என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை மக்களை இன்று வறுத்தெடுத்த கொடூர வெயில்
    X

    சென்னை மக்களை இன்று வறுத்தெடுத்த கொடூர வெயில்

    • கடந்த 2 நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது.
    • வெப்ப காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

    பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது.

    அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது.

    இதற்கிடையே அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்தது. நேற்று வெப்ப காற்று வீசியது. இந்த நிலையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் 38 செல்சியஸ் (100.4 டிகிரி) வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    அதன்படி இன்று சென்னையில் வெயில் சுட்டெரித்தது. வெப்பம் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்தனர். வெப்ப காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

    அக்னி நட்சத்திர காலத்துக்கு பிறகு வெயிலின் தாக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது.

    மாநிலம் முழுவதும் நாளை வரை சில பகுதிகளில் வெப்பநிலை 2முதல் 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வானிலை நிபுணர்கள் கூறும்போது, "வட-வட மேற்கு காற்று வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் ஈரப்பதத்துடன் அது இன்னும் வெப்பமாக உணரக்கூடும். மாலையில் மட்டுமே கடல் காற்று வீசுகிறது. இது சிறிய அளவில் பயன் அளிக்கிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    ஆனால் வெப்பநிலையை கணிசமாகக் குறைக்க இது போதுமானதாக இருக்காது. அடுத்த ஒரு வாரத்திற்கு உயர்ந்த வெப்பநிலை தொடர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×