என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 118 ஏக்கர் இடத்தில் ஏரியை உருவாக்க முடியும்.
    • 118 ஏக்கர் நிலம், பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்' என, யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது.

    மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.

    கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 118 ஏக்கர் இடத்தில் ஏரியை உருவாக்க முடியும். இதனால் மழை பாதிப்பில் இருந்து வேளச்சேரியை பாதுகாக்கலாம். ஆனால், 118 ஏக்கர் நிலம், பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏன் ஏரி அமைக்கக்கூடாது? என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.

    இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

    இதனால் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமைப் பூங்கா அமைப்பதற்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஏரி அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணையில், தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை பசுமைப் பூங்கா அமைக்க நடவடிக்கை கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது .

    • நதிகளின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற உத்தரவு
    • அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் உத்தரவு

    பக்கிங்ஹாம் கால்வாய் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கனகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அதிமுக-வுடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து பதட்டத்திலும், விரக்தியில் இருக்கிறார்கள்.
    • தோற்கப்போவது உறுதி என்பது அவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது படி படி என்கிறது திராவிட மாடல். படிக்காதே என்கிறது காவி கும்பல் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறாரே? என்ற கேள்விக்கு "முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

    ஓரணியில் திரள்வோம், ஓரணியில் சேருவோம் என்கிறார். இப்போது ஓரணியில் சேர என்ன அவசரம் வந்துள்ளது. படிப்பதற்கு பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை கொடுத்திருக்கிறார். தோல்வி பயத்தில் இருக்கிறார்கள். அமித் ஷா சென்னை வந்து, அதிமுக-வுடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து பதட்டத்திலும், விரக்தியில் இருக்கிறார்கள்.

    தோற்கப்போவது உறுதி என்பது அவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது. தோல்வி பயத்தில் அடுக்கு மொழியில் பேசிகிட்டு.. இதே காவி கும்பல் உடன்தான் கலைஞர் கூட்டணி வைத்தார். இந்த காவி கும்பல் உடன்தான் அன்னைக்கு இருந்தார்கள்" என்றார்.

    மேலும், "பாஜக உடன் கூட்டணி வைக்கும்போது சங்கிகளாகத்தான் இருந்தார்கள். பாஜக-விடம் அதிமுக-வை அடகு வைத்ததாக சொல்கிறார்கள். அப்படி கிடையாது. காங்கிரஸ் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுக-விடம் அடகு வைத்துள்ளார்களா?. இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

    அதிமுக-வை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி கொண்டிருக்கிறது எனச் சொல்கிறார்கள். அதைப் பற்றி அக்கறை அவர்களுக்கு எதற்கு. பாஜக, திமுக உடன் கூட்டணி வைத்திருந்தது. அப்போது அவர்களை விழுங்கினோமா?. தோல்வி பயத்தில் ஏதாவது சொல்ல வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு நல்ல ஆட்சி வர வேண்டும். திமுக 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்கிறார்கள். நாங்கள் 234 தொகுதிகளிலும் ஜெயிப்வோம்" என்றார்.

    • ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவானர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக-வுக்கு உடந்தையாக இருந்து விடாதீர்கள்.
    • உங்களுக்கு திமுக முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த பேட்டி கொடுங்கள்.

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்த நிலையில் பொதுமக்களிடையே பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த கூட்டத்தை நான் எழுச்சி பயணத்தில் மேற்கொள்கின்ற ஒரு நிகழ்ச்சியாக பார்க்கவில்லை. நமது வேட்பாளர் வெற்றிபெற்ற வெற்றி விழா நிகழ்ச்சியாக பார்க்கிறோம். அந்த அளவிற்கு மக்களிடையே எழுச்சி பார்க்கப்படுகிறது.

    திமுக ஆட்சி எப்போது அகற்றப்பட வேண்டும் என்ற நிலைலேயே மக்கள் இருக்கின்றனர். திமுக 200 தொகுதிகளின் வெற்றிபெறும் என்பதை கனவு காண்கலாம். ஆனால் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.

    திமுக ஆட்சி அமைத்து 50 மாதங்கள் உருண்டோடிவிட்டது. இந்த 50 மாதங்களில் குன்னம் தொகுதிக்கு ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை கொண்ட வந்திருக்கிறார்களா? 50 மாதங்களில் மக்களை தந்திரமாக ஏமாற்றி திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

    மாதந்தோறும் மகளிர் உதவித்தொகையாக 1000 ரூபாய் கொடுப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். அவர் கொடுக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கிறார்கள். சொந்த பணத்தில் கொடுக்கிற மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுக கடுமையான அழுத்தம் கொடுத்ததால் 28 மாதங்கள் கழித்து மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த உடனேயே கொடுத்ததாக தவறான கருத்தை பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்.

    மேலும் 30 லட்சம் பேருக்கு வழங்கப்படும் எனக் கூறுகிறார். மக்கள் மீது பரிதாபப்பட்டு கொடுக்கவில்லை. அவருக்கு 30 லட்சம் குடும்பத்தினருடைய வாக்கு வேண்டும். அதனால் கொடுப்பதாக சொல்கிறார். ஆட்சிக்கு வந்த பிறகு 10 சதவீதம் வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றியுள்ளனர்.

    100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறினார். சம்பளத்தை உயர்த்துவோம் என்று கூறினார். உயர்த்தினாரா? 100 நாள் வேலைத்திட்டம் 50 நாட்களாக தேய்ந்துவிட்டது. மு.க. ஸ்டாலின் எப்படி ஏழை மக்களை ஏமாற்றுகிறார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

    கண்ணில் பார்க்க முடியாத காற்றை வைத்து ஊழல் செய்த கட்சி திமுக. திமுக அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்கள். நாட்டுக்கு நன்மை செய்வோம் என்று இவர்கள் பேசுகிறார்கள். இவர்களை நம்பி ஆட்சியை கொடுத்த காரணத்தினால் மக்கள் துன்பத்தில் வாடிக் கொண்டிக்கிறார்கள்.

    1.05 கோ பேரிடம் மனு வாங்கப்பட்டு 1.01 லட்சம் மனுவுக்கு தீர்வு காணப்பட்டதாக சொல்கிறார்கள். என்னென்ன மனுக்கள் கொடுக்கப்பட்டன? எந்தெந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது? என விளக்கம் கொடுங்கள். விளக்கம் கொடுக்கப்பட வில்லை என்றால், அதிமுக ஆட்சி அமைத்த பிறகு இப்படி தவறாக புள்ளி விவரங்கள் கொடுத்ததற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்கள் செய்தி தொடர்பு துறை மூலமாகத்தான் அரசு செய்திகள் வெளியிடப்படும். இதுதான் நடைமுறையில் உள்ளது. திமுக மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. செல்வாக்கை இழந்ததால் எப்படியாவது மக்களை குழப்பி, ஆட்சி வர வேண்டும். திட்டமிட்டு நான்கு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றைய தினம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பேட்டி கொடுக்கிறார்.

    ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவானர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக-வுக்கு உடந்தையாக இருந்து விடாதீர்கள். உங்களுக்கு திமுக முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த பேட்டி கொடுங்கள். அரசு அதிகாரிகளாக இருந்து கொண்டு தவறான புள்ளி விவரங்களை கொடுக்காதீர்கள். மக்களை குழப்பாதீர்கள். அதற்கு முழு பொறுப்பு நீங்கள்தான் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்தான் ஒரு இயக்கத்தின் தூண், சிகரம். அவங்களோட அனுபவம்தான் பெரிய பலம் அப்டிங்றத சொல்ல மறந்துட்டேன்.
    • ரஜினிகிட்ட போனில் பேசினேன். ரொம்ப தேங்ஸ் ரஜினி. இப்போதாவது மறக்காம பேசுனீங்களேன்னு சொன்னேன்.

    சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் விற்பனையில் 1 லட்சம் பிரதிகளைக் கடந்திருப்பதைக் கொண்டாடும் வகையில், வேள்பாரி வெற்றிப் பெருவிழா கடந்த வெள்ளியன்று நடந்திருந்தது.

    அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். ரஜினிகாந்த் பேசுகையில், 'எ.வ.வேலுவோட புத்தக வெளியீட்டு விழாவில், திமுக-வில் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்களை சமாளிக்கிறது கஷ்டம்னு பேசியிருந்தேன். அதுக்கு கிடைச்ச கைத்தட்டுல, அடுத்து சொல்ல வந்த 'ஆனாலும் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்தான் ஒரு இயக்கத்தின் தூண், சிகரம். அவங்களோட அனுபவம்தான் பெரிய பலம் அப்டிங்றத சொல்ல மறந்துட்டேன்" என நகைச்சுவையாகப் பேசியிருந்தார்.

    திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வேலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ரஜினிகாந்தின் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு துரைமுருகன் "ரஜினிகிட்ட போனில் பேசினேன். ரொம்ப தேங்ஸ் ரஜினி. இப்போதாவது மறக்காம பேசுனீங்களேன்னு சொன்னேன்" என பதில் அளித்தார்.

    முன்னதாக,

    சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, "ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்துவிடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமில்லை. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டுசெல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளனர். அமைச்சர் துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர்" என்று தெரிவித்தார்.

    ரஜினிகாந்த்திடம் இந்த பேச்சு திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, "வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது" என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக ரஜினிகாந்த் கூறுகையில் "துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும், எனக்கு வருத்தம் இல்லை. எங்கள் நட்பு எப்போதுமே தொடரும்" எனத் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

    • ஆதவ் அர்ஜுனா அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் உள்ளது.
    • அலுவலகம் அருகே ஆயுதங்களுடன் சிலர் நோட்டமிட்டதாக புகார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவரது அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகம் அருகே சிலர் ஆயுதங்களுடன் நோட்டமிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    • குடிநீரேற்று நிலையங்களிலும் லாரிகளில் முறைகேடாக குடிநீர் நிரப்பி வெளியே கொண்டு செல்வதால் குடிநீர் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
    • 3 தடவை முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட லாரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

    சென்னை:

    சென்னை நகர மக்களுக்கு தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களில் சாலையோர தொட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு 452 ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

    லாரிகளில் குடிநீரை கொண்டு செல்லும் போது தெருவோர தொட்டிகளில் முழுவதும் நிரப்பாமல் மீதம் உள்ள தண்ணீரை வணிக நிறுவனங்களுக்கு விற்று டிரைவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இதேபோல் பணம் செலுத்தி வாங்கும் குடிநீரையும் அவர்களது தொட்டிகளில் முழுவதும் நிரப்பாமல் மீதம் எடுத்து சென்று வெளியே விற்பனை செய்வதாகவும் குடிநீர்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் குடிநீரேற்று நிலையங்களிலும் லாரிகளில் முறைகேடாக குடிநீர் நிரப்பி வெளியே கொண்டு செல்வதால் குடிநீர் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து குடிநீர் வினியோகத்தில் முறைகேடுகளை தடுக்க தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் குடிநீர் வழங்கும் லாரிகள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். லாரியின் தொட்டியில், சென்சார் பொருத்தி நீரேற்று நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லும் குடிநீர் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு முழுவதும் வினியோகிக்கப்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்படுகிறது.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, குடிநீர் வினியோகிக்கும் ஒவ்வொரு லாரிக்கும் அதன் பதிவு எண் அடிப்படையில் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதில் குடிநீர் வினியோகம் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். தண்ணீர் வினியோகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஸ்மார்ட் அட்டையின் இயக்கம் தடைபடும். முதல்முறை தடைபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 3 தடவை முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட லாரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றனர்.

    • போராட்டத்தையொட்டி, அந்த கட்சியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொண்டா்கள் திரண்டு வந்தனா்.
    • வழக்கு தொடா்பாக போலீசாா், இன்று முதல் தீவிர விசாரணையில் ஈடுபட உள்ளனா்.

    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமாா் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பேசினாா். போராட்டத்தையொட்டி, அந்த கட்சியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொண்டா்கள் திரண்டு வந்தனா்.

    கூட்ட நெரிசலின் காரணமாக அந்த சாலையில் இருந்த தடுப்புகள் பெருமளவில் சேதமடைந்தன. இது தொடா்பாக சென்னை மாநகராட்சி உதவி பொறியாளா் காா்த்திக், தமிழக வெற்றிக் கழகத்தினா் மீது புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசாா், அரசின் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக த.வெ.க. தலைவா் விஜய் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்ற அனைவா் மீதும் வழக்குப் பதிவு செய்து உள்ளனா். வழக்கு தொடா்பாக போலீசாா், இன்று முதல் தீவிர விசாரணையில் ஈடுபட உள்ளனா்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, சாலைக்கு நடுவே இருந்த இரும்பு தடுப்புகள் சேதமடைந்தது தொடர்பான புகாரையடுத்து சேதங்களை சீர் செய்து தருவதாக த.வெ.க. சார்பில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் கடிதம் தரப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பில் சிவானந்தா சாலையில் ஏற்பட்டிருக்கக் கூடிய சேதங்களை ஆய்வு மேற்கொண்ட பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர்.
    • கீழடியில் 102 குழிதோண்டி பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.

    சு. வெங்கடேசன் எம்.பி. எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

    ராஜஸ்தானில் உள்ள பஹஜ் என்ற இடத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது. பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர். இதே முறையில் ஹரியானாவிலும் இமாச்சல பிரதேசத்திலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

    கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.

    ஆனால் ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு.

    இவ்வாறு சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    • தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • வரும் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    * நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு வரும் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    * வரும் 17-ந்தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * வரும் 18-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * வரும் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்விதான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர்.
    • உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் பயன்பாட்டுக்கு அணைகளைக் கட்டியவர்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்விதான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர். உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் பயன்பாட்டுக்கு அணைகளைக் கட்டியவர். வீடு உயர்ந்தால் நாடு உயரும் என்று வேலைவாய்ப்புகளைப் பெருக்கத் தொழிற்சாலைகளை உருவாக்கியவர். தன்னலமற்ற சேவைகளால் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர், பெருந்தலைவர் காமராஜர்.

    கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர், தமது ஆட்சியில் மசச்சார்பின்மையையும் நிர்வாகத்தில் நேர்மையையும் கடைப்பிடித்தவர். சமூகநீதிக் கொள்கை வழியில் எளியவர்களுக்கும் அதிகாரமளித்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்.

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, சென்னை, பனையூரில், கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

    இவ்வாறு விஜய் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • வீடு தேடி சேவைகளை தரும் திராவிட மாடல் அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
    • சென்னை முழுவதும் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு எளிதாக சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 13 சேவைகள் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம், புதிய ஆதார் இணைப்பு, வீட்டு வசதி வாரியத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீடு தேடி சேவைகளை தரும் திராவிட மாடல் அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் இன்று மட்டும் 109 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் நாளே மக்கள் இதனை வரவேற்று பாராட்டுகின்றனர்.

    தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 45 சேவைகளும் நகர்புறங்களில் 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடத்தப்பட்டு வருகின்றன.

    காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க பெண்கள் அதிகமாக வருவதால் கூடுதலாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் நவம்பர் இறுதி வரை சென்னை முழுவதும் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு எளிதாக சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×