search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர்-திருப்பூரில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அமைக்கப்படும்: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அறிவிப்பு
    X

    திருவள்ளூர்-திருப்பூரில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அமைக்கப்படும்: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அறிவிப்பு

    திருவள்ளூர்-திருப்பூரில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு தோற்றுவிக்கப்படும் என அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கால்நடை பராமரிப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பேசியபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    தமிழகத்தில் கலப்பின கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதன் காரணமாக கால்நடை தீவனத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. தீவனத்திற்கான செலவு அதிகரிக்கும் காரணத்தால் வழக்கத்தில் இல்லாத தீவனப் பொருட்களை கொண்டு கால்நடை தீவனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தீவன பொருட்கள் கால்நடைகளுக்கு உகந்ததாக உள்ளதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது. இதன் பொருட்டு நடப்பு நிதியாண்டில் 2 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தீவன ஆய்வுக் கூடம் அமைக்கப்படும்.

    கால்நடை பராமரிப்புத் துறையின் கண்காணிப்பு அலுவலகங்களுக்கு போதிய வசதியுடன் நவீன கட்டடங்களை வழங்கும்பொருட்டு, நடப்பு நிதியாண்டில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் காஞ்சிபுரம் மாவட்ட மண்டல இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

    கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களினால் விவசாயிகளுக்கு உண்டாகும் இழப்பினைத் தவிர்க்கவும், நவீன நோய் கண்டறியும் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி கால்நடைகளின் நலனை தொடர்ந்து பாதுகாக்கவும் அண்டை மாநிலங்களில் ஏற்படும் பறவை காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கம் தமிழகத்தில் ஏற்படாவண்ணம் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 2 புதிய கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகள் திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தோற்றுவிக்கப்படும்.

    கால்நடை நோய்கள் குறித்த முன் அறிவிப்பு செய்யும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் ஒத்துழைப்புடன் சென்னையில் ஒரு புதிய கால்நடை நோய் நிகழ்வியல் பிரிவு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நடப்பு நிதியாண்டி ஏற்படுத்தப்படும்.

    கால்நடை பராமரிப்புத் துறையில் கள அலுவலர்களுக்கு 11 புதிய வாகனங்கள் நடப்பு நிதியாண்டில் 67 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×