என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தெருவில் நின்று கொண்டிருந்த கவின்குமாரை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
    • சுர்ஜித்தை போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் (வயது 26). என்ஜினீயரான இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார், நேற்று அவரது தாத்தாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.

    தொடர்ந்து தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்கும் வரை அந்த தெருவில் நின்று கொண்டிருந்த கவின்குமாரை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தெருவில் வைத்து அவரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

    தகவல் அறிந்து பாளையங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த கவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சுர்ஜித்(24) என்பதும், அவரது தந்தை சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாயார் கிருஷ்ண குமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து சுர்ஜித்தை போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

    எனது அக்காளும், கவினும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்தனர். அவர்கள் 2 பேரும் ஒன்றாக பழகி வந்தனர். அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது அக்காளுடன் அவர் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை.

    இதனிடையே எனது அக்காள் பாளையில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவ மையத்தில் வேலை பார்ப்பதை அறிந்து கொண்டு அடிக்கடி சிகிச்சைக்காக யாரையாவது அழைத்துச்சென்று கவின் பேசி பழகி வந்தார். இதனை நான் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

    இந்நிலையில் நேற்றும் அதேபோல் ஆஸ்பத்திரிக்கு அவர் செல்வதை அறிந்து கொண்ட நான், அவரை பின்தொடர்ந்து சென்றேன். பின்னர் அவரை தனியாக அழைத்து எச்சரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் பேசுவதை நிறுத்தமுடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் வெட்டிக்கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி கமிஷன் சுரேஷ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இதனிடையே கொலை சம்பவத்திற்கு சுர்ஜித்தின் தாய்-தந்தை தான் காரணம் என்றும், அவர்களையும் இந்த வழக்கில் தூண்டுதலாக செயல்பட்டதாக சேர்க்கவேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தினருடன் சென்று புகார் அளித்துள்ளனர். அதன்அடிப்படையிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம்.
    • 2026 ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் என்ற முறையில் நரேந்திர மோடி பங்கேற்றார். பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எமது விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். இதில் எந்த அரசியலும் இல்லை.

    தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபாகவும் நாகரீக அரசியலாகவுமே விடுதலைச்சிறுத்தைகள் பார்க்கிறோம். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி "பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை" என்று சொல்லியிருக்கிறார்.

    இதில் எந்த திருப்புமுனையும் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் சனாதன எதிர்ப்பில் சமரசம் செய்யவே மாட்டோம். சனாதனத்தை நிறுவ முயலும் பாஜகவுடன் அரசியல் ரீதியான எந்த உறவும் வைக்க மாட்டோம் என எமது தலைவர் பிரகடனப்படுத்திய பிறகும் ஒருவித குழப்பம் மற்றும் நம்பிக்கையற்ற சூழலிலே அதிமுக இருப்பதை ராஜேந்திர பாலாஜி உணர்த்துகிறார்.

    எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம். 2026 ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி.

    தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்துவரும் அதிமுக- பாஜகவை ஒரு போதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 

    • என்றைக்கும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் நம்முடைய நரேந்திர மோடி இருக்கிறார்.
    • தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு அளப்பரிய அன்பை பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

    சிவகாசி:

    காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதற்கு சாட்சியாகவும், அத்தாட்சியாகவும் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கின்றனர். கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதன் வாயிலாக தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு அளப்பரிய அன்பை பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

    ராமேஸ்வரத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாமை நினைவு கூறுகின்ற வகையில், என்றைக்கும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் நம்முடைய நரேந்திர மோடி இருக்கிறார். ஆகவே அவரை வாழ்த்துவது அவரை வரவேற்பது தமிழருடைய கடமை உரிமை.

    சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வரவேற்றது போற்றக்கூடியதாகும். அவர் ஒரு அற்புதமான பாராளுமன்ற உறுப்பினர்.

    அவர் தமிழகத்தின் மீது வைத்திருக்கின்ற பெருமையையும், புகழையும் பிரதமர் மோடியும் வைத்திருக்கிறார் என்று தெரிந்து அந்த நிகழ்ச்சியிலே அவர் கலந்து கொண்டது சிறப்புக்குறியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா அணை உள்ளிட்டவை நிரம்பி வருகிறது.

    இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த நிலையில் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.

    இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக கடந்த 25-ந் தேதி நிரம்பியது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக நேற்று மதியம் 12 மணியளவில் வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலையில் அது 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    அதே போல் நேற்று இரவு கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீரும் இன்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 500 கனஅடியாக இருந்தது. இதையடுத்து நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், 16 கண்மதகு வழியாக வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது போக கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து இன்று 2-வது நாளாகவும் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆறு வெள்ளக்காடானது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    மேட்டூர் அணை 16 கண் மதகு எதிரே உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர், சேலம் கேம்ப் பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, போட்டோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணை பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாயத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி ஆர்ப்பரித்து செல்கிறது. இதையடுத்து குமாரபாளையம்-ஈரோடு மாவட்டம் பவானி இடையே உள்ள பழைய காவிரி பாலம் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் பள்ளிபாளையம் காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதை பள்ளிபாளையம் மேம்பாலத்தில் இருந்தபடி பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பள்ளிபாளையம் சந்தைப்பேட்டை பகுதியில் ஆற்றின் மையப்பகுதியில் உள்ள முனியப்பன் சாமி சிலையை தண்ணீர் சூழ்ந்து கொண்டு சென்றது. இந்த பகுதியிலும் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் செல்பி எடுக்கவும் தடை விதித்து பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து 11 மாவட்ட கலெக்டர்களுக்கும் மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் தகவல் கொடுத்து உள்ளார். இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • முதற்கட்டமாக வருகிற 3-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சில தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.
    • ஜனவரி மாதம் 9-ந்தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது.

    கோவை:

    கோவையில் நடந்த விழாவில் தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.

    அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தே.மு.தி.க சார்பில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறோம். 3-ந்தேதி கும்மிடிப்பூண்டியில் எங்களது பிரசாரம் தொடங்குகிறது. 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் இந்த பிரசார பயணத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.

    தமிழகம் முழுவதும் இந்த சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து பேச உள்ளார்.

    முதற்கட்டமாக வருகிற 3-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சில தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.

    கட்சியை வலுப்படுத்துவதற்கும், மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் எங்களது சுற்றுப்பயணம் இருக்கும்.

    ஜனவரி மாதம் 9-ந்தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் நாங்கள் யாருடன் கூட்டணி என கூறுவோம் என ஏற்கனவே பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். அன்றைய தினம் நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறோம் என்பது தெரியும்.

    வருகிற 5 மாதங்களும் கட்சி பணிகளையும், மக்கள் பிரச்சனைகளையும், கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதும் தான் எங்களுடைய எண்ணம். அதனை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.

    கமல்ஹாசன் எம்.பி. ஆனதை நாங்கள் வரவேற்கிறோம். நீண்ட நாட்கள் சினிமா துறையில் சாதித்து விட்டு தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு தி.மு.க. சார்பில் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனையை கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டு பிரதமர் மோடியை தே.மு.திக சார்பில் யாரும் சந்திக்கவில்லையே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் நாங்கள் இருக்கிறோமா? என கேள்வி எழுப்பினார்.

    நாங்கள் கூட்டணியில் இருக்கும் பொழுது பிரதமர் எங்களை வந்து பார்க்கலாம் அல்லவா? பிரதமரை மரியாதை நிமித்தமாக தேவையான சமயங்களில் சந்திப்போம். எங்களுக்கு எப்போது தேவையோ அப்போது சந்திப்போம். பிரதமர் மோடி தற்போது பிரதமராக வந்து மக்கள் பணி செய்துள்ளார். ஜனவரி மாதம் கூட்டணி முடிவானவுடன் மற்றவற்றை கூறுவோம்.

    தே.மு.தி.க பார்வையில் தமிழக வெற்றிக்கழகம் எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு தே.மு.தி.க பார்வை மக்களை நோக்கி மட்டும் தான் உள்ளது. வேறு எதை நோக்கியும் இல்லை என்றார்.

    குடும்ப நிகழ்ச்சிக்கு செல்கிறாயோ இல்லையோ, ஆனால் கட்சிக்காரர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என எனது அப்பா எப்போதுமே சொல்லுவார். அப்பாவின் வார்த்தைப்படி நாங்கள் பயணப்பட்டு வருகிறோம். தேதி கொடுத்து விட்டால் கண்டிப்பாக வந்து விட வேண்டும் என கூறி துளசி வாசம் மாறும். ஆனால் தவசி வாக்கு மாறாது என தந்தையின் வசனத்தை மேற்கொள் காட்டினார்.

    நீங்கள் விஜயபிரபாகரன் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அப்பா நம்மை விட்டு எங்கும் செல்லவில்லை. நம்முடனே தான் இருக்கிறார். அவர் வீட்டு சென்ற வேலைகளை மகன்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

    தே.மு.தி.க என்பது கிளப் இல்லை. அது ஒரு கட்சி. கேப்டன் விஜயகாந்தின் கனவும், ரோட்டரி கிளப் உங்களின் கனவும் ஒன்றுதான். நீங்கள் கிளப்பாக செயல்படுகிறீர்கள். அப்பா கட்சியாக அதனை செய்தார். அப்பா விட்டு சென்ற செயல்களை நான் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அந்த தேரை இழுக்க நான் தயாராக இருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்யும் போது அவர்களது முகத்தில் இருக்கும் புன்னகை தான் எங்களது மகிழ்ச்சியே. முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது, முடியும் என்பது அறிவாளிக்கு சொந்தமானது என அப்பா கூறுவார். இங்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை அழைத்ததற்கு நன்றி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த வாரம் சவரனுக்கு ரூ.1,760 குறைந்து ஒரு சவரன் ரூ.73,280-க்கு விற்பனையானது.
    • ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் சவரனுக்கு ரூ.1,760 குறைந்து ஒரு சவரன் ரூ.73,280-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.9,160-க்கும், ஒரு சவரன் ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.



    வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    26-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    25-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    24-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,040

    23-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-07-2025- ஒரு கிராம் ரூ.126

    26-07-2025- ஒரு கிராம் ரூ.126

    25-07-2025- ஒரு கிராம் ரூ.128

    24-07-2025- ஒரு கிராம் ரூ.128

    23-07-2025- ஒரு கிராம் ரூ.129

    • நெரிசல் மிகுந்த பயணத்தின்போது மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் படும் கஷ்டங்கள் மற்றும் வேதனைகள் சொல்லி மாளாது.
    • குறிப்பாக மாலையில் கல்வி நிறுவன வளாகங்களில் இருந்து பஸ் சேவைகளை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது.

    சென்னை:

    எந்திர மயமான சென்னை மாநகரில் பஸ் போக்குவரத்து, மின்சார ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரெயில் போக்குவரத்து என உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தும் எளிமையான போக்குவரத்தாக பஸ் போக்குவரத்து திகழ்கிறது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து தினசரி 3 ஆயிரத்து 233 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் தினசரி சுமார் 40 லட்சம் பேர் பயணிக்கிறார்கள்.

    பெரும்பாலும் மாநகர பஸ்களில் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மாநகர பஸ்களில் கால் ஊன்ற இடம் இல்லாத அளவுக்கு கடுமையான நெரிசல் காணப்படும். இத்தகைய நெரிசல் மிகுந்த பயணத்தின்போது மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் படும் கஷ்டங்கள் மற்றும் வேதனைகள் சொல்லி மாளாது.

    இவற்றை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெண் பயணிகள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களில் மகளிர் மட்டும் பயணிக்கும் வகையில் 50 மகளிர் சிறப்பு பஸ்களை இயக்கலாம் என்று ஆலோசித்து உள்ளது.

    இதே போன்று, மாணவ-மாணவிகள் பஸ்களில் இருக்கையில் அமர்ந்தபடி பயணிப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு என தனியாக 50 (நடைகள்) சிறப்பு பஸ் சேவை இயக்கவும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தேசித்துள்ளது.

    அதாவது, பள்ளி, கல்லூரி நேரங்களில் குறிப்பாக காலை மற்றும் மாலையில் கல்வி நிறுவன வளாகங்களுக்குள் நேரடியாக சென்று பஸ் சேவைகள் அளிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாலையில் கல்வி நிறுவன வளாகங்களில் இருந்து பஸ் சேவைகளை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது.

    இதற்காக சுமார் 25 கல்வி நிறுவனங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் சுமார் 4 கல்லூரிகள் அடங்குவதோடு பெரும்பாலான பள்ளிகள் பெண்கள் மட்டும் பயிலும் மேல்நிலைப்பள்ளிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மகளிர் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்தும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பஸ் சேவை குறித்தும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது தமிழக அரசுக்கு பரிசீலனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
    • காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது.

    இதனால் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    இதில் காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டம், கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபிலா ஆற்றின் குறுக்கே மைசூரு மாவட்டம், கபினி அணையும் ஏற்கனவே நிரம்பிவிட்டது. இதனால் இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவானது அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்றுமாலை நீர்வரத்து 98 ஆயிரம் கனஅடியாக வந்தது. தற்போது இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை க்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

    இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் யாராவது குளிக்கிறார்களா என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 2-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குஜராத்- வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மறறும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்காசி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (29.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    கே.கே.நகர்: வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர்.

    தாம்பரம்: மாம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம்தென், படுவாஞ்சேரி, கஸ்பாபுரம், செயலக காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், விஜிபி சீனிவாச நகர், விஜிபி சரவணா நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நூத்தஞ்சேரி, கணபதி நகர், ஞானா நகர், பாரதிதாசன் நகர், சக்தி நகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்பாக்கம் பகுதி, கௌரிவாக்கம், சந்தோஷபுரம், ரிக்கி கார்டன், ராஜாஜி நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்யசாய் நகர், கோகுல் நகர், ஷா அவென்யூ, காமராஜ் நகர், ஜெயந்திரா நகர், தரகேஸ்வரி நகர், கேவிஐசி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், விஜயநகரம், கே.கே.சாலை, சிவகாமி நகர், பாத்மாவதி நகர், அலமேலு புரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்ஷன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர், ஸ்ரீ தேவி நகர்.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 88,000 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
    • மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.

    மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் மற்றும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது .

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 88,000 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில், சேலம் மேட்டூர் அணையில் இன்று மாலை 6 மணியில் இருந்து1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தலைசுற்றல் காரணமாக கடந்த 7 நாட்களாக மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • முதலமைச்சருக்கு வழிநெடுக திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த 7 நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு சென்றனர்.

    இருப்பினும், மருத்துவமனையில் இருந்த படியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.வீடு திருபெமினார்.

    மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சருக்கு வழிநெடுக திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் 3 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பணிகளைத் தொடரலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×