என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
- கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
அவர் கொடுத்த "மதயானை" எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!
நன்றி தலைவா
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும்.
- 1-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்கசிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 6-வது நாளான நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.
வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்பட்டு 8 மணிக்கு சாத்தப்படும். இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது மதியம் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 7-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி தேரோட்டமும், 9-ம் நாளான 27-ந்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. 11-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ஆகஸ்டு 4-ந்தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோவிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- சாத்தான்குளம் வழக்கு விசாரணை ஏறக்குறைய நிறைவு பெற்று, தீர்ப்பு வழங்கப்படும் நிலையை எதிர்நோக்கி உள்ளது.
- என்னை தவிர்த்து மற்ற போலீசார் செய்த அனைத்து செயல்களையும், உண்மைகளையும் கோர்ட்டில் தெரிவிக்க விரும்புகிறேன்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஏறக்குறைய நிறைவு பெற்று, தீர்ப்பு வழங்கப்படும் நிலையை எதிர்நோக்கி உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி முத்துகுமரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், அரசாங்கத்திற்கும், காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து மற்ற போலீசார் செய்த அனைத்து செயல்களையும், உண்மைகளையும் கோர்ட்டில் தெரிவிக்க விரும்புகிறேன். எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை, மகனை இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்று கூறப்பட்டு இருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
தீர்ப்பு வழங்கும் நிலையில் உள்ள இந்த வழக்கில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தது இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கமாகவே இருக்கும் என சட்டவல்லுனர்கள் கூறினர். மேலும் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், அரசு தரப்பு சாட்சியாக மாறுவேன் என மனுத்தாக்கல் செய்திருப்பது வழக்கை திசைமாற்றும் செயலாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
- மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது.
- 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன.
சென்னை:
நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 72 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. அதில் 10 லட்சத்து 21 ஆயிரம் பள்ளிகள் அதாவது 69.14 சதவீதம் அரசு பள்ளிகள் ஆகும். அதேபோல மொத்தமுள்ள 24 கோடியே 80 லட்சம் பள்ளி மாணவர்களில் 12 கோடியே 75 லட்சம் பேர் அதாவது 51.4 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால் ஆண்டுக்கு, ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2021-22-ம் ஆண்டின் நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14.32 கோடியாக இருந்தது. ஆனால் இது தற்போது 1 கோடியே 54 லட்சம் குறைந்து போய் 12 கோடியே 78 லட்சம் ஆகி இருக்கிறது.
மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 574 பேர் படிக்கின்றனர். 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் தலா 1.58 கோடி மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். 10-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 48 லட்சத்து 40 ஆயிரத்து 34 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் 53 லட்சத்து 14 ஆயிரத்து 845 மாணவர்களும், 2022-23-ம் ஆண்டுகளில் 50 லட்சத்து 42 ஆயிரத்து 26 மாணவர்களும் அரசு பள்ளிகளில் படித்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
- அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது திராவிட மாடல் அரசு!
- கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் எனப் பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது திராவிட மாடல் அரசு!
அவரது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளையும் கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரைக் கவர்ந்திடும் வண்ணம் அது எழுந்து வருகிறது.
இவற்றின் தொடர்ச்சியாக, இராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்! என்று தெரிவித்துள்ளார்.
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார் என்கிறது விசிக.
- நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் எழுச்சி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் எனக் கூறினார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக- பாஜக கூட்டணி அமைத்ததும் ஸ்டாலின் அப்படியே அப்செட் ஆகிவிட்டார். சட்டசபையில் திடீரென ஸ்டாலின் எழுந்து, என்னைப் பார்த்து பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னீர்களே என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அதிமுக-வில் இருக்கிறாரா? திமுகவில் இருக்கிறாரா? எனத் தெரியவில்லை. அதிமுக கட்சி நம்ம கட்சி. நாம் யார் கூட வேண்டுமென்றாலும் கூட்டணி வைப்போம். இவர் ஏன் சட்டமன்றத்தில் பதறுகிறார். பயம். தேர்தல் ஜுரம் வந்துவிட்டது.
பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்து திமுக-வின் கூட்டணி கட்சிகளும் ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார். அதிக சீட் தருவதாக கூறினார் என விடுதலை சிறுத்தைகள் கூறுகிறது. நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள். திமுக கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கட்சியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்தால் விழுங்கிவிடும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- புதிய அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் 22.10 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை.
- 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரியை மேம்படுத்த உத்தரவு.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவினை 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் நினைவைப் போற்றும் வகையிலும், அந்தப் பேரரசனின் அழியாப் புகழினை உலகிற்குச் சொல்லும் வகையிலும், ஒரு புதிய அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் 22.10 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான திட்டம் மற்றும் ஆரம்ப கட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
மாமன்னன் ராஜேந்திர சோழன் கடாரம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை வெற்றிகண்டு ஆயிரம் ஆண்டு நிறைவடைந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் இந்த வருடம் 23.07.2025 ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அரியலூர் மாவட்டம், பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரி ராஜேந்திர சோழ மன்னரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஏரியாகும். ராஜேந்திர சோழ மன்னர் ஆட்சிகாலத்தில் சோழகங்கம் என்றும் அழைக்கப்பட்டது.
கங்கை படையெடுப்பு வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தில் தன் நாட்டு மக்களின் தேவைக்காக கங்கை நீரைக் கொண்டு சோழகங்கம் என்ற ஏரியை (பொன்னேரி) ராஜேந்திர சோழன் உருவாக்கினார் என்பது திருவாலங்காட்டு செப்பேடுகளின் வாயிலாக அறிகிறோம்.
மாமன்னன் ராஜேந்திர சோழன் உருவாக்கிய இந்த ஏரியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைத் தற்போது 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படும். மேலும், 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைத்தல், 4 வடிகால் பகுதிகளை தூர்வாருதல், 4 மதகுகளை புனரமைத்தல், 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம் பிச்சனூர், குருவாலப்பர் கோவில், இளையபெருமாள் நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை மற்றும் ஆயுதகளம் ஆகிய கிராமங்களில் 1374 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
மேலும், சோழகங்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் மூலம் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் தகவல் தொடர்பு மையம், நடைபாதை சிறுவர் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, சுற்றுச்சுவர், வழிகாட்டிப் பலகை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின்வசதிகள், கழிப்பிட வசதி, பசுமைப் பரப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி.
- உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது நீதிமன்றம்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அவர் தொடங்கி வைத்த நாள் முதல் மத்திய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சியையும், அடிமை அதிமுக-வின் துரோகங்களையும் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் பின்னால் ஓரணியில் தமிழ்நாடு என அணி அணியாய் அணிவகுத்து நிற்கத் தொடங்கினர்.
அதோடு எல்லார்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கோடு திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராத குடும்பங்களே கிடையாது என்ற அளவிற்கு முதலமைச்சர் ஒவ்வொரு குடும்பத்தையும் பார்த்து பார்த்து கவனித்து வருவதால் தமிழ்நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும், அதிமுக-வினருமே கூட முதலமைச்சர் பின்னால் அணி திரள்வதைக் கண்டு தாங்க முடியாமல் அரண்டுபோய் அவதூறுகளைப் பரப்பி மக்களைக் குழப்ப பார்த்து அதில் தோற்றுப்போனதால் , நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி.
நீதிமன்றத்தை நாடி தடைவாங்க முயன்ற அதிமுக-விற்கு நீதிமன்றம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது. மேலும் OTP மட்டும் கேட்காமல் வழக்கம்போல உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதித்துள்ளது நீதிமன்றம். இப்படி திமுக உறுப்பினர் சேர்க்கையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் பதட்டமே ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
திமுக உறுப்பினர் சேர்க்கையைத் தடுக்க நினைத்த அதிமுக, பாஜக-வின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்த பின்னும், "சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்" என்ற வகையில் OTP பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுகிறது அடிமைகள் கூட்டம். வேடிக்கை.!
திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பான ஆட்சியை முன்வைத்து தன்னெழுச்சியாக பொது மக்கள் தங்களை கழக உறுப்பினராக இணைத்து வருகின்றனர். அதில் OTP பெறுவது என்பது உறுதிப்படுத்தலுக்கான ஒரு சிறு நடைமுறை மட்டுமே. எனினும் நீதிமன்ற வழிகாட்டலை மதித்து அந்த நடமுறைக்கு மாற்றாக கீழ்காணும் நடமுறையை கடைபிடித்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளுமாறு கழக உடன் பிறப்புகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய வழிமுறைகள்:
மக்களுடன் ஸ்டாலின் App யை அனைவரும் Update செய்து கொள்ளுங்கள்.
1) OTP கேட்கும் முறை தற்போது இல்லை.
2) அலைபேசி எண் கட்டாயம்.
3) தற்போதைக்கு, ஒரு குடும்பத்திற்கு ஒரு போன் நம்பரில் 1:4 என்ற அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கலாம்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு அலைபேசி எண் என்ற முறை வந்துள்ளது. ஆனால் வாய்ப்பு இருக்கும் இடங்களில் கிடைக்கின்ற அனைத்து அலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்ளவும்.
அலைப்பேசி எண் தவறாகவோ அல்லது அந்த குடும்பத்தில் இல்லாத நபரின் எண்ணாகவோ இருந்தால், உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்ட அனைத்து தரவுகளும் நீக்கப்பட்டு இப்பணியை மீண்டும் தொடக்கத்தில் இருந்து தொடங்கிட வேண்டும் என்பதால் பெறப்படும் அலைபேசி எண்ணின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது அவசியம்.
அலைப்பேசி எண்ணைப் பதிவிட்டு சமர்பித்தால் உறுப்பினர் சேர்க்கை முடிவடையும். அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து முழுமையாக கணக்கெடுப்புகளை முடிக்க வேண்டும்.
எதிரிகளின் பயமே நமது வெற்றி. 2026-லும் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.o ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு ஆர்.எஸ். பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- புதுக்குளம், இடையப்பட்டி, மேலபாகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திருச்சி:
வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி ஜெய் நகர், திருவேங்கடநகர், கணேசபுரம்,
கணபதிநகர், கீழ குமரேசபுரம், மேலகுமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ்நகர், பெல் டவுன்ஷிப் சி மற்றும் டி செக்டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இமானுவேல் நகர், வ.உ.சிநகர், எழில் நகர், அய்யம்பட்டி,
வாழவந்தான் கோட்டை, தொண்டைமான்பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இதேபோல் அம்மாபேட்டை துணை மின்நிலையத்தில் நாளை (புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ராம்ஜி நகர், கள்ளிக்குடி, அரியாவூர், சன்னாசிப்பட்டி, சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர்குட்டப்பட்டு,
பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி, மேலபாகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
- மதுரை மாவட்டம் அழகர் கோவில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- கருவனுர், தேத்தாம்பட்டி, மந்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை:
மதுரை மாவட்டம் அழகர் கோவில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொய்கை கரைப்பட்டி, நாயக்கன்பட்டி, அழகர் கோவில், கெமிக் கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூய நெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம் புதூர், கடவூர், தொண்டமான் பட்டி, மஞ் சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாத்தூர் பட்டி, தொப்ப லாம்பட்டி, கொடிமங்கலம், கருவனுர், தேத்தாம்பட்டி, மந்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை அழகர் கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் இசக்கி தெரிவித்துள்ளார்.
- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் பிறந்த நாளான 25ஆம் தேதி பயணத்தை தொடங்குகிறார்.
- நவம்பர் 1-ஆம் தேதி தருமபுரியில் பயணம் நிறைவடையவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வரும் 25-ஆம் நாள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு
1. சமூக நீதிக்கான உரிமை (Right to Social Justice),
2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை (Women's Right to Live Free from Violence)
3. வேலைக்கான உரிமை (Right to Employment)
4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை (Right to Farming & Right to Food)
5. வளர்ச்சிக்கான உரிமை (Right to Development)
6. நல்லாட்சி & அடிப்படை சேவைகளுக்கான உரிமை (Right to Good Governance and Public Services),
7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை (Right to Health & Right to Education)
8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை (Right to be Free from Alcohol & Drug Harm)
9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை (Right to Sustainable Urban Development)
10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை (Right to a Healthy Environment)
ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பனதான் இந்த உன்னத பயணத்தின் முதன்மை நோக்கங்களாகும்.
பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசின் பிறந்த நாளான ஜூலை 25-ஆம் நாள் மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து நவம்பர் 1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
இந்தப் பயணத்தின் முதல்கட்ட விவரங்கள் வருமாறு:-
ஜூலை 25 -திருப்போரூர் (நிகழ்ச்சி தொடக்க விழா)
ஜூலை 26 செங்கல்பட்டு, உத்திரமேரூர்
ஜூலை 27 காஞ்சிபுரம், திருப்பெரும்பதூர் (காலை: வையாவூர் நத்தப்பேட்டை ஏரிகள் மாசுபாடு பார்வையிடல்
நெசவாளர்களுடன் சந்திப்பு)
ஜூலை 28 அம்பத்தூர், மதுரவாயில் (காலை: குப்பை எரிஉலை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாத்தூர்)
ஜூலை 31 - கும்மிடிப்பூண்டி (காலை: அறிவுசார் நகரம் பார்வையிடல்)
ஆகஸ்ட் 1-திருவள்ளூர், திருத்தணி
ஆகஸ்ட் 2 சோளிங்கர், ராணிப்பேட்டை
ஆகஸ்ட் 3 ஆர்காடு, வேலூர் (காலை: ராணிப்பேட்டை குரோமியம் மாசு பார்வையிடல்)
ஆகஸ்ட் 4 வாணியம்பாடி, திருப்பத்தூர்
அடுத்தக்கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






