என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
- ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
- 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. மேலும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ, ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 79 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் வாக்காளர்கள் சென்று உரிய படிவங்களை வழங்கி பயனடையலாம்.






