என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
- வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

அந்த வகையில் இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்துக்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 274 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120
25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560
24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160
22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-12-2025- ஒரு கிராம் ரூ.254
25-12-2025- ஒரு கிராம் ரூ.245
24-12-2025- ஒரு கிராம் ரூ.244
23-12-2025- ஒரு கிராம் ரூ.234
22-12-2025- ஒரு கிராம் ரூ.231
- திட்டம் குறித்த விரிவான விவரங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விரிவான ஆய்வுக்காக பொது-தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாரணாசி, புவனேஸ்வரம், அமிர்தசரஸ், ராய்ப்பூர், திருச்சி உள்பட 11 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதை மத்திய அரசு வேகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் ஆய்வு செய்தது.
திட்டம் குறித்த விரிவான விவரங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான ஆய்வுக்காக பொது-தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி உள்ளிட்ட 5 பெரிய விமான நிலையங்களும், திருப்பதி உள்ளிட்ட 6 சிறிய விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டு குத்தகைக்கு விடப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி முரளிதர் மோஹோல் ஏற்கனவே கூறியுள்ளார்.
- நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
- குறளகம் நோக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல்துறையினர் ஆயத்தமாக உள்ளனர்.
பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறளகம் நோக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல்துறையினர் ஆயத்தமாக உள்ளனர்.
- பெண்களின் முன்னேற்றம், குழந்தைககளின் வாழ்க்கைகாக தான் இதுபோன்ற நிகழ்ச்சியை நாம் நடத்துகிறோம்.
- அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி அண்ணனுடன் தங்கைகளாக நிற்க வேண்டும்.
மயிலாடுதுறை:
பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, 'சிங்கப்பெண்ணே எழுந்து வா' மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளார். மயிலாடுதுறையில் பெண்கள் மத்தியில் சவுமியா அன்புமணி கலந்துரையாடினார். அவருக்கு பெண்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மயிலாடுதுறை தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சவுமியா அன்புமணி பங்கேற்று பேசியதாவது:-
பெண்களின் முன்னேற்றம், குழந்தைககளின் வாழ்க்கைகாக தான் இதுபோன்ற நிகழ்ச்சியை நாம் நடத்துகிறோம்.
டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று கொண்டு வந்ததில் அன்புமணியின் முயற்சியும், போராட்டத்தையும் யாரும் மறுக்க முடியாது.
கொள்ளையடித்த பணத்தில் இருந்து ஓட்டுக்காக பணம் கொடுத்தனர். ஆனால் இப்போது மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகின்றனர். தேர்தல் நெருங்கி வரும்போது ஆயிரம் ரூபாய் எத்தனை ரூபாயாக பெருகுகிறது என்று தெரியாது. நீங்கள் ஏமாற வேண்டாம்.
பெண்கள் வெற்றி பெற்றால் தங்கள் பகுதிகளுக்கு வேண்டிய சாலை வசதி, மின்விளக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உங்களால் செய்து கொள்ள முடியும்.
எனவே அதிக அளவில் மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட வேண்டும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மது கடைகள் மூடப்படும், நமது குழந்தைகளின் எதிர்காலம் காக்கப்படும். எனவே, அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி அண்ணனுடன் தங்கைகளாக நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
- 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. மேலும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ, ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 79 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் வாக்காளர்கள் சென்று உரிய படிவங்களை வழங்கி பயனடையலாம்.
- சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை கட்டணம் உயர்வு இல்லை.
- பெரிய அளவிலான செலவுகளை சமாளிக்க இந்த ரெயில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தொலைதூரப் பயணிகளின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. பயணம் செய்வதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், 4 மாத இடைவெளியில் டிசம்பர் 26-ந்தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக ரெயில்வே வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, நேற்று நாடு முழுவதும் புதிய ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இந்த புதிய அறிவிப்பின்படி, மின்சார ரெயில் மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை கட்டணம் உயர்வு இல்லை.

பயணிகள் ரெயில்களில், சாதாரண 2-வது வகுப்பு, படுக்கை வசதி பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டது. அதாவது, 216 கிலோ மீட்டர் முதல் 750 கிலோ மீட்டர் வரையில் ரூ.5-ம், 751 கிலோ மீட்டர் முதல் 1,250 கிலோ மீட்டர் வரையில் ரூ.10-ம், 1,251 கிலோ மீட்டர் முதல் 1,750 கிலோ மீட்டர் வரை ரூ.15-ம், 1,751 கிலோ மீட்டர் முதல் 2,250 கிலோ மீட்டர் வரையில் ரூ.20-ம் உயர்ந்துள்ளது.
இதேபோல, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத், சதாப்தி, ராஜ்தானி, அந்தியோதியா, அம்ரித் பாரத் உள்ளிட்ட அனைத்து ரெயில்களுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டண உயர்வு பொருந்தும் என ரெயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடிக்கு கூடுதலாக ரூ.10-ம், சென்னையில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு ரூ.15-ம் கூடுதலாகி இருக்கிறது. சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.45 அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான செலவுகளை சமாளிக்க இந்த ரெயில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ஒரே ஆண்டில் 2 முறை ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் 2026-ம் ஆண்டு ரெயில் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என ரெயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

- அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்?
- முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி என தமிழகம் முழுவதும் எடுத்துக் கூறியது யார் என்றார் ஜி.கே.மணி.
சேலம்:
பா.ம.க.வில் இருந்து ஜி.கே.மணியை நீக்குவதாக அன்புமணி அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில், சேலத்தில் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
46 ஆண்டு காலம் நான் ராமதாசுடன் பயணிக்கிறேன். 25 ஆண்டு காலம் கட்சி தலைவராக இருந்திருக்கிறேன்.
என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை.
கட்சியில் ஒருவரைச் சேர்க்கவும், நீக்குவதற்கான அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது.
பா.ம.க.வில் சேர வேண்டும் என்று அன்புமணி நினைத்தால், ராமதாசை நேரில் சென்று பார்க்க வேண்டும். அவர் சேர்த்துக் கொண்டால் கட்சியில் இருங்கள்.
அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சண்டை போட்டு வாதாடியவன் நான்.
அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்? கொஞ்சம்கூட மனசாட்சி வேண்டாமா?.
பா.ம.க. என்ற ஆலமரம் ராமதாஸ்தான். தற்போது ராமதாஸ் கை ஓங்கிக் கொண்டிருக்கிறது.
எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. கூட்டணி குறித்து ராமதாஸ் நல்ல செய்தியை அறிவிப்பார் என தெரிவித்தார்.
- கழகத்தினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
- வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் புரசை எம்.கிருஷ்ணன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்திற்கு களங்கமும் அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி முன்னாள் செயலாளர் விசு (எ) விசுவாசி துறைமுகம் கிழக்கு பகுதி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏ.ஏ.கலையரசு ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழகத்தினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
எழும்பூர் மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ.சம்பத் குமார், பகுதி மகளிர் அணி செயலாளர் எம்.இளவரசி, பகுதி மாணவர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் புரசை கிருஷ்ணன் ஆகியோர் இன்று முதல் அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் புரசை எம்.கிருஷ்ணன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் சந்தனக்கூடு தொடங்கியது.
- ஏற்கனவே 3 நீதிபதிகள் அமர்வு கந்தூரி நடத்த தடை விதித்துள்ள நிலையில் தர்கா கமிட்டி கந்தூரி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
மதுரை:
மதுரையைச் சேர்ந்த மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவை கமிட்டி அமைத்து நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு கடந்த 21-ந் தேதி தொடங்கி ஜனவரி 6-ந் தேதி வரை நடைபெறும் என தர்கா தரப்பில் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் சந்தனக்கூடு தொடங்கியது. இந்நிலையில் தர்கா தரப்பில் அச்சிடப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்களில் கந்தூரி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட கூடாது என்றும் அதற்கான தீர்வை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தர்கா தரப்பில் இதுவரை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக தெரியவில்லை.
இந்நிலையில் இந்த வருடம் கந்தூரி நடைபெறும் என்றும், அதற்காக மாவட்ட நிர்வாக தரப்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது எனவும் செய்தித் தாள்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 நீதிபதிகள் அமர்வு கந்தூரி நடத்த தடை விதித்துள்ள நிலையில் தர்கா கமிட்டி கந்தூரி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜோதி ராமன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஏற்கனவே மூன்று நீதிபதிகள் மரபு கந்தூரி விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், தர்கா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
29-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
30-ந்தேதி தென்கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
31 மற்றும் 01-ந்தேதிகளில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையே இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட 2 சொகுசு கார்களை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 79 செல்போன்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன்களை திருடுவது அதிகரித்து வந்தது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் கிரிஷ் யாதவ் உத்தரவின் பேரில் அவிநாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மேற்பார்வையில் அவிநாசி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்துமாரியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தனிப்படை காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு செல்போன் திருடர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
நேற்று மாலை அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்த டிவைன், திருவண்ணாமலை மாவட்டம் எருமூண்டியை சேர்ந்த தனசேகர் ஆகியோரிடம் செல்போன்களை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அவிநாசியை அடுத்து பழங்கரை அருகே கோவை - சேலம் 6 வழிச்சாலையோரம் உள்ள டிரக் பார்க்கிங்கை போலீசார் கண்காணித்தபோது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட 2 சொகுசு கார்களை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் மேற்கு கோதவரியை சேர்ந்த நக்கா ஹரிஷ் (வயது 44), குருமில்லி பகுதியை சேர்ந்த ராஜூ (31), பாஷா (25), கும்மிரிகுண்டா பிரகாஷ் (32) மற்றும் ஒடிசா மாநிலம் சோரடாவை சேர்ந்த சிறுவன் என தெரியவந்தது. கார்களை சோதனை செய்த போது, அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் 2பேரிடம் திருடப்பட்ட தலா ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களும் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 79 செல்போன்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று செல்போன் திருட்டில் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து 5பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் சிறுவனை கோவை சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 4பேரும் அவிநாசி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செல்போன்களை திருடிய ஆந்திர மாநில கும்பலை அதிரடியாக கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி., அசோக் கிரிஷ் யாதவ் பாராட்டினார்.
- சங்கராபுரம் மக்களுக்காக ரூ.18 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
- சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.9 கோடி மதிப்பில் புதிய தீயணைப்புத்துறை கட்டிடம் கட்டப்படும்.
கள்ளக்குறிச்சியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன்பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
சிறந்த பொதுப் போக்குவரத்தைக் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு தான் இருக்கிறது.
உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு பகுதியில் ரூ.10 கோடியில் புதிய சிப்காட் அமைக்கப்படும்.
சங்கராபுரம் மக்களுக்காக ரூ.18 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.9 கோடி மதிப்பில் புதிய தீயணைப்புத்துறை கட்டிடம் கட்டப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு.
கல்லூரி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.
திமுக அரசின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனையில் 5 சதவீமாவது அதிமுக ஆட்சியில் இருந்ததா?
நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருங்கள், நாங்கள் முன்னேறி சென்று கொண்டே இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.






