என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குடிநீர் லாரிகளில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தம்- விதிமுறைகளை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
    X

    குடிநீர் லாரிகளில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தம்- விதிமுறைகளை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

    • குடிநீரேற்று நிலையங்களிலும் லாரிகளில் முறைகேடாக குடிநீர் நிரப்பி வெளியே கொண்டு செல்வதால் குடிநீர் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
    • 3 தடவை முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட லாரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

    சென்னை:

    சென்னை நகர மக்களுக்கு தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களில் சாலையோர தொட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு 452 ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

    லாரிகளில் குடிநீரை கொண்டு செல்லும் போது தெருவோர தொட்டிகளில் முழுவதும் நிரப்பாமல் மீதம் உள்ள தண்ணீரை வணிக நிறுவனங்களுக்கு விற்று டிரைவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இதேபோல் பணம் செலுத்தி வாங்கும் குடிநீரையும் அவர்களது தொட்டிகளில் முழுவதும் நிரப்பாமல் மீதம் எடுத்து சென்று வெளியே விற்பனை செய்வதாகவும் குடிநீர்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் குடிநீரேற்று நிலையங்களிலும் லாரிகளில் முறைகேடாக குடிநீர் நிரப்பி வெளியே கொண்டு செல்வதால் குடிநீர் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து குடிநீர் வினியோகத்தில் முறைகேடுகளை தடுக்க தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் குடிநீர் வழங்கும் லாரிகள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். லாரியின் தொட்டியில், சென்சார் பொருத்தி நீரேற்று நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லும் குடிநீர் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு முழுவதும் வினியோகிக்கப்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்படுகிறது.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, குடிநீர் வினியோகிக்கும் ஒவ்வொரு லாரிக்கும் அதன் பதிவு எண் அடிப்படையில் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதில் குடிநீர் வினியோகம் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். தண்ணீர் வினியோகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஸ்மார்ட் அட்டையின் இயக்கம் தடைபடும். முதல்முறை தடைபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 3 தடவை முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட லாரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றனர்.

    Next Story
    ×