என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரிசர்வ் வங்கி குறைத்துள்ள வட்டி குறைப்பால் யாருக்கு லாபம்?
    X

    ரிசர்வ் வங்கி குறைத்துள்ள வட்டி குறைப்பால் யாருக்கு லாபம்?

    • கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 என்ற அளவில் வைத்து இருந்தது.
    • கடந்த பிப்ரவரியில் இது 6.25 என்றும், ஏப்ரல் மாதத்தில் 6, தற்போது ஜூன் மாதத்தில் 5.5 சதவீதம் என்றும் குறைத்து உள்ளது.

    சென்னை:

    ரிசர்வ் வங்கி குறைத்துள்ள வட்டி குறைப்பால் யாருக்கு லாபம் கிடைக்கும் என்பது குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டியை குறைக்கிறது என்ற செய்தியை அடிக்கடி பார்த்து இருப்போம். வட்டி என்றால் தெரியும். ஆனால் ரெப்போ வட்டி என்றால் என்ன? அது பற்றி தெரிந்து கொள்வோம்.

    பொதுமக்களுக்கு வங்கிகள் வீட்டு கடன், தொழில் கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்குகிறது. இந்த கடன் தொகையை, வங்கிகள் தங்களுக்கு வரும் முதலீட்டு (டெபாசிட்) தொகை மற்றும் வங்கியின் இருப்பு மற்றும் லாபத்தொகையில் இருந்து வழங்குகிறது. ஆனால் இந்த தொகை மட்டுமே போதாது. எனவே வங்கிகள், ரிசர்வ வங்கியிடம் கடன் வாங்குகிறார்கள். இந்த கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி தான் ரெப்போ வட்டி.

    வங்கிகள் வழங்கும் கடன்களின் வட்டியும், சேமிப்புகளுக்கு வழங்கும் வட்டியும், ரெப்போ வட்டியை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலோ, நுகர்வோர் செலவுகள் குறைந்தாலோ, தொழில்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளானாலோ, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைக்கும்.

    இதன் மூலம் வங்கிகளும் வட்டி விகிதங்களை குறைத்து, கடன்களை அதிக அளவில் வழங்க உதவும். இதனால் பொதுமக்கள் வீடுகள் வாங்குவார்கள், தொழில்துறையில் முதலீடு செய்வார்கள். இதனால் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும்.

    இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முக்கிய கருவிகளில் ஒன்றான ரெப்போ வட்டியை, கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி தொடர்ந்து குறைத்து வருகிறது.

    அதாவது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 என்ற அளவில் வைத்து இருந்தது. அதனை கடந்த பிப்ரவரியில் இது 6.25 என்றும், ஏப்ரல் மாதத்தில் 6, தற்போது ஜூன் மாதத்தில் 5.5 சதவீதம் என்றும் குறைத்து உள்ளது. ரெப்போ வட்டி ஒரு சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் 0.5 சதவீதம் அளவுக்கு வீட்டுகடன் மற்றும் இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து உள்ளது.



    யாருக்கு லாபம்?

    உதாரணமாக 20 லட்சம் வீட்டு கடன், 20 ஆண்டு தவணையில் ஒருவர் 9 சதவீத வட்டியில் கடன் வாங்கி இருந்தால், அவரது மாதத்தவணை ரூ.17,995 இருக்கும். அது இப்போது 8.5 சதவீத வட்டியாக குறைக்கப்பட்டுள்ளதால் மாதத்தவணை ரூ.17,356 ஆக குறையும். இது மாதத்திற்கு ரூ.639 என்ற சிறிய தொகையாக தெரிந்தாலும், 20 ஆண்டுகளுக்கு இதனை கணக்கீடும் போது ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 133 லாபம் கிடைக்கும்.

    அதேபோல் சேமிப்பு மற்றும் டெபாசிட்களுக்கும் 0.5 சதவீதம் குறைய உள்ளது. அதனால் அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் முதிர்வு தொகை குறைவாகவே இருக்கும். உதாரணமாக ஒருவர் 7 சதவீத வட்டியில் 7 ஆண்டுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் செய்து இருந்தால், இந்த வட்டி இப்போது 6.5 சதவீதமாக குறைக்கும் போது முதிவு தொகையில் ரூ.27 ஆயிரத்து 496 நஷ்டம் ஏற்படும்.

    எனவே ரெப்போ வட்டி குறைப்பு என்பது கடன் வாங்கியவர்களுக்கு லாபமாகவும், சேமிப்பு செய்பவர்களுக்கு நஷ்டமாகவும் இருக்கும்.

    எனவே, ரெப்போ வட்டியில் ஏற்படும் மாற்றம் என்பது நமது அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான பொருளாதார முடிவாகும். இந்த வட்டி விகிதத்தின் உயர்வும், தாழ்வும், நமது செலவுகள், சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை நேரடியாக பாதிக்கக்கூடியவை ஆகும்.

    Next Story
    ×