என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
- ஆறாவது நாளாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து 'கிடுகிடு'வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந் தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்பனையாகிறது.
ஆறாவது நாளாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
18-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
17-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
16-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-04-2025- ஒரு கிராம் ரூ.110
19-04-2025- ஒரு கிராம் ரூ.110
18-04-2025- ஒரு கிராம் ரூ.110
17-04-2025- ஒரு கிராம் ரூ.110
16-04-2025- ஒரு கிராம் ரூ.110
- 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
- ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை டெண்டர் கோரியுள்ளது.
திருவண்ணாமலையில் 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
2-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முன்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு நேரு, சரண்யா, கல்பனா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பாதிக்கப்பட்ட மாணவியை தாழம்பூர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
- புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தெரிகிறது. நேற்று அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதுபற்றி தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தபோது அவர் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி என்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாழம்பூர் போலீசார் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியிடம் விசாரித்தனர். விசாரணையில் மாணவி படித்து வந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நாமக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி அவரை கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது.
கடந்த மாதம் ராஜேஷ்குமாருக்கு திருமணம் நடைபெற்றதால், தனது கர்ப்பத்தை கலைக்க ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை தாழம்பூர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சென்னையில் வசித்து வரும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மாணவியின் தந்தை தாழம்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.
- சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
- பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று முதல் கட்டாயமாக பயோமெட்ரிக் மூலம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி தெரிவிக்கப்பட்டது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகம், அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிஎஸ்கே-ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
- ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 25-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடக்கும் 5-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.
ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.
- தி.மு.க. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
திருச்சி மாவட்டத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என ஓ. பன்னீர்செல்வம் கண்டனத்துடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. இந்த அடிப்படைத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய இயலாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது.
மேற்படி பகுதியில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக மாநகராட்சி மன்ற உறுப்பினர் முதல் உயர் அதிகாரிகள் வரை அப்பகுதி மக்கள் பலமுறை எடுத்துக் கூறியும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மூன்று பேரின் உயிரிழப்பை இந்த அரசு தடுத்து இருக்க முடியும் என்பதோடு, முப்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் தவிர்த்திருக்க முடியும். இந்தப் பிரச்சனைக்கு தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம் அதே திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், மருதண்டாகுறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட ஏகிரிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு வார காலமாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இதற்குக் காரணமும் குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் என்று கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு 10.5 விழுக்காடு வரை கிருமிகளை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி இருக்கிறது என்றும், ஆனால் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடலில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக கிருமிகள் இருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதன் விளைவாக, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
பாதுகாக்கப்பட்ட குடிநீரைக்கூட வழங்க இயலாத திறமையற்ற அரசாக தி.மு.க. விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு சீரழிவால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்றால், மறுபக்கம் கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
தி.மு.க. அரசின் கவனக் குறைவிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு.
கோவையில் அமைச்சர்கள் தலைமையில் விசைத்தறி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதைதொடர்ந்து, நாளை பொதுக்குழுவை கூட்டி விசைத்தறியை இயக்குவது குறித்து முடிவெடுப்போம் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, 33 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளதாகவும், போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்.
- முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கழகத்தில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மறுமலர்ச்சி தி.மு.கவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை என் உயிர் தலைவர் வைகோ அவர்களிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன். இது போன்ற சூழல் இனி எதிர்காலத்தில் நிகழாது.
திராவிட ரத்னா தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்தின் எதிர்காலம் முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று நான் உறுதி அளித்தேன்.
இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சகோதரர் துரை வைகோ அவர்கள் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று நிர்வாகக் குழுவில் அறிவித்தது எனக்கும், கழகத் தோழர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நானும், முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம். கழகத்தைக் கட்டிக் காப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஏமப்பள்ளி அக்கம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (42), இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு உதயா என்ற ஒரு மகன் உள்ளார்.
இதே போல் திருச்செங்கோடு அருகே உள்ள பொம்மக்கல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (36). இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சக்தி என்ற மகனும், யசோதா என்ற மகளும் உள்ளனர்.
விசைத்தறி தொழிலாளர்களான மயில்சாமியும், மகேந்திரனும் உறவினர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் நேற்று அனிமூர் பிரிவு என்ற இடத்தில் வெள்ளரிக்காய் வாங்கி கொண்டு சாலையோரம் இருந்த புளிய மரத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவர் திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன்பேட்டை நோக்கி லாரி ஓட்டி சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி பலியானார். இதில் மகேந்திரன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மகேந்திரனை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மகேந்திரனும் பலியானார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான லாரி டிரைவர் கார்த்திகேயனை தேடி வருகிறார்கள்.
- ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளனர்.
- இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி இணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்தனர்.
மதிமுக நிர்வாக குழு மேடையில் துரை வைகோவையும், மல்லை சத்யாவையும் வைகோ சமாதானம் செய்து வைத்தார். பின்னர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச சந்தித்து பேசினார்.
அப்போது" நீரடித்து நீர் விலகாது" என்று மல்லை சத்யா, துரை வைகோ கருத்து வேறுபாடு குறித்து வைகோ விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
துரை வைகோ- மல்லை சத்யா இடையேயான கருத்து வேறுபாடு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவின. துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் விட்டு பேசினார்கள். பிரச்சனையை நாகரிகமாக கையாண்டார்கள்.
இனி இதுபோன்ற சூழலுக்கு இடம் கொடுக்க போவதில்லை என மல்லை சத்யா உறுதிமொழி அளித்துள்ளார்.
முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கு பக்கபலமாக இருப்பேன் என மல்லை சத்யா உறுதி அளித்துள்ளார்.
ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளனர்.
இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி இணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், மதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
- கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது.
- முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன் தெரு , பணிக்கன் தெரு, காமாட்சிஅம்மன் தெரு. நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா, மருதாம்பாள் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் உறையூர் பகுதியில் பதட்டமும் பரபரப்பும் உண்டானது. அந்தப் பகுதி மக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்தவாறு நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே மாசுபட்ட குடிநீர் காரணமாக 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவதற்கு மாநகராட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும் அப்பகுதியில் 6 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் தெரிவித்து உள்ளார்.
மேலும், குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்கள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஆங்காங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.






