என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒகேனக்கல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை
    X

    ஒகேனக்கல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
    • காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது.

    இதனால் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    இதில் காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டம், கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபிலா ஆற்றின் குறுக்கே மைசூரு மாவட்டம், கபினி அணையும் ஏற்கனவே நிரம்பிவிட்டது. இதனால் இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவானது அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்றுமாலை நீர்வரத்து 98 ஆயிரம் கனஅடியாக வந்தது. தற்போது இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை க்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

    இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் யாராவது குளிக்கிறார்களா என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×