என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.
- வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை:
மருத்துவப் படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வு (இளநிலை) 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர். இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
- மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கோவை:
நீலாம்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (4-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேசன் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ, அகிலேஸ் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்டார்.
- பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை நகரம் கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் ஜான்சன் என்பவர் குழித்துறை தடுப்பணை மேல்பகுதியில் வாவுபலி திடல் அருகில் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டில் நின்று குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இவர் 1-ந்தேதி அன்று சுமார் காலை 11.30 மணியளவில் மேற்படி பகுதியில் குளிக்கச் சென்றபோது தடுப்பணையில் வெட்டுமணி பகுதியிலிருந்து குழித்துறை, மதிலகம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ (17) மற்றும் சிறுவன் அகிலேஸ் (12) ஆகிய இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்டார். பீட்டர் ஜான்சன் தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் இறங்கி இரண்டு இளைஞர்களையும் காப்பாற்றி கரை ஏற்றிவிட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டுமிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, பீட்டர் ஜான்சனின் துணிச்சல் மற்றும் அவரது தியாக உணர்வைப் போற்றும் வகையில் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலீஸ் விசாரணையில் ஒரே வீட்டில் உயிரிழந்த இருவரும் கல்லூரி மாணவன்-மாணவி என்பது தெரிய வந்தது.
- காதலி அபிநயாவை ஆகாஷ் சரமாரியாக முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
அம்பத்தூர்:
சென்னை ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 19 வயதே ஆன இளம் ஜோடி வாடகைக்கு குடி வந்துள்ளனர்.
இருவரும் தங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி ரூ.4 ஆயிரம் வாடகை கொடுத்து சிறிய வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக ஐ.சி.எப். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாலிபர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்ட நிலையில் அவருடன் தங்கியிருந்த இளம்பெண் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர்.
போலீஸ் விசாரணையில் ஒரே வீட்டில் உயிரிழந்த இருவரும் கல்லூரி மாணவன்-மாணவி என்பது தெரிய வந்தது. அவர்களது பெயர் ஆகாஷ்-அபிநயா என்பதும் இருவரும் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர் என்பதும் தெரிந்தது.
அபிநயா, பி.ஏ. ஆங்கில பொருளாதாரமும், ஆகாஷ் பி.எஸ்.சி.யும் படித்து வந்த நிலையில் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் இருவரும் புராஜக்ட் வேலைக்காக சென்னை செல்வதாக கூறி விட்டு வந்ததும், இங்கு அவர்கள் கணவன்-மனைவி போல உல்லாசமாக குடும்பம் நடத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
ஐ.சி.எப். வீட்டில் கடந்த 10 நாட்களாகவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது காதலி அபிநயாவை ஆகாஷ் சரமாரியாக முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த அபிநயா சுருண்டு விழுந்து பலியாகி உள்ளார். இதனால் பயந்து போன ஆகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில் எதற்காக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் இருவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இருவரின் மரணம் பற்றியும் பெற்றோர் மற்றும் உறவினர்களுகூகு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். ஆசை ஆசையாய் வளர்த்த தங்களது பிள்ளைகள் இப்படி செய்து விட்டார்களே? என 2 குடும்பத்தை சேர்ந்தவர்களும் வேதனையில் கண்ணீர் வடித்தபடி உள்ளனர்.
அறியாத பருவத்தில் ஏற்படும் காதலுக்கு ஆயுசு குறைவு என்பார்கள். அந்த வரிசையில் ஆகாஷ்-அபிநயாவின் காதலும் சேர்ந்துள்ளது.
இளம் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் ஐ.சி.எம். பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமலாக்கத்துறை இணை இயக்குனராக இருந்த பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- தற்போது இருவரும் வருமான வரித்துறைக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குனராக இருந்த பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கனிமவள வழக்கு, டாஸ்மாக் வழக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன், கதிர் ஆனந்த் எம்.பி. தொடர்புடைய வழக்குகளை மேற்கண்ட இரண்டு அதிகாரிகளும் விசாரித்து வந்தனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களிலும் இருவரும் சோதனை நடத்தி ஆவணங்களையும் திரட்டி அதிரடி விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளான பியூஸ் குமார் யாதவ் மற்றும் கார்த்திக் தசாரி ஆகியோர் அயலக பணியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது இருவரும் வருமான வரித்துறைக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தது இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏழை மக்கள் தொடர் வண்டிகளில் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.
- திருநெல்வேலி செல்ல சாதாரண பெட்டிகளில் 395 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், குளிரூட்டி வசதி கொண்ட வகுப்புகளில் 1,040 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் இயக்கப்படும் சேரன் விரைவு ரெயில், சென்னை - திருவனந்தபுரம் மெயில், நீலகிரி விரைவு ரெயில், நெல்லை விரைவு ரெயில், பொதிகை விரைவு ரெயில் ஆகியவற்றில் உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளைச் சேர்க்க தொடர்வண்டித்துறை முடிவு செய்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த நடைமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
விரைவுத்தொடர்வண்டிகளில் 7 முதல் 9 வரை முன்பதிவு செய்யக்கூடிய படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும். இப்போது அவற்றில் இரு பெட்டிகள நீக்கி விட்டு குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. இதனால், பயணம் செய்வோரின் எண்ணிக்கைக் குறையாது என்றாலும் கூட, மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது ஏழை மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துவதாக இருக்கும்.
தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்கு செல்வதாக இருந்தாலும், பேருந்துகளில் வசூலிக்கப்படுவதைவிட தொடர் வண்டிகளில் படுக்கை வசதிக்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறைவு ஆகும். அதனால் தான் ஏழை மக்கள் தொடர் வண்டிகளில் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து கோவை செல்ல படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 325 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 3ஆம் வகுப்பு ஏசி பெட்டியில் இதே தொலைவுக்கு 835 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருநெல்வேலி செல்ல சாதாரண பெட்டிகளில் 395 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், குளிரூட்டி வசதி கொண்ட வகுப்புகளில் 1,040 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி குளிரூட்டி வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும். சாதாரண வகுப்புகளுக்கான கட்டணத்தைவிட குளிரூட்டி வசதி கொண்ட வகுப்புகளுக்கான கட்டணத்திற்கு குறைந்த அளவே மானியம் வழங்கப்படுகிறது. குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளை அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்டலாம் என்ற எண்ணத்தில் தான் தெற்கு தொடர் வண்டித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
தொடர் வண்டித்துறை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இதில் இலாப நோக்கம் இருக்கக் கூடாது. ஏழை மக்களை பாதிக்கும் வகையில், விரைவுத் தொடர் வண்டிகளில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை தொடர் வண்டித்துறை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல பிரிவுகளில் அவர்களது பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை?
- பாதிக்கப்பட்ட பெண்ணை FIR கொடுக்க வேண்டாமென காவல்துறையினரே தடுத்தது ஏன்?
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன. யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? என்று முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளன என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
திமுக அரசோ அவர்களின் வக்கீலை வைத்துக்கொண்டு, "சார்" பற்றியெல்லாம் பேசினால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்று மிரட்டினால், விசாரணையில் உள்ள குளறுபடிகளை மூடி மறைத்துவிடலாம் என்று நினைத்தது.
எங்கள் சந்தேகமானது, மரியாதைக்குரிய நீதிபதி அளித்த தீர்ப்பின் மீதல்ல, தமிழக காவல் துறையாலும், அரசு வழக்கறிஞர்களாலும் நீதிபதியின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கின் ஆவணங்களை பற்றியும் விசாரணையின் முழுமைத் தன்மையை பற்றியும் தான்!
இன்று எங்கள் பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மிக முக்கியமான பல கேள்விகளை ஆதாரத்தோடு கேட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் மீண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்கிறேன் - யார் அந்த சார்?
1. டிசம்பர் 24-ஆம் தேதி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி ஞானசேகர் ஏன் உடனடியாக விடுவிக்கப்பட்டார்?
2. டிசம்பர் 23-ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு குற்றவாளி ஞானசேகர் தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த போலீஸ் யார்?
3. சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலை. ஊழியர் நடராஜன் ஆகியோரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?
4. அதன் அடிப்படையில், ஆதாரத்தை அழித்தல், குற்றவாளியை பாதுகாத்தல் உட்பட பல பிரிவுகளில் அவர்களது பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை?
5. குற்றவாளி ஞானசேகருக்கும் இவர்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களும், மற்ற தொடர்புகளும் நீதிமன்றத்திலாவது சமர்ப்பிக்கப்பட்டதா இல்லையா?
6. பாதிக்கப்பட்ட பெண்ணை FIR கொடுக்க வேண்டாமென காவல்துறையினரே தடுத்தது ஏன்?
7. அதையும் மீறி துணிச்சலாக புகாரளித்த அந்தப் பெண்ணின் முழு விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட்டது ஏன்?
8. மே மாதம் 16-ம் தேதி போடப்பட்ட FIR-ன் விவரங்கள் என்ன? இன்னும் எத்தனை பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்?
பதிலுக்காக காத்திருப்போம்! என்று கூறியுள்ளார்.
- தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியம். குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 5-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கடந்த 9 மாதங்களாக நடந்த ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து உள்ளது.
- மாமல்லபுரத்தில் நாளை நடைபெற இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் கடைசி படமாக 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப கடந்த 9 மாதங்களாக நடந்த 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து உள்ளது.
இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று முதல் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மாமல்லபுரத்தில் நாளை நடைபெற இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்கிறார். மேலும் அவரது பிறந்தநாள் விழா வருகிற ஜூன் 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. விழாவின் போது அடுத்தக்கட்ட அரசியல் அறிவிப்பை அவர் வெளியிட இருக்கிறார். இதைத் தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
- முரசொலி அலுவலகம் சென்று கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
- செம்மொழி நாள் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டது.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வீட்டில் உள்ள கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு நேராக கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார்.
அங்குள்ள கருணாநிதி யின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். வீட்டில் இருந்த தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.
அதன்பிறகு அண்ணா அறிவாலயம் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து அதன் அருகில் வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முரசொலி அலுவலகம் சென்று கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்று வணங்கினார்.
அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டம் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
அவருடன் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் வந்திருந்தனர். இதன்பிறகு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த கருணாநிதியின் பெருமையை போற்றிடும் வகையில் அவர் பிறந்தநாளான ஜூன் 3-ம் நாள் (இன்று) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க கலைவாணர் அரங்கில் நடைபெற்ற செம்மொழி நாள் விழாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அனைவரையும் தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ் செம்மொழி குறித்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதன் பிறகு நிகழ்ச்சி தொடங்கியதும் முத்தமிழறிஞரின் முத்தமிழ் கலை பண்பாட்டுத் துறை வழங்கும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லோருக்கும் எல்லாமுமாய் என்ற முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த ஆவணப்படம் செய்தித் துறை சார்பில் செம்மொழி நாள் குறும்படம் வெளியிடப்பட்டது.
இவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முனைவர் தாயம்மாள் அறவாணன் என்பவருக்கு 2025-ம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கி விருதுத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கலைஞர் மு.கருணாநிதியின் திருஉருவச் சிலையும் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் செம்மொழி நாள் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்.
விழாவில் தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரையும் வெளியிட்டார்.
அதன் பிறகு சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. செம்மொ ழியின் தனிச்சிறப்பு அதன் தென்மையே-அதன் இள மையே என்று பட்டிமன்ற பேச்சாளர்கள் பேசி னார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- கடந்த 2 நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது.
- வெப்ப காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது.
அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்தது. நேற்று வெப்ப காற்று வீசியது. இந்த நிலையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் 38 செல்சியஸ் (100.4 டிகிரி) வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி இன்று சென்னையில் வெயில் சுட்டெரித்தது. வெப்பம் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்தனர். வெப்ப காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.
அக்னி நட்சத்திர காலத்துக்கு பிறகு வெயிலின் தாக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் நாளை வரை சில பகுதிகளில் வெப்பநிலை 2முதல் 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வானிலை நிபுணர்கள் கூறும்போது, "வட-வட மேற்கு காற்று வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் ஈரப்பதத்துடன் அது இன்னும் வெப்பமாக உணரக்கூடும். மாலையில் மட்டுமே கடல் காற்று வீசுகிறது. இது சிறிய அளவில் பயன் அளிக்கிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆனால் வெப்பநிலையை கணிசமாகக் குறைக்க இது போதுமானதாக இருக்காது. அடுத்த ஒரு வாரத்திற்கு உயர்ந்த வெப்பநிலை தொடர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.
- எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
- அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
இதற்காக பாரதிய ஜனதா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள எடப்பாடி பழனிசாமி மேலும் பல கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
அதே நேரத்தில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி நாளை (4-ந்தேதி) எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். தங்களது தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி எம்.எல்.ஏ.க்கள் செயல்பட வேண்டும் என்று நாளைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்துகிறார்.
மேல்சபை எம்.பி. தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் விளக்கி கூறுகிறார்கள்.






