என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.
- கண்காட்சியின் இறுதிநாளான நேற்று ஆண்டின் சிறந்த நாய் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டி:
கோடைவிழாவின் ஒரு பகுதியாக 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் ஹோண்டு, லேப்ரடார், ஜெர்மர் ஷேப்பர்டு, பெல்ஜியன் மாலினாய்ஸ், டாஸ் ஹவுண்ட், கோல்டர் ரீட்டிவர், கிரேட் டேன், பீகிள், சிஹூஹா, நாட்டு ரக நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி உள்பட 56 ரகங்களில் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் நடுவர்களாக டி.கிருஷ்ணமூர்த்தி, மலேசியாவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றினர். கண்காட்சியின் இறுதிநாளான நேற்று ஆண்டின் சிறந்த நாய் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு சொந்தமான இங்கிலீஷ் செட்டர் ரக நாய், சிறந்த நாயாக தேர்வு செய்யப்பட்டது. ஜப்பானை சேர்ந்த நடுவர் சந்தோஷி இந்த நாயை தேர்வு செய்தார்.
மேலும் கொல்கத்தாவை சேர்ந்த ராய் என்பவருக்கு சொந்தமான டாபர் மேன் ரக நாயை தென்னாப்பிரிக்க நடுவர் மைக்கேல் தேர்வு செய்தார்.
- இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.
- பக்தர்கள் நீராடும் இடத்தில் பக்தர்கள் எந்தவிதமான அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் கடல் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பும் அல்லது ஓரிரு நாட்களுக்கு பிறகும் கடல் உள்வாங்குவதும், வெளிவருவதும் இயல்பான ஒன்றாகும்.
இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இன்று 2-வது நாளாக கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கு வதும், சில நேரங்களில் வெளியே வருவதுமாக இருந்து வருகிறது. ஆனாலும் வழக்கமாக பக்தர்கள் நீராடும் இடத்தில் பக்தர்கள் எந்தவிதமான அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் திருச்செந்தூர் கோவில் கடற்கரைக்கும் இடையே உள்ள பகுதியில் சுமார் 60-ல் இருந்து 70 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது.
கோவிலுக்கு வந்த இளைஞர்கள், பக்தர்கள் அந்தப் பாறையின் மீது நின்று விளையாடுவதும், செல்பி எடுத்து மகிழ்வதுமாக உள்ளனர்.
- சம்பா அறுவடைக்கு பின்பு மேட்டூர் அணை தண்ணீர் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்தது.
- பிப்ரவரி 14-ந் தேதி கீழணையில் நீர் மட்டம் முற்றிலும் வறண்ட நிலையில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலமாக 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கன அடியாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி வரை கீழணயில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.
இதனால் ஏரியின் முழு கொள்ளளவான 1465 மில்லியன் கன அடி தண்ணீர் நிரப்ப பட்டதால் ஏரி 2 முறை முழு கொள்ளளவை எட்டியது.
சம்பா அறுவடைக்கு பின்பு மேட்டூர் அணை தண்ணீர் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்தது.
இதன் எதிரொலியாக பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது.அதே சமயம் பாசனத்திற்கும் தண்ணீர் தேவை இல்லாமல் போனது.
பிப்ரவரி 14-ந் தேதி கீழணையில் நீர் மட்டம் முற்றிலும் வறண்ட நிலையில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது. பின் ஏரியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் தினமும் சென்னை மக்களின் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது கடுமையான வெயில் கொளுத்துகிறது. கோடை வெயில் தாக்கத்தால் ஏரியின் மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கன அடியில் தற்போது நீர் மட்டம் படிப்படியாக குறைந்து 600 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.
இருப்பில் உள்ள தண்ணீரை ஒரு மாதம் வரை மட்டுமே சென்னைக்கு அனுப்ப முடியும். அதே வேளையில் மேட்டூரில் 108அடி தண்ணீர் இருப்பு உள்ளதால் வழக்கம் போல் ஜூன் 12-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சர்வதேச அளவில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது.
- 127-வது ஊட்டி மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடந்து முடிந்துள்ளது. ஊட்டி ரோஜா பூங்காவில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய ரோஜா கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.
கோடைவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி உள்ளது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது. 15-ந் தேதி தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்க உள்ளது.
மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி வருகிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார்.
அங்கு கோவை மாவட்ட தி.மு.க.வினர் திரண்டு வந்து முதல்-அமைச்சரை மேள, தாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.
அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் அங்கிருந்து காரில் நீலகிரிக்கு புறப்பட்டார்.
முதல்-அமைச்சர் சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பயணமானார்.
ஊட்டிக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் கோத்தகிரி, கட்டப்பெட்டு, ஊட்டி சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்-அமைச்சரும் காரில் இருந்தவாறு பொதுமக்களையும், கட்சியினரையும் பார்த்து கையசைத்தபடியே சென்றார்.
வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். இன்று அவர் அங்கு தங்கி ஓய்வெடுத்தார். ஊட்டியில் இருக்கும் நாட்களில் அவர் சில அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்.
அதன்படி பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டா வழங்குகிறார். இதுதவிர பழங்குடியின மக்களையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
வருகிற 15-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது ஊட்டி மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள், பூத்து குலுங்கும் மலர்களையும் பார்வையிடுகிறார்.
ஊட்டி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வருகிற 16-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஊட்டியில் இருந்து கோவை வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகை, முதல்-அமைச்சர் செல்லும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜெகதீசன் கடந்த 20 ஆண்டுகளாக இந்து முன்னணியில் செயல்பட்டு வருகிறார்.
- கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள ஒரு மாடி வீட்டில் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் ஜெகதீசன் (வயது 40). இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருப்பதால் குழந்தைகள் இருவரும் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.
ஜெகதீசன் கடந்த 20 ஆண்டுகளாக இந்து முன்னணியில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 7ஆண்டுகளாக இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் மாடியில் அவரது இந்து முன்னணி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 12 மணி அளவில் 2 மர்ம நபர்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளனர்.
இவர்கள் குடியிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளதால் அவர்கள் தான் திரும்பி வந்து சாவி வாங்குவதற்காக கதவை தட்டுகிறார்கள் என நினைத்து கீதா தனது வீட்டின் கதவை திறந்தார்.
அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் திடீரென கீதாவை பிடித்து கழுத்தின் குரல் வளையை அறுத்தனர். மேலும் அவரை சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் கீழே சரிந்து கீதா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த கணவர் ஜெகதீசனையும் மர்ம கும்பல் வெட்டினர். தலை, கை என 3 இடங்களில் சரமாரியாக வெட்டினர்.
சுதாரித்து கொண்ட ஜெகதீசன் வீட்டின் கதவை கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டார். மர்ம நபர்கள் தொடர்ந்து கதவை தட்டினர். ஆனால் கதவை திறக்கவில்லை. பின்னர் வலி தாங்க முடியாமல் ஜெகதீசன் சத்தம் போட்டு உள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கணவன்- மனைவி இருவரையும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெகதீசனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- பள்ளியின் முத்திரை இல்லாத சான்றிதழ் செல்லாது.
- அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகிக்கப்படுகிறது.
சென்னை:
பிளஸ் -2 தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவ-மாணவிகள் உயர்படிப்பில் சேருவதற்கு வசதியாக தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் இன்று (12-ந்தேதி) வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மேல் நிலைப்பள்ளிகளிலும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தேர்வுத் துறை இணைய தளத்தின் வழியாக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தர். என்ஜினீயரிங், கலை அறிவியல், வேளாண்மை, மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. அதனால் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் அவசியமாகிறது. உயர்படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 மதிப்பெண் கல்வி தகுதியாக இருப்பதால் மதிப்பெண் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளனர். இதனால் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தற்காலிக சான்றிதழ் பெற குவிந்தனர். மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து அதில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்திரையிடப்பட்டு அவர் கையொப்பமிட வேண்டும். பள்ளியின் முத்திரை இல்லாத சான்றிதழ் செல்லாது. அதனால் அந்த பணியில் அனைத்து பள்ளி அலுவலகங்களும் ஈடுபட்டன. பகல் 1 மணிக்கு மேல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகிக்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டன. தாங்கள் படித்த பள்ளிகளில் மாணவர்கள் பிளஸ் 2 சான்றிதழ் வாங்குவதற்கு வரிசையில் காத்து நின்றனர்.
- தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை துவங்கக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை மறுநாள் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 17, 18 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12-05-2025 முதல் 14-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கழனிப்பாக்கத்தில் 100 நாள் பணியாளர்கள் ஆலமரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.
- தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மரக்கிளையை அகற்றி பெண் தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆலமரக்கிளை முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கழனிப்பாக்கத்தில் 100 நாள் பணியாளர்கள் ஆலமரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதால் ஆலமரக்கிளை முறிந்து அங்கு அமர்ந்து இருந்தவர்கள் மீது விழுந்தது.
ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் அன்னபூரணி, வேண்டா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மரக்கிளையை அகற்றி தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்கள், தனித் தேர்வர்க்ள தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- நகல் பெற்றதும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டன. தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. அவற்றை மாணவர்கள், தனித் தேர்வர்க்ள தேர்வுத்துறை இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது தவிர விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ-மாணவிகள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கு ரூ.275 செலுத்த வேண்டும். நகல் பெற்றதும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது.
- ஆசனூர் சாலையோரம் கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கரடி மிகவும் ஆபத்தான விலங்காகும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து பயிர்களையும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இதே போல் சிறுத்தையும் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து கால் நடைகளை வேட்டையாடி வருகிறது. ஆனால் கரடி நடமாட்டம் ரொம்ப அரிதாகவே இருக்கும்.
இந்நிலையில் ஆசனூர் சாலையோரம் திடீரென கரடி ஒன்று நீண்ட நேரம் சுற்றிக் கொண்டிருந்தது. கரடி நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் அச்சத்தில் தங்களது வாகனத்தை நீண்ட தொலைவுக்கு முன்பே நிறுத்தி விட்டனர். சிறிது நேரம் ஆசனூர் சாலையை ஒட்டி அங்கும் இங்கும் சுற்றி திரிந்த கரடி பின்னர் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது.
இதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஈரோடு வனப்பகுதியை பொருத்தவரை கரடிகள் நடமாட்டம் மிக அரிதாகவே இருக்கும். தற்போது ஆசனூர் சாலையோரம் கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரடி மிகவும் ஆபத்தான விலங்காகும். அது எந்த நேரம் மனிதர்களை தாக்கும் என்று சொல்ல முடியாது. எனவே ஆசனூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என அறிவித்துள்ளனர்.
- 2 மாடிகள் கொண்ட துணிக்கடையில் தீ விபத்து நிகழ்ந்ததால் ரங்கநாதன் தெரு பரபரப்பாக காணப்பட்டது.
- விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள பிரபல துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 மாடிகள் கொண்ட துணிக்கடையில் தீ விபத்து நிகழ்ந்ததால் ரங்கநாதன் தெரு பரபரப்பாக காணப்பட்டது.
துணிக்கடையில் ஏற்பட்ட தீ பரவி மளமளவென எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகையாக காணப்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தியாகராக நகர் பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வேகம் குறைந்தது.
- சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
மேலும் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழக எல்லையோர காவிரி ஆற்று பகுதிகளிலும் பெய்த மழையின் அளவு குறைந்தது. இதனால் தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு 1500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1200 கன அடியாக குறைந்தது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வேகம் குறைந்தது.
மேலும் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டும் காவிரி ஆற்றின் அழகையும் ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டனர்.






