search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி, சிறுவாணி, பாலாறு பிரச்சனை: மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? - டி.ராஜேந்தர் கேள்வி
    X

    காவிரி, சிறுவாணி, பாலாறு பிரச்சனை: மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? - டி.ராஜேந்தர் கேள்வி

    காவிரி, சிறுவாணி, பாலாறு பிரச்சனைகளில் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் என்று டி.ராஜேந்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.
    சென்னை:

    காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, சிறுவாணி நதிநீர் பங்கீடு மற்றும் மீனவர் பிரச்சனையில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    டி.ராஜேந்தர் தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த பிரச்சனைகளில் மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டது.

    போராட்டத்தின் போது டி.ராஜேந்தர் பேசியதாவது:-

    பாலாற்றுக்கு குறுக்கே அணைக்கட்டுவோம் என்று, ஆந்திரா செய்கிறது தமிழகத்திடம் அடாவடி. சிறுவாணி நதியை தடுத்து, அணை கட்டுவோம் என்று கேரளா கொடுக்கிறது தமிழ்நாட்டுக்கு கெடுபிடி. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்க மாட்டோம், காவிரியில் தண்ணீரை திறந்து விடமாட்டோம் என்று கர்நாடகா தமிழ்நாட்டுக்கு கொடுக்கிறது கசையடி.

    இப்படி அண்டை மாநிலங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று ஆளுக்கு ஒரு பக்கம் தமிழ்நாட்டுக்கு போடுகிறார்கள் கிடுக்குபிடி. ஆனால் தமிழ்நாட்டு உரிமையை விட்டு தர மாட்டோம் என்று தமிழக முதல்வர் உறுதியாக பிடிக்கிறார் உடும்புபிடி. அது அசைக்க முடியாத இரும்பு பிடி.

    மாநில அரசுகளுக்கு நடுவே மத்தியஸ்தம் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது என்றால், தமிழ்நாட்டின் மீது ஏன் இந்த வெறுப்பு? தமிழ்நாடு என்ன பக்கத்து நாடு பாகிஸ்தானா? இல்ல பங்களாதேஷா? எங்களுக்கு ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்? தட்டி கேட்காமல் மத்திய அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள்?

    காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அதற்குரிய மரியாதை இருக்கிறதா, இல்லையா என்று நடத்த வேண்டும் போலிருக்கிறது பட்டிமன்றம். கர்நாடகா, காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தை அலட்சியபடுத்துகிறது. இன்னும் சொல்ல போனால் உச்சநீதி மன்ற தீர்ப்பையே உதாசினப்படுத்துகிறது.

    எங்கே போகிறது இந்திய நாடு? பாவம் தண்ணீர் பிரச்சனையில் தமிழ்நாடு படுகிற பெரும்பாடு. பாரத தேசத்தில் இருக்கிறதா, இல்லையா தேசிய ஒருமைப்பாடு? சிறுவாணி நதியின் குறுக்கே அணை கட்ட ஆய்வு செய்வதற்கு தமிழ்நாட்டிடம் ஒப்புதலை பெறாமலே, கேரளா அரசுக்கு மத்திய அரசு கொடுக்கலாமா அனுமதி? அப்படியென்றால் கேரளாவை மதிப்பீர்கள், தமிழ்நாட்டை போட்டு மிதிப்பீர்களா?

    இந்தியாவின் கடைகோடி தனுஷ்கோடி, போகிற போக்கைப் பார்த்தால், தமிழ்நாட்டை ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது தெருக்கோடி. மத்திய அரசே கண்டும் காணாமல் நடிக்காதே. தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே.

    எங்கள் தமிழக மீனவர்களோ கடலின் மீனைப் பிடிக்கிறார்கள். இலங்கை கடற்படையோ மீனவர்களை பிடிக்கிறார்கள். வேடிக்கை பார்க்கும் இந்திய அரசோ, மவுனத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

    அதனால்தான் மத்திய அரசுக்கு எதிராக, எங்கள் லட்சிய தி.மு.க.வினர் கொடி பிடிக்கிறார்கள். மத்திய அரசே தொடர்ந்து காட்டாதே மெத்தனம்.

    இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.
    Next Story
    ×