என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டும் என பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறினர்.
- அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என்று கூறினேன்.
தைலாபுரம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அன்புமணியை செயல் தலைவர் என்று குறிப்பிட்டு பேசினார். மேலும் தண்ணீர் விட்டே வளர்த்தோம், இப்பயிரை கண்ணீரால் காத்தோம் என பாடியிருப்பார் பாரதி என்று சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினார்.
இதையடுத்து அவர் கூறியதாவது:-
* நான் தொடங்கிய 34 அமைப்புகளை சேர்ந்த நான் நியமித்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ய வந்தனர்.
* சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
* நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டும் என பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறினர்.
* அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என்று கூறினேன்.
* ஜி.கே.மணி, சிவபிரகாசம் ஆகிய இருவரையும் தூது அனுப்பினேன். இருவரையும் சந்திக்க அன்புமணி சம்மதிக்கவில்லை.
* என்னை நம்ப முடியாது என அன்புமணி கூறினார்.
* கொள்ளு பேரன், பேத்திகளோடு கொஞ்சி விளையாடுங்கள் என என்னிடம் கூறினர்.
* நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று முடிவுக்கு வந்து செய்தியாளர்களை சந்திக்கிறேன்.
* எல்லாம் தனக்கே வேண்டும் என எண்ணுகிறார் அன்புமணி.
* தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களை நான் சந்தித்து கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
- மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியையும் தொடங்கி உள்ளனர்.
- மேட்டூர் அணை வரலாற்றில் 92-வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
காவிரி டெல்டா மாவட்ட மக்ககளின் விவசாயத்திற்கு உயிர் நாடியாகவும், குடிநீருக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் 92 ஆண்டு காலமாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். நீர் இருப்பை பொறுத்து சில ஆண்டுகள் மட்டும் தண்ணீர் முன்னதாகவும், தாமதமாகவும் திறக்கப்பட்டது.
நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் 110 அடிக்கும் மேல் இருந்த நிலையில் அணைக்கு நீர்வரத்தும் கணிசமாக இருந்ததால் குறிப்பிட்ட நாளான இன்று (ஜூன் 12-ந் தேதி) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து அணையில் இருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ தூவினார்.
அப்போது அங்கிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை பூக்கள் தூவி உற்சாகத்துடன் வரவேற்றனர். முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.91 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து 6 ஆயிரத்து 339 கன அடியாகவும் இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ராஜேந்திரன், மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். டி.எம். எம்.பி.க்கள் செல்வகணபதி, மணி, மாதேஸ்வரன், மலையரசன், கலெக்டர் பிருந்தாதேவி, சதாசிவம் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேட்டூர் அணை திறப்பு மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை சென்றடையும். குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியையும் தொடங்கி உள்ளனர்.
அணையின் மேல்மட்ட மதகு வழியாக திறக்கப்பட்ட தண்ணீர், சிறிது நேரத்திற்கு பிறகு அணையையொட்டி உள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும். நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் கட்டப்பட்டுள்ள கதவணைகளில் அமைக்கப்பட்டு உள்ள மின் நிலையங்கள் மூலம் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணை வரலாற்றில் 92-வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. முதலில் குறுவை சாகுபடி, பின்னர் சம்பா, தாளடி சாகுபடி என முப்போக விவசாயத்திற்கு இந்த தண்ணீர் பயன்படும். 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.9 லட்சம் ஏக்கரில் சம்பாவும், 4.41 லட்சம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் நடக்கிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி 19 முறையும், காலதாமதமாக 61 முறையும், ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாக 11 முறை என ஏற்கனவே 91 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்ததாண்டு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஈரோடு மாவட்டம் பவானி வழியாக நேற்று மாலை சேலம் மாவட்டம் மேட்டூருக்கு வந்தார். அவருக்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி, மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி., கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்டாலின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. இதன்பின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையாகிறது. இரு தினங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640
08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-06-2025- ஒரு கிராம் ரூ.119
10-06-2025- ஒரு கிராம் ரூ.119
09-06-2025- ஒரு கிராம் ரூ.118
08-06-2025- ஒரு கிராம் ரூ.117
07-06-2025- ஒரு கிராம் ரூ.117
- தரைத்தளத்திலிருந்து 7-வது தளங்கள் வரை சில்லறை விற்பனைக்கூடங்கள், ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.
- சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மூலம் ரூ.151 கோடியில் மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்படுகிறது.
மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் சென்னை மந்தைவெளி பேருந்து முனையம் சில்லறை, வணிக வளாகத்துடன் நவீனமயமாக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மூலம் ரூ.151 கோடியில் மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்படுகிறது.
கோபுரம்-A:
* இரண்டு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 184-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.
* தரைத்தளத்திலிருந்து ஏழாவது தளங்கள் வரை வணிக / அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பெருநிறுவன அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமைய உள்ளன.
கோபுரம்-B:
* இரண்டு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 318 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.
* தரைத்தளத்திலிருந்து ஏழாவது தளங்கள் வரை சில்லறை விற்பனை இடங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமைய உள்ளன.
- எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்படுகிறது.
- இந்த நடைமுறை தற்போது ராஜஸ்தானில் கடந்த 6-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலை ரெயில்வே நிர்வாகம் தற்போது ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிட்டு வருகிறது. இதனால் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள், ரெயில்களை பிடிக்க தொலைதூரத்தில் இருந்து வரும் பயணிகள் ரெயில்வே இறுதிப்பட்டியல் வெளியிடும் வரை தங்கள் டிக்கெட் நிலை குறித்து தெரியாமல் உள்ளனர்.
ரெயில் பயணிகளிடையே நிலவும் பதற்றத்திற்கு தீர்வு காணும் வகையிலும், பயணிகளுக்கு விரைந்து தகவல் செல்லும் வகையிலும் ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகளுடன் கூடிய பயணிகள் அட்டவணைகளை வெளியிடுவதற்கான வழிமுறையை ரெயில்வே உருவாக்கி வருகிறது.
இந்த நடைமுறை தற்போது ராஜஸ்தானில் கடந்த 6-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் சரி செய்யப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்?
- தொன்மத்துக்கு ஒரு நீதி தொன்மைக்கு ஒரு நீதியா?
சென்னை:
கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒன்றிய அமைச்சர்
ஷெகாவத் அவர்கள்
கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க
இன்னும் அறிவியல் தரவுகள்
தேவையென்று சொல்லித்
தமிழர் பெருமைகளைத்
தள்ளி வைக்கிறார்
ஒரு தமிழ்க் குடிமகனாக
அமைச்சர் அவர்களுக்கு
எங்கள் அறிவின் வலியைப்
புலப்படுத்துகிறேன்
கீழடியின் தொன்மைக்கான
கரிமச் சோதனைகள்
இந்தியச் சோதனைச் சாலையில்
முடிவு செய்யப்பட்டவை அல்ல;
அமெரிக்காவில் ஃபுளோரிடாவின்
நடுநிலையான
சோதனைச் சாலையில்
சோதித்து முடிவறியப்பட்டவை
அதனினும் சிறந்த
அறிவியல் தரவு என்று
அமைச்சர் எதனைக் கருதுகிறார்?
சில தரவுகள்
அறிவியலின்பாற் பட்டவை;
சில தரவுகள்
நம்பிக்கையின்பாற் பட்டவை
ராமர் என்பது ஒரு தொன்மம்
அதற்கு அறிவியல்
ஆதாரங்கள் இல்லை;
நம்பிக்கையே அடிப்படை
கீழடியின் தொன்மை என்பதற்கு
அறிவியலே அடிப்படை
ராமரின் தொன்மத்தை
ஏற்றுக்கொண்டவர்கள்
கீழடியின் தொன்மையை
ஏற்றுக்கொள்ளாதது
என்ன நியாயம்?
தொன்மத்துக்கு ஒரு நீதி
தொன்மைக்கு ஒரு நீதியா?
தமிழர்களின் நெஞ்சம்
கொதிநிலையில் இருக்கிறது
தமிழ் இனத்தின் தொன்மையை
இந்தியாவின் தொன்மையென்று
கொண்டாடிக் கொள்வதிலும்
எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை
"தொன்று நிகழ்ந்த
தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்"
என்ற பாரதியார் பாட்டு
எங்கள் முதல் சான்றாக முன்நிற்கிறது
மேலும் பல தரவுகள்
சொல்வதற்கு உள்ளன
விரிக்கின் பெருகுமென்று
அஞ்சி விடுக்கிறோம்
அங்கீகார அறிவிப்பை
விரைவில் வெளியிட வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6,500 கன அடி யாக தண்ணீர் அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவராக சக்கரவர்த்தி செயல்பட்டு வந்தார்.
- தலையில் காயத்துடன் சக்கரவர்த்தி உடல் மீட்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வழக்கறிஞர் சக்கரவர்த்தி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
தலையில் காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில் சக்ரவர்த்தி இறப்பு கொலையா, விபத்தா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 என்ற அளவில் வைத்து இருந்தது.
- கடந்த பிப்ரவரியில் இது 6.25 என்றும், ஏப்ரல் மாதத்தில் 6, தற்போது ஜூன் மாதத்தில் 5.5 சதவீதம் என்றும் குறைத்து உள்ளது.
சென்னை:
ரிசர்வ் வங்கி குறைத்துள்ள வட்டி குறைப்பால் யாருக்கு லாபம் கிடைக்கும் என்பது குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டியை குறைக்கிறது என்ற செய்தியை அடிக்கடி பார்த்து இருப்போம். வட்டி என்றால் தெரியும். ஆனால் ரெப்போ வட்டி என்றால் என்ன? அது பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுமக்களுக்கு வங்கிகள் வீட்டு கடன், தொழில் கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்குகிறது. இந்த கடன் தொகையை, வங்கிகள் தங்களுக்கு வரும் முதலீட்டு (டெபாசிட்) தொகை மற்றும் வங்கியின் இருப்பு மற்றும் லாபத்தொகையில் இருந்து வழங்குகிறது. ஆனால் இந்த தொகை மட்டுமே போதாது. எனவே வங்கிகள், ரிசர்வ வங்கியிடம் கடன் வாங்குகிறார்கள். இந்த கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி தான் ரெப்போ வட்டி.
வங்கிகள் வழங்கும் கடன்களின் வட்டியும், சேமிப்புகளுக்கு வழங்கும் வட்டியும், ரெப்போ வட்டியை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலோ, நுகர்வோர் செலவுகள் குறைந்தாலோ, தொழில்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளானாலோ, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைக்கும்.
இதன் மூலம் வங்கிகளும் வட்டி விகிதங்களை குறைத்து, கடன்களை அதிக அளவில் வழங்க உதவும். இதனால் பொதுமக்கள் வீடுகள் வாங்குவார்கள், தொழில்துறையில் முதலீடு செய்வார்கள். இதனால் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும்.
இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முக்கிய கருவிகளில் ஒன்றான ரெப்போ வட்டியை, கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி தொடர்ந்து குறைத்து வருகிறது.
அதாவது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 என்ற அளவில் வைத்து இருந்தது. அதனை கடந்த பிப்ரவரியில் இது 6.25 என்றும், ஏப்ரல் மாதத்தில் 6, தற்போது ஜூன் மாதத்தில் 5.5 சதவீதம் என்றும் குறைத்து உள்ளது. ரெப்போ வட்டி ஒரு சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் 0.5 சதவீதம் அளவுக்கு வீட்டுகடன் மற்றும் இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து உள்ளது.

யாருக்கு லாபம்?
உதாரணமாக 20 லட்சம் வீட்டு கடன், 20 ஆண்டு தவணையில் ஒருவர் 9 சதவீத வட்டியில் கடன் வாங்கி இருந்தால், அவரது மாதத்தவணை ரூ.17,995 இருக்கும். அது இப்போது 8.5 சதவீத வட்டியாக குறைக்கப்பட்டுள்ளதால் மாதத்தவணை ரூ.17,356 ஆக குறையும். இது மாதத்திற்கு ரூ.639 என்ற சிறிய தொகையாக தெரிந்தாலும், 20 ஆண்டுகளுக்கு இதனை கணக்கீடும் போது ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 133 லாபம் கிடைக்கும்.
அதேபோல் சேமிப்பு மற்றும் டெபாசிட்களுக்கும் 0.5 சதவீதம் குறைய உள்ளது. அதனால் அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் முதிர்வு தொகை குறைவாகவே இருக்கும். உதாரணமாக ஒருவர் 7 சதவீத வட்டியில் 7 ஆண்டுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் செய்து இருந்தால், இந்த வட்டி இப்போது 6.5 சதவீதமாக குறைக்கும் போது முதிவு தொகையில் ரூ.27 ஆயிரத்து 496 நஷ்டம் ஏற்படும்.
எனவே ரெப்போ வட்டி குறைப்பு என்பது கடன் வாங்கியவர்களுக்கு லாபமாகவும், சேமிப்பு செய்பவர்களுக்கு நஷ்டமாகவும் இருக்கும்.
எனவே, ரெப்போ வட்டியில் ஏற்படும் மாற்றம் என்பது நமது அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான பொருளாதார முடிவாகும். இந்த வட்டி விகிதத்தின் உயர்வும், தாழ்வும், நமது செலவுகள், சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை நேரடியாக பாதிக்கக்கூடியவை ஆகும்.
- 8 மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் சென்றுள்ளனர்.
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மாவட்ட கலெக்டர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோவை, நீலகிரியில் கனமழை எச்சரிக்கை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் சென்றுள்ளனர்.
- பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!
- அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல!
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை "ஓசி" என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.
இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை "ஓசி" என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் "ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க" என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் "அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000" என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!
ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ
அறிவாலயம் தலைவர்கள் காட்டாதது ஏன்?
அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்! என்று கூறியுள்ளார்.
- முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
- வெயிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக இருப்பதுதான் திராவிட மாடல்.
இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை delivery செய்யும் gig ஊழியர்களுக்குக் கழிப்பறை, AC, charging point, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் Scandinavian வடிவமைப்பில் இணையத் தொழிலாளர் கூடம் (lounge) முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு style!
வெயிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக, துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் DravidianModel!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






