என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewerage-drinking water"

    • கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது.
    • முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன் தெரு , பணிக்கன் தெரு, காமாட்சிஅம்மன் தெரு. நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா, மருதாம்பாள் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் உறையூர் பகுதியில் பதட்டமும் பரபரப்பும் உண்டானது. அந்தப் பகுதி மக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்தவாறு நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே மாசுபட்ட குடிநீர் காரணமாக 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவதற்கு மாநகராட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எனினும் அப்பகுதியில் 6 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் தெரிவித்து உள்ளார்.

    மேலும், குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்கள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஆங்காங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • ஆமை வேகத்தில் சாக்கடை-குடிநீர் திட்டப்பணிகள் நடக்கிறது.
    • பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வைத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டுக்கு முன்பு வரை 72 வார்டுகள் இருந்தன. பின்னர் கூடுதலாக 28 வார்டுகள் சேர்க்கப்பட்டு 100 வார்டுகளாக மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டது.இதனால் திருப்பரங்குன்றம், கூடல் நகர், ஆனையூர், பெருங்குடி, திருப்பாலை, உள்ளிட்ட பகுதிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

    பல ஆண்டுகளாக இந்த விரிவாக பகுதிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் சரிவர இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.ஆனால் மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர், சாக்கடை வரிகளை முறைப்படி செலுத்தி வருகிறார்கள்.

    பல மாதங்களாக விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் தெருக்கள் உள்ளன. செல்லூர்-குலமங்கலம் சாலை இன்னும் சீரமைக்கப்ப டாததால் வாகனங்கள் செல்லமுடியால் திணறி வருகிறது.

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தபால் தந்தி நகர், பார்க் டவுன், கோசா குளம், ஆனையூர், கூடல் நகர், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வீதிகளும் குண்டும், குழியுமாக உள்ளன. மழை காலங்களில் இந்த தெருக்களில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் சேறும், சகதியும் அலங்கோலமாக காட்சி யளிக்கிறது.

    அங்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளும் சரிவர மூடப்படாததாலும், இந்த பணிகள் மந்த நிலையில் நடப்பதாலும் வீதிகள் சீரமைப்பின்றி வாகனங்களில் செல்லும் பெண்களும், மாணவிகளும் பள்ளங்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

    சில இடங்களில் மட்டும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் ஓரளவு நடைபெற்றுள்ளன. இன்னும் பணிகள் பல்வேறு இடங்களில் அரை குறையாகவே காணப்படுகிறது. பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து சாலைகளில் வாகனங்களில் செல்லவும், நடக்கவும் முடியாமல் வேதனை அடைந்து வருகிறார்கள்.

    மாநகராட்சிக்கு சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் கட்டினாலும் மாநகராட்சி அடிப்படை வசதிகளை செய்து தராமல் தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதாக விரிவாக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக வீதிகள் மழைநீர், மற்றும் சேறும் சகதியுமான காணப்பட்ட நிலையில் தற்போது மேடு, பள்ளங்களால் மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

    மாநகராட்சி அதிகாரிகள் தெருக்களை சீரமைப்பதில் மெத்தனம் காட்டுவதாகவும், புகார் தெரிவிக்கும் மக்க ளிடம் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கே இந்த நிலை என்றால் மற்ற பகுதிகளுக்கு கேட்கவா வேண்டும்?

    கலைநகர், பட்டிமேடு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தற்போது தார் சாலைகள் அமைத்துவிட்டு மற்ற தெருக்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மதுரை மாநகராட்சி நிர்வாகம் இனியாவது விழித்துக் கொண்டு சேதமடைந்த சாலைகள் மற்றும் வீதிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்ட பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வைத்துள்ளனர்.

    ×