என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக்கொண்டே கல்லூரி மாணவர்கள் தண்டவாளத்தை கடந்தனர்.
- எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரெயில் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக்கொண்டே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது நபூல் (20), சபீர் அகமது (20) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந்தேதி சாட்சி விசாரணை தொடங்கியது.
- நீதிபதி நந்தினிதேவி கோவையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
கோவை:
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திரு நாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.
மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக்கதவுகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நந்தினிதேவியும் ஒருவர். அவர் கரூர் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.
இதற்கிடையே பொள்ளாச்சி வழக்கு காரணமாக மறு உத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினிதேவி அதேகோர்ட்டில் பணி புரிவார் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது. இதன் காரணமாக நீதிபதி நந்தினிதேவி கோவையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
தீர்ப்பு அறிவிக்கப்படும் என உத்தரவிடப்பட்டு இருப்பதால் குற்றவாளிகள் அனைவரும் நாளை (13-ந் தேதி) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தீர்ப்பு விவரங்களை நாளை காலையோ அல்லது மதியத்துக்கு பிறகோ நீதிபதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர். இதையொட்டி நாளை கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
- மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதுபவர்கள் செவிலியர்கள்.
- அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
உலக செவிலியர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் முழு ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் சேவை புரிய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
அஇஅதிமுக பொதுச்செயலாளர், அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, எனது சார்பாகவும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தங்களது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நாம் தமிழர் கட்சி சார்பாக நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் இறையோன் முருகப்பெருமானின் வழிபாட்டுத் திருவிழாவான தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை அளித்தது, அழிவின் விளிம்பிலிருந்த காவிரிப் படுகை மாவட்டங்களை மீட்டெடுக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது, நீட் தேர்வு பாதிப்புகளிலிருந்து கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களை ஓரளவாவது பாதுகாக்கும் வகையில் 7.5% இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், உள்ள மகிழ்வுடனும் நலமோடு வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- செவிலியர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், செவிலியர் தின நல்வாழ்த்துகள்.
- ஆண் - பெண் வேறுபாடின்றி , சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர்கள்.
செவிலியர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தன்னலம் துளியும் பாராமல் எல்லோரையும் தங்கள் உன்னத சேவையால் அரவணைத்து, கஷ்டத்திலும் கருணை காட்டி, தளர்விலும் தன்னம்பிக்கை காட்டி, ஆண் - பெண் வேறுபாடின்றி, சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், செவிலியர் தின நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சந்தோசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் எட்டி குட்டை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது70), இவரது மனைவி வித்யா (65), பாஸ்கரன்-வித்யா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளாக வீட்டின் முன் பகுதியிலேயே மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ராமநாதன் என்ற தினேஷ், வாசுதேவன் என்ற ஆனந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வீட்டில் வித்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் பாஸ்கரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடந்தார். இதனை பார்த்த அவர்களது மகன் வாசுதேவன் கதறினார்.
தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை பார்த்த அவர்களது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.
சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கடப்பாறை, சம்மட்டி உள்பட பயங்கர ஆயுதங்களால் தம்பதியை தலையில் அடித்து கொலை செய்து விட்டு பாஸ்கரன் மற்றும் வித்யா அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கொலையாளி சந்தோஷ்
அப்போது வட மாநில வாலிபர் ஒருவர் அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடியதுடன் விசாரித்த போது கொலை செய்யப்பட்ட தம்பதியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் குடும்பத்துடன் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் (32) என்பது தெரிய வந்தது.
அவரை சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களிலும் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேடினர். தொடர்ந்து வீட்டையும் கண்காணித்தனர். அப்போது வெளியல் சுற்றி விட்டு ரத்தக்கரை படிந்த உடையை மாற்றுவதற்காக இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு வந்த போது சந்தோசை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த சந்தோஷ் கடந்த 15 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது உடன் வேலை செய்பவர்கள் மற்றும் பழகியவர்கள் உள்பட பலரிடம் கடன் வாங்கி உள்ளார். பின்னர் அந்த கடனை கட்ட முடியாததால் கடனை கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சந்தோஷ் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.
அப்போது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வந்த போது அங்கு பாஸ்கரன் தம்பதியினர் அணிந்திருந்த நகைகளை பார்த்து அந்த நகைகளை கொள்ளையடித்து கடனை அடைக்க சந்தோஷ் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி நேற்று மதியம் இந்த தம்பதி தனியாக இருப்பதை அறிந்த சந்தோஷ் கடப்பாறை மற்றும் சம்மட்டியுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளார். தொடர்ந்து அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த வித்யாவை சம்பட்டியாலும் கடப்பாறையிலும் முதலில் தலையில் தாக்கினார்.
அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த பாஸ்கரனையும் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகையுடன் தப்பி சென்ற சந்தோஷ் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார்.
இரவாகி விட்ட நிலையில் குளித்து விட்டு உடையை மாற்றுவதற்காக வீட்டிற்கு வந்த போது சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். இன்று சந்தோசை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலை நடந்து 4 மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதால் போலீஸ் கமிஷனர் அதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் போலீசாரை வெகுவாக பாராட்டினார். இந்த கொலையில் கொலையாளியை கைது செய்ய கேமரா பதிவுகள் உதவியதாகவும், ஏற்கனவே செவ்வாய்ப்பேட்டை மற்றும் கிச்சிப்பாளையத்தில் நகை பறிப்பு சம்பவத்தில் கேமரா பதிவால் குற்றவாளியையும் இதே போல 4 மணி நேரத்தில் கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருவண்ணாமலையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- வீடியோ வெளியான நிலையில் அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திருவண்ணாமலையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா ரத்த தானம் செய்வது போல் கையை மட்டும் காண்பித்தபடி வீடியோ வெளியானது.
ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைப்பார் என கூறப்பட்ட நிலையில் வீடியோவுக்காக மட்டும் போஸ் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ரத்த தானம் செய்வது போன்ற வீடியோ வெளியான நிலையில் இதுதொடர்பாக அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
ரத்த தானம் செய்வதற்காக தயார் செய்தார்கள். எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை அளவு எவ்வளவு என்று கேட்டார்கள். 210 என்று சொன்னதும் ரத்தம் கொடுக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். இதில் ஒன்றும் இல்லை.
நான் ரத்த தானம் கொடுத்ததாக பேட்டி கொடுத்தேனா? என விளக்கம் அளித்துள்ளார்.
- கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
இக்கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து தேவநாதசுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஹம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனம் வேணுகோபாலன் சேவை தங்க விமானம், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கருட மகா உற்சவத்தன்று கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் முக்கிய வீதிகளில் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் முக்கிய வீதியில் சாமி வீதி உலா நடைபெற்று பின்னர் நிலையை வந்து அடைந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. மேலும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று இரவு பானக பூஜையும், நாளை மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், நாளை மறுநாள் காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- மிஸ் திருநங்கை 2025 அழகுப்போட்டி நடைபெற்றது.
- முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகரசபை முன்னாள் தலைவர் ஜனகராஜ், சினிமா நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதைத்தொடர்ந்து மிஸ் திருநங்கை-2025 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இறுதிச் சுற்றில் தூத்துக்குடியை சேர்ந்த சக்தி மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த ஜோதா 2-ம் இடத்தையும், விபாஷா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,045-க்கும், ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர். திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்ப்பதற்ற சூழல் காரணமாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.
தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,045-க்கும், ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை ஒரு கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,880-க்கும், சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,040-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360
10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360
09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
08-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
07-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-05-2025- ஒரு கிராம் ரூ.110
10-05-2025- ஒரு கிராம் ரூ.110
09-05-2025- ஒரு கிராம் ரூ.110
08-05-2025- ஒரு கிராம் ரூ.110
07-05-2025- ஒரு கிராம் ரூ.111
- வைகாசி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாள் விழாவில் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.
- இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதத்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின்போது வடகலை - தென்கலை பிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாள் விழாவில் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.
அப்போது மண்டகபடி கண்டருளியபோது வடகலை தென்கலை பிரிவினருக்கும் இடையே மந்திர புஷ்பம் பாடுவதில் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.
இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதத்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.
கடந்த வருடமும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மண்டகப்படியின்போது பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.






