தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு

மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந்தேதி சாட்சி விசாரணை தொடங்கியது.நீதிபதி நந்தினிதேவி கோவையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு
Published on

கோவை:

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திரு நாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.

மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக்கதவுகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நந்தினிதேவியும் ஒருவர். அவர் கரூர் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.

இதற்கிடையே பொள்ளாச்சி வழக்கு காரணமாக மறு உத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினிதேவி அதேகோர்ட்டில் பணி புரிவார் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது. இதன் காரணமாக நீதிபதி நந்தினிதேவி கோவையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

தீர்ப்பு அறிவிக்கப்படும் என உத்தரவிடப்பட்டு இருப்பதால் குற்றவாளிகள் அனைவரும் நாளை (13-ந் தேதி) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தீர்ப்பு விவரங்களை நாளை காலையோ அல்லது மதியத்துக்கு பிறகோ நீதிபதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர். இதையொட்டி நாளை கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com