மறக்கவில்லை என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மீனவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மீனவர் அணி தலைவர் சபீன் மாரீஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை குழுக்களை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது. எனவே சபாநாயகர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்தி ப.சிதம்பரம் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பரிந்து பேசினார் என்று நான் நினைக்கவில்லை. அவர் அவ்வாறு பேச மாட்டார். ராஜீவ்காந்தி தமிழ் மண்ணில் கொலை செய்யப்பட்டதை காங்கிரசார் மறக்கவில்லை. அது தீராத வடுவாகவே இருக்கிறது. சோகமான நிகழ்வாக எங்களுக்குள் இருக்கிறது.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. டெல்லியில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி என்பதை தான் இது காட்டுகிறது. எனவே இது குறித்து மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ரூபாய் நோட்டு பிரச்சினையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே மத்திய அரசின் மோசமான நடவடிக்கைகளை கண்டித்து 30-ந்தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இருக்கிறோம். 25-ந்தேதி மதுரையிலும், 26-ந்தேதி தஞ்சாவூரிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை நாங்கள் கூட்ட இருக்கிறோம்.

    செம்மரம் கடத்தல் தொடர்பாக ஆந்திர அரசு தமிழர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக-ஆந்திரா அதிகாரிகள் சந்தித்து பிரச்சினையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது படத்திற்கு மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் குமரி அனந்தன், பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, துணைத்தலைவர் ஆர்.தாமோதரன், பொதுச்செயலாளர் கீழாநல்லூர் ராஜேந்திரன், மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, முகம்மது சித்திக், சிறுபான்மையினர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலை எம்.அக்பர், துணைத்தலைவர் ரவி, எம்.எஸ். திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×