என் மலர்
உத்தரப் பிரதேசம்
- சுமார் 5 மணி நேரம் போராடி மீட்டனர்.
- அப்பா, நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து வந்து என்னைக் காப்பாற்றுங்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், அடர்ந்த மூடுபனி காரணமாக இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 27 வயது சாப்ட்வேர் இன்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
யுவராஜ் மேத்தா என்ற அந்த இளைஞர், இரவு வேலை முடிந்து கார் மூலம் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது நிலவிய அடர்ந்த மூடுபனி காரணமாகப் சாலையில் எதுவும் தெரியாததால், கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய ஆழமான குழியில் விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை சுமார் 5 மணி நேரம் போராடி காரையும், யுவராஜையும் மீட்டனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்திருந்தார்.
முன்னதாக அவ்வழியே வந்த டெலிவரி ஊழியரும் அவருக்கு உதவ முயன்றுள்ளார். கார் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியதும், யுவராஜ் தனது தந்தைக்கு அலைபேசியில் அழைத்துள்ளார்.
"அப்பா, நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து வந்து என்னைக் காப்பாற்றுங்கள். எனக்குச் சாக விருப்பமில்லை" என்று கதறியுள்ளார். இதை அவரது தந்தை ஊடகங்களுக்கு வேதனையுடன் தெரிவித்தார்.
அந்தச் சாலையில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் என்று யுவராஜின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- ஹனீப் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் தொழுகை நடத்த முறையான எழுத்துப்பூர்வ அனுமதி எதுவும் பெறப்படவில்லை
- கைது செய்யப்பட்டவர்கள் அமைதிக்குப் குந்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் வீட்டில், முன் அனுமதி இன்றி தொழுகை நடத்தியதாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பரேலி மாவட்டத்தின் முகமதுகஞ்ச் கிராமத்தில் உள்ள ஒரு காலி வீடு மதரஸாவாகப் பயன்படுத்தப்பட்டு கடந்த சில வாரங்களாக வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அனுமதியின்றி புதிய மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்தை மீறும் செயலாகும் என்று தெரிவித்து, அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர்.
ஹனீப் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் தொழுகை நடத்த முறையான எழுத்துப்பூர்வ அனுமதி எதுவும் பெறப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அமைதிக்குப் குந்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்குப் ஜாமீன் வழங்கப்பட்டது.
- 2024-ல் 494 குழந்தைகளையும், 2025-ல் 1,032 குழந்தைகளையும் இவரது குழுவினர் மீட்டுள்ளனர்.
- இதற்காகத் தகவல் தருபவர்களின் பெரிய Informers நெட்வொர்க்கையும் இவர் உருவாக்கி வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரெயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கௌரவிக்கப்பட்டது
லக்னோவின் சார்பாக் ரெயில் நிலையத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஆய்வாளர் சந்தனா சின்ஹா, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளார்.
2024-ல் 494 குழந்தைகளையும், 2025-ல் 1,032 குழந்தைகளையும் இவரது குழுவினர் மீட்டுள்ளனர்.
நடைமேடைகளில் தனியாக இருக்கும் குழந்தைகள், கடத்தல்காரர்களுடன் இருப்பவர்களைக் கண்டறியும் விசேஷப் பயிற்சியை தனது குழுவினருக்கு இவர் வழங்கியுள்ளார்.
இதற்காகத் தகவல் தருபவர்களின் பெரிய Informers நெட்வொர்க்கையும் இவர் உருவாக்கி வைத்துள்ளார்.
பீகார் முதல் பஞ்சாப் மற்றும் அரியானா வரையிலான கடத்தல் பாதைகளைக் கண்காணித்து, குழந்தைத் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட பல குழந்தைகளை இவர் மீட்டுள்ளார்.
- டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.
- லக்னோ விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக 230 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் லக்னோ விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இன்று (ஜனவரி 18) காலை 8:46 மணியளவில் டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.
புறப்பட்ட விமானத்தின் கழிவறையில் இருந்த Tissue பேப்பரில் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்ததை விமான பணியாளர்கள் கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து உடனடியாக லக்னோ விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 230 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். சோதனையில் இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
- 2027 உ.பி. சட்டசபை தேர்தலில் பிஎஸ்பி தனித்து போட்டியிடும்.
- சாதி அடிப்படையிலான கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து, 5-வது முறையாக ஆட்சியை பிடிப்போம்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி, நாட்டில் நடக்கும் அனைத்து தேர்தலிகளிலும் தனது கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
லக்னோவில் தனது 70-வது பிறந்தநாளில், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, "சிறு மற்றும் பெரிய தேர்தல்கள் அனைத்திலும் தனித்து போட்டியிடுவதே மிகவும் பொருத்தமானது என்றும், எந்தக் கட்சியுடனும் எந்தவிதமான கூட்டணியிலும் ஈடுபடப் போவதில்லை" என்றார்.
மேலும், "இது குறித்து எந்த குழப்படும் இருக்கக் கூடாது. பிஎஸ்பி உத்தர பிரதேசத்தில் நடக்க இருக்கும் அடுத்த சட்டசபை தேர்தலில் தனித்துதான் போட்டியிடும். பாஜக, காங்கிரஸ் மற்றும் மற்ற சாதி அடிப்படையிலான கட்சிகளுக்கு பிஎஸ்பி சரியான பதிலடி கொடுத்து, உத்தர பிரதேசத்தில் 5-வது முறையாக ஆட்சி அமைக்கும்" என்றார்.
- ரிக்ஷா டிரைவர் சட்டை பைக்குள் இருந்து பாம்பை எடுத்ததால் பரபரப்பு.
- போலீசார் வரவழைக்கப்பட்டு பாம்பு மீட்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தில் இ-ரிக்ஷா டிரைவர் ஒருவர், தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் தீபக் (வயது 39). இவர் இ-ரிக்ஷா டிரைவர் ஆவார். இன்று காலை மதுராவில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். திடீரென தனது பைக்குள் இருந்து சுமார் ஒன்றரை அடி நீளம் உள்ள பாம்பை வெளியில் எடுத்தார். அப்போது பாம்பு படம் எடுப்பதுபோல் தலையை சற்று தூக்கியது.
இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அதிர்ச்சி அளித்தனர். டாக்டர்கள் அவரிடம் பாம்பை வெளியில் விட்டுவிட்டு வரவும் எனக் கூறினர். இந்த பாம்பு தன்னை கடித்து விட்டதாகவும், விஷ முறிவு ஊசி போட வேண்டும் என்றும் டாக்டர்களிடம் அடம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.
பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு பாம்பு மீட்கப்பட்டது. எனினும், அந்த பாம்பு தீபக்கிற்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார்.
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
- வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
வாரணாசி என அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக கலாசார, நாகரிக, கல்வி உறவு இருந்து வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி உத்தரவின்பேரில், காசி தமிழ் சங்கமம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அதன் காரணமாக வாரணாசியில் தமிழ் கற்கும் ஆர்வம், இந்தி மாணவர்களிடம் எழுந்திருப்பதாக கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். வாரணாசியில் உள்ள அரசு குயின் கல்லூரி மாணவர் பாயல் படேல், குறுகிய காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அரசு குயின் கல்லூரி, தினந்தோறும் மாலைநேர தமிழ் வகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் சுமித் குமார் கூறியதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த சந்தியா குமார் சாய் இதற்கு முன்பு மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். அவரிடம் பேசினோம். அவரும் ஆன்லைன் வகுப்பு எடுக்க சம்மதித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, மாலை நேர தமிழ் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அறிந்து, அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளியில் முறையான தமிழ் பாட வகுப்பு அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக பள்ளி முதல்வர் பிரியங்கா திவாரி தெரிவித்தார்.
இதுதவிர, கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும்வகையில், இந்தி கற்றுக்கொடுப்பதற்காக வாரணாசியில் இருந்து 50 ஆசிரியர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
- அந்த மாந்திரீகன், "உனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை நரபலி கொடுத்தால் உனது மகன் குணமடைவான்" என்று கூறியுள்ளான்.
- சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்புவழங்கி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த அனூப் குமார் வர்மா தனது மகன் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் ஒரு மாந்திரீகனை சென்று சந்தித்தார்.
அந்த மாந்திரீகன், "உனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை நரபலி கொடுத்தால் உனது மகன் குணமடைவான்" என்று கூறியுள்ளான்.
இதை குமார் வர்மா, தனது உறவினரின் மகனான 10 வயது விவேக் வர்மாவை கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் கடத்திச் சென்று நரபலி கொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்து கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சுனில் பிரசாத் நேற்று தீர்ப்பு வாசித்தார்.
இந்த வழக்கின் கொடூரத்தன்மை மற்றும் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அனூப் குமாருக்கு மரண தண்டனை விதித்தார்.
மேலும், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட மாந்திரீகன் உட்பட இருவர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
- தன்னை விட்டுச் சென்றதைத் துரோகமாகக் கருதிய முகேஷ், அனிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.
- திருமண நாள் வந்த ஜனவரி 4-ம் தேதியன்று அனிதாவைக் கொல்ல முடிவெடுத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி கடந்த ஜனவரி 4-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அவரது காதலன் முகேஷ் ஜா என்பவரைப் போலீசார் என்கவுண்டரில் காலில் சுட்டுக் கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் ஜாவும் அனிதாவும் ஒரு கோயிலில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சில காலத்திலேயே அனிதா அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
அனிதா தன்னை விட்டுச் சென்றதைத் துரோகமாகக் கருதிய முகேஷ், அனிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.
தங்களது திருமண நாள் வந்த ஜனவரி 4-ம் தேதியன்று அனிதாவைக் கொல்ல முடிவெடுத்தார்.
அன்று இரவு ஆட்டோ ஓட்டிச் சென்ற அனிதாவை வழிமறித்த முகேஷ், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தலைமறைவான முகேஷை, நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்தனர்.
அவர் போலீசாரைச் சுட முயன்றபோது, தற்காப்பிற்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முகேஷின் காலில் குண்டு பாய்ந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க இந்த நடவடிக்கை.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகதிற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஏற்கெனவே அயோத்தியின் பஞ்சகோசி மற்றும் கோசி பரிக்ரமா எல்லைகளுக்குள் மது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தத் தடை 15 கி.மீ சுற்றளவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இந்தப் பகுதிக்குள் அசைவ உணவுகளைத் தயாரிக்கவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது.
மேலும், ராமர் கோயிலை மையமாக வைத்து 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உட்பட்ட பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்யக் கூடாது என்று ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது மக்களின் தனிமனித உணவு உரிமையில் தலையிடும் செயல் என்றும், உணவு விநியோகத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களைப் பாதிக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் 12,55,56,025 பேர் இடம் பிடித்திருந்தனர்.
- 18.70 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. டிசம்பர் 26-ந்தேதி வரை மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டன. பின்னர் அவைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் இன்று வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் 27-ந்தேதி வரை உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் 15,44,30,092 பேர் இடம் பிடித்திருந்தனர். SIR படிவத்தை 12,55,56,025 வாக்காளர்கள் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ளனர். இது 81.30 சதவீதம் வாக்காளர்கள் ஆகும். இதன் மூலம் 18.70 சதவீதம் வாக்காளர்கள் அல்லது 2.89 கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதில் 46.23 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர். 2.57 கோடி வாக்காளர்கள் நிரந்தரமாக வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அல்லது படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்திருக்காதவர்கள். 25.47 லட்சம் வாக்காளர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட இடத்தில் இடம் பிடித்தவர்கள் என உத்தர பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆட்சேபனை தெரிவிப்பவர்கள், விடுபட்டவர்கள் ஜனவரி 6-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆசை வார்த்தை கூறி அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றனர்.
- சிறுமியை மொட்டை மாடியிலிருந்து கீழே தூக்கி வீசியுள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உ.பி.யின் புலந்த்ஷாஹரின் சகோட் பகுதியில், வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை அதே பகுதியால் வசிக்கும் ராஜு, வீறு காஷ்யப் என்ற 2 இளைஞர்கள் ஆசை வார்த்தை கூறி அங்குள்ள கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வைத்து இருவரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
குற்றத்தை மறைக்க, வன்கொடுமை செய்தபின் அந்தச் சிறுமியை மொட்டை மாடியிலிருந்து கீழே தூக்கி வீசியுள்ளனர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதைக் கண்டு குற்றவாளிகள் தப்பியோடினர்.
பலத்த காயமடைந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான 2 போரையும் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது போக்சோ மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.






