என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 25-ந்தேதி வாக்கில், ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- எனக்கு வேண்டிய மொழியை தேவைப்படும் நேரத்தில் கற்றுக்கொண்டேன்.
- என்னுடைய தாய்மொழி தமிழ் தான் என்றார் கமல்ஹாசன்.
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-
மாநிலக் கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம் இரு மொழிக் கொள்கை. ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கூறப்பட்டுள்ளது. ஒன்று தாய்மொழி, ஒன்று ஆங்கிலம் மற்றொரு மொழி கற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு மொழி என்ன என்பது அனைவக்கும் தெரியும்.
எனக்கு 6 மொழி தெரியும். எனக்கு வேண்டிய மொழியை தேவைப்படும் நேரத்தில் கற்றுக்கொண்டேன். ஆனால் என்னுடைய தாய்மொழி தமிழ் தான்.
போர் என்றால், நமக்கு ஆங்கிலம் தான் கேடயம் என்று கருணாநிதி அன்று கூறினார். அது சொல்லி ரொம்ப நாட்களாகிவிட்டது.
போருக்கு நாள் குறிக்கும் பழைய பஞ்சாங்கத்தை தூக்கி போட்டுவிட்டு, புதிதாக நாம் சொல்வோம். நாம் குறிக்கிற தேதி, எதிர்காலத்தில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக குறிக்கப்படும் தேதி. அது நடந்தே தீரும்.
எனக்கு பிடித்த மய்யத் தூண் திருவள்ளுவர். அவர் பிடித்த தராசின் முள்ளாக நம் தலைவர்கள் எல்லாம் நின்றே ஆக வேண்டும். அவர்களுக்கு அடிவருடுவதில் எனக்கு வெட்கமும் இல்லை. கோபமும் இல்லை. என் கடமை. இந்த கூட்டத்தில் அளந்து பேசவேண்டியதில்லை. ஆனால் வெளியில் போகும்போது ஜாக்கிரதையாக பேச வேண்டும். அது எனக்கு தெரி–யும்.
இன்று என்னை பலர் என்னென்னெவோ சொல்லி கூப்பிடுகிறார்கள். எல்லாம் எனக்கு பொருந்தும். எல்லா வேஷமும் நான் போட்டு இருக்கிறேன். எனக்கு நீ வேஷம் கட்ட வேண்டாம். நான் வேஷம் கட்டச் சொல்லி, டைரக்டும் செய்து இருக்கிறேன். சரித்திரம் வேறு, புராணம் வேறு என்று புரிந்தவர் யாம். மீன் எங்கள் கொடியில் இருக்கும், புலி எங்கள் நெஞ்சில் இருக்கும், வில் எங்கள் கையில் இருக்கும். ஆங்கிலத்தில் 'வில்' இருந்தால் வழி உண்டு. அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதைத் தான் தொடர்ந்து செய்வோம். அதற்கு தோள் கொடுப்பதில் எனக்கு எந்த பயமும் இல்லை.
எனக்கு 3 அம்மாக்கள். எனை பெற்றெடுத்த அம்மா இறந்துவிட்டார்கள். மிச்சம் இருப்பது என் சினிமா, இந்திய தாய். இந்த 2 தாய்களுக்காக என் 2 தோள்களும் இருக்கும். என்னை யாரும் இடது பக்கமும் இழுத்துவிட முடியாது. வலது பக்கமும் இழுத்துவிட முடியாது. என் பெயர் கமல்ஹாசன். நான் இந்த குளத்தில் தான் பூப்பேன் என தெரிவித்தார்.
- துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது.
- பாராளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
சென்னை:
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதன்படி, துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பாராளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், அதைத்தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு இன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பி. சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இரு வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று சந்திக்க உள்ளார்.
சென்னை தி.நகர் அக்கார்ட் ஓட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் சுதர்சன் ரெட்டி துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுகிறார்.
- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
- சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம் என்றார்.
திருச்சி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி வழங்கி, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சி மாநகராட்சியில் மின்கட்டணம் 67% உயர்வு, வரிகளையும் 100 முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு.
விலைவாசியால் மக்கள் படும் துன்பம் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய் என்ன விலை என்ன… இப்போது என்ன விலை என்று ஒப்பிட்டுப் பாருங்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கி, அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களுக்காக திமுக ஆட்சி செய்யவில்லை, வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்கிறது. இந்த குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல் இது. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பேசவில்லை, யதார்த்த உண்மையைச் சொல்கிறேன். திமுக குடும்பத்தைத்தான் அரசாங்கமாகப் பார்க்கிறார்கள்.
நாடு சிறந்து வளர கல்வி வளர்ச்சி முக்கியம். எனவே அதிகமாக நிதி ஒதுக்கி கல்வியில் புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தினோம். அதிமுக ஆட்சியில்தான் கற்போர் எண்ணிக்கை அதிகரித்தது. அதிமுகவின் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுகவினால் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாவது கொண்டுவர முடிந்ததா?
67 கலைக்கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019லேயே அடைந்தோம்.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், புத்தகப்பை, சைக்கிள், விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மாவின் எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் ரூ.7300 கோடி நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது.
கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து அதனை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.
ஏழைப் பெண்களின் பொருளாதார சூழலால் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் 6 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுசேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். ஏழைகளுக்கான திட்டங்களை நிறுத்தியதில் தான் திமுக சாதனை படைத்திருக்கிறது. மீண்டும் அந்த திட்டங்கள் எல்லம் தொடரும்.
கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இனி ஏழை மக்கள் வீடு கட்டவே முடியாத அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. இரவில், கனவில் வேண்டுமானால் வீடு கட்டலாம். தேர்தல் அறிக்கையில் கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் அவற்றை இணைப்பேன் என்றனர், ஆனால் செய்யவில்லை. ஏனெனில் எல்லாவற்றில் இருந்தும் கமிஷன் வருது, காசு வந்தால் திமுகவுக்கு போதும்.
சமீபத்தில் எங்களுக்குக் கிடைத்த செய்தி, ஜல்லி, எம்.சாண்ட் உரிமையாளர்களிடம் ஒரு டன்னுக்கு 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் வாய்மொழி உத்தரவிட்டதாகத் தகவல். எப்படி மக்களால் இதை தாக்குப்பிடிக்க முடியும்? இந்த ஆட்சி மீண்டும் வரப்போவதில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது, எரிகிற வீட்டில் பிடுங்குவது மிச்சம் என்று கொள்ளையடித்து வருகின்றனர்.
நான் முதல்வரானபோது, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி பெரும்பான்மை நிரூபிக்கும் நாளன்று சட்டமன்றத்தில் கூச்சல் போட்டு டேபிளில் ஏறி டான்ஸ் ஆடினார்கள். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தனர். பெரும்பான்மை நிரூபித்த பின் அதனை ஏற்றுக்கொள்ளாத ஸ்டாலின் சட்டையைக் கிழித்துவிட்டு நடந்தார். அதிமுக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். அப்போது சட்டையுடன் வேட்டியையும் கிழித்துக்கொண்டு சாலையில் நடக்கப் போகிறார்.
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் என 7 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு கொடுத்தோம். தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம்.
அதிமுக அரசு அமைந்ததும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கையை ஏற்று, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ரூ.75 ஆயிரம் மானியமாக கொடுக்கப்படும்.
சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம், ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்தோம். இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிட்டோம்,
இதேபோல கிறிஸ்தவ மக்களுக்கு, கிறிஸ்தவ பெண்கள் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கினோம். ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு 38 ஆயிரமாக நிதியுதவி உயர்த்தி வழங்கினோம், பின்னர் முழு மானியம் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து அதனைச் செய்யவில்லை.
கிறிஸ்தவ, இஸ்லாமியப் பெருமக்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்தது அதிமுக அரசு. 31 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மத, ஜாதி சண்டை இல்லை, தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது.
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பலதிட்டங்களை நிறைவேற்றினோம், திருச்சி மலைக்கோட்டை நுழைவுவாயிலை சீரமைப்பு செய்தோம், புராதன தன்மையுடன் பூங்கா 39 கோடியில் தொடங்கினோம். திருச்சி மாநகரில் 16 பூங்காக்களை உருவாக்கினோம், வெள்ள பாதிப்பைத் தடுக்க உய்யகொண்டான் கால்வாய் 18 கோடியில் சீரமைக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் எல்.இ.டி மின்விளக்குகள் பொருத்தப்பட்டது, சத்திரம் பேருந்து நிலையம் 28 கோடியில் மேம்படுத்தப்பட்டது. 19 கோடியில் பன்னாட்டு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது, 90% பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கப்பட்டது. திருச்சியில் பழைமையான தண்ணீர் தொட்டிகள், குழாய்களை சீரமைக்க அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டு, தற்போது அத்திட்டம் 2014கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதுவும் அதிமுக ஆட்சியில்தான் ஆரம்பிக்கப்பட்டது.
மறைந்த தியாகராஜ பாகவதருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டது, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஆரம்பிக்கப்பட்டு 90% பணிகள் முடிவடைந்து, திமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கப்பட்டது. மறைந்த வ.உ.சி.க்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்தார். அதிமுக ஆட்சியில் தான் தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
நீங்கள் கொடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும் கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டால் அவர்களின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின் என்று முடித்தார்
- சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அவசரமாக தாக்கல் செய்தார்கள்.
- அந்த மசோதா இந்திய ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க மிரட்டல் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளில் முக்கியமான முழக்கம் மாநில சுயாட்சியாகும். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், முரசொலி மாறன் என திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் மாநில சுயாட்சி முழக்கத்தைத்தான் உயர்த்தி பிடித்தார்கள்.
ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே Coordination தான் இருக்க வேண்டுமே தவிர, subordination இருக்கக் கூடாது என்பதுதான் இதற்கான தெளிவுரை. இந்த புரிதல் எல்லோருக்கும் ஏற்பட்டாக வேண்டும். அப்படி புரிந்துகொண்ட காரணத்தால் தான், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடனேயே 'மாநில சுயாட்சி' முழக்கத்தை கையில் எடுத்தது.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை தரும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது, இப்போதும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அது நடக்கும்வரை திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக வலியுறுத்திக் கொண்டே இருக்கும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர், 1969-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, டெல்லிக்குச் சென்ற முதல் பயணத்திலேயே
மாநில சுயாட்சி குறித்துதான் பேசினார். அதன்படி, பின்னாளில் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தார்கள். அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 1974-ம் ஆண்டு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.
ராஜமன்னார் குழு அறிக்கையையும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் இந்தியாவின் பல மாநில முதலமைச்சர்களிடமும் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுபோய் சேர்த்தார். மாநில சுயாட்சிக் கொள்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு திரட்டினார். அதேபோல், மாநில சுயாட்சிக் கோரிக்கை என்பதையே தவறு, பிரிவினை என்று சிலர் நம்மைப் பார்த்து விமர்சித்தார்கள்.
அவர்களுக்கு பதில் சொல்வதுபோல், கலைஞர் அவர்கள் ஒரு முழக்கத்தை அறிவித்தார்கள். அது தான், "மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி" என்கின்ற முழக்கம். அந்த முழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அதனால்தான் முதலமைச்சர், ஒன்றிய -மாநில அரசுகளுக்கு இருக்கின்ற உறவு குறித்து ஆராய High Level committee to study union-state relations என்கின்ற உயர்நிலை குழுவினை இன்றைக்கு அமைத்துள்ளார்.
ஒன்றிய அரசு - மாநில அரசின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மறைந்த இனமானப் பேராசிரியர் அவருக்கே உரிய பாணியில் ஒரு உதாரணத்தை சொல்லியிருக்கின்றார். அதை நான் இங்கே நினைவுகூர விரும்புகின்றேன். "ஒரு கடிகாரத்தினுடைய முட்களில் மணிமுள் முதன்மையானது என்றாலும், நிமிடமுள் பேரளவு இயங்கினால் தான், அந்த மணிமுள் சிறிதளவு இயங்கும். அதே மாதிரி, மக்களோடு நெருக்கமாக இருக்கக்கூடிய மாநில அரசு பேரளவு இயங்க வேண்டும். மத்திய அரசு அதற்கு இணக்கமாக, அளவோடு இயங்க வேண்டும்" என்று அருமையாக சொன்னார்.
ஆனால், இப்போது ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்றால், அதிகாரத்தை மேலும், மேலும் குவித்து வைத்துக் கொண்டு,
இந்தியா என்கின்ற கடிகாரத்தில் மணிமுள் மட்டும் இருந்தால் போதும், நிமிடமுள்ளே தேவையில்லை என்ற அளவிற்கு ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு கூட, நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அவசரமாக தாக்கல் செய்தார்கள். மாநில முதலமைச்சர்கள் மீதோ, அமைச்சர்கள் மீதோ, ஒரு குற்றத்தைச் சுமத்தி, 30 நாட்கள் அவர்களை காவலில் வைத்து விட்டால் போதும். அந்தக் குற்றம் நிரூபிக்கப்படும் முன்பே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களாக இருந்தாலும், முதலமைச்சராக இருந்தாலும் நீக்கலாம் என்ற மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
இது மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு பகிரங்க மிரட்டல். அந்த மசோதா சட்டமாவதை முதலமைச்சர் எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் மாநில பட்டியலில் உள்ள அதிகாரங்களை எல்லாம் Concurrent Listக்கு மாற்றிக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, மாநிலப் பட்டியலில் உள்ள கல்வியை, கல்வி உரிமையை நம்மிடம் இருந்து பறிக்க முயற்சிக்கின்றார்கள்.
கல்வி தொடர்பாக, மாநில சட்டமன்றங்களை புறக்கணித்து விட்டு, ஒன்றிய அரசே தன்னுடைய சட்டங்களை இயற்றி வருகின்றது.
அதை எதிர்த்துதான் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் உரிமைக்குரலை எழுப்பி வருகின்றார்கள்.
அதற்கான தொடக்கமாகத்தான், மாநிலக் கல்விக்கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார். ஒன்றிய அரசினுடைய நேசனல் எஜிகேசன் பாலிசி, நியூ எஜிகேசன் பாலிசி என்.ஈ.பி யை முதலமைச்சர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தார். ஒன்றிய அமைச்சர் அந்த என்.ஈ.பி யை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் நம்முடைய மாநிலத்திற்கு வரவேண்டிய கிட்டத்தட்ட 2,500 கோடி ரூபாயை விடுவிக்க முடியும் என்று சொன்னார்.
ஆனால், இந்தப் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தமிழ்நாட்டிற்குள்ள என்னென்ன வரும். குலக்கல்வி வரும், அதாவது அப்பாவும், அம்மாவும் என்ன வேலை செய்கின்றார்களோ, அப்பாவும், தாத்தாவும் என்ன வேலை பார்க்கின்றார்களோ, அதே தொழிலை நாமும் செய்ய வேண்டி வரும் என்ற அந்தக் கொள்கையை கொண்டு வர பார்க்கின்றார்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் 2,500 கோடி ரூபாய் கொடுப்போம். அதன் மூலமாக குறுக்கு வழியில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டிற்குள் நுழைக்க பார்க்கின்றார்கள்.
முதலமைச்சர் மிகத் தெளிவாக எதிர்த்து சொன்னார். என்.ஈ.பி யை ஏற்றுக் கொண்டால்தான் 2,500 கோடி ரூபாயை கொடுப்பேன் என்று சொல்கின்றீர்கள். ஆனால் ஒன்றிய அரசு நீங்கள் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும், எந்த காலத்திலும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு மக்களிடம் நான் கொண்டு செல்ல மாட்டேன் என்று எதிர்த்தார்.
இதனால் மாநில அரசுக்கு பல்வேறு வழிகளில் கடும் நெருக்கடி எற்பட்டது. வருமானவரி, சுங்கவரி, நிறுவன வரி, இப்போது GST என்று அனைத்து வளமான வரிகளையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. மாநிலங்களை நிதிக்காக கையேந்த வைக்கும் அமைப்பாக மாற்றிவிட்டார்கள்.
Delimitation என்று இப்போது கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளை குறைக்கும் வேலையையும் ஒன்றிய அரசு செய்து வருகின்றது.
ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு இருக்கின்றன. ஓட்டுத்திருட்டு என்பது இந்திய ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலாக இன்றைக்கு இருக்கின்றது.
எதிர்த்து கேள்வி கேட்கும் மாநிலங்களுக்கு போதுமான நிதியை தர ஒன்றிய அரசு மறுக்கின்றது. இதையெல்லாம் மீறிதான், மாநில உரிமைகளை நாம் நிலைநாட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இருக்கின்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டே, தமிழ்நாட்டை பொருளாதார வளர்ச்சியில் இன்றைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக முதலமைச்சர் மாற்றிக்காட்டி இருக்கின்றார்.
இந்த கருத்தரங்கம் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக நிச்சயமாக அமையும் என தெரிவித்தார்.
- தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டம் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
- ஓயாசீஸ் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு 54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.
ஓயாசீஸ் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதி 54.40 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டினார் குமரி எம்பி விஜய்வசந்த்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டம் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் செட்டிகுளம் அரசு தொடக்க பள்ளியில் அமைந்துள்ள ஓயாசீஸ் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு 54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டது அதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பூமி பூஜை தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மாவட்ட கல்விதுறை அதிகாரி பாலதண்டாயுதபாணி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், வட்டாரத் தலைவர் அசோக்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வார்டு தலைவர் வர்கீஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சகாய பிரவீன், காங்கிரஸ் விளையாட்டு துறை கிழக்கு மாவட்ட தலைவர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.
- மின்னல் தாக்கி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேப்பமரத்தடியில் வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
அஸ்பியா பானு (13), சபிகா பானு (10) மின்னல் தாக்கி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (25.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பெருங்களத்தூர்: பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை ரோடு மற்றும் சடகோபன் நகர்.
முடிச்சூர்: ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, மேட்டு தெரு, பஞ்சாயத்து வாரியம் சாலை, சக்ரா அவென்யூ.
தாம்பரம்: திருவேங்கடம் நகர், மேலாண்டை தெரு, தெற்கு தெரு, பூர்ண திலகம் தெரு, கல்யாண் நகர் மற்றும் வைகை நகர்.
போரூர்: லட்சுமி அவென்யூ, முகலிவாக்கம் மெயின் ரோடு, ராமசந்திரா நகர், பாலாஜி நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், குமரி நகர், சிவாஜி நகர், ஓம் சக்தி நகர், எம்ஆர்கே நகர்.
- வளிமண்டல வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
- சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியிருப்பதாவது:-
மத்திய மேற்கு வங்கக்கடல் வடமேற்கு வங்கக்கடலில் வருகிற 25-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. ஆந்திரா, ஒடிசா வழியாக மகாராஷ்டிரா நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதற்கு வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை வருகிற 26-ந்தேதி முதல் மீண்டும் ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தீவிரமடையும். இந்த மழை வருகிற 29-ந் தேதி வரை நீடிக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த 2 நாட்களாக வடமாவட்டங்களில் மழை பெய்து கொண்டு உள்ளது. இன்று பரவலாக தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
வளிமண்டல வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.
சென்னை உள்பட வட மாவட்டங்களில் நாளை காலை வரையில் மழை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை காரைக்கால், நாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இன்று மாலை இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் பலத்த மழை பெய்வதற்கான சூழலும் உள்ளது. நேற்று இரவு முதல் பெய்த மழை இன்று பகலில் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
25-ந் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 26, 27, 28 29 ஆகிய நாட்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதியில் மீண்டும் மழைக்கான வாய்ப்பும் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது பலத்த மழையை கொடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மழை நீர் வடிகால் திட்டம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
- வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதன் மூலம் அதை அடக்க திமுக அரசு முயல்கிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் வரலட்சுமி என்ற தூய்மைப் பணியாளர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். வரலட்சுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக வளர்ந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தான் கூறியிருந்தார். அதற்கு அடுத்த நாளே சென்னையில் பெய்த லேசான மழைக்கு தண்ணீர் பெருமளவில் தேங்கி, மின்சாரக் கம்பி துண்டிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார் என்றால், சென்னை மாநகரத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் எந்த அளவுக்கு மோசமாகவும், பலவீனமாகவும் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மழை நீர் வடிகால் திட்டம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்கும் மழை நீர் வடியவில்லை. அதேபோல், விபத்து நடந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்த கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலைக்கு மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஆனால், மின்சாரத்துறையின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் அப்பாவி பெண் தொழிலாளி உயிரிழக்கக் காரணமாக அமைந்திருக்கிறது. வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உயிரிழப்பால் மக்கள் மத்தியிலும், தூய்மைப் பணியாளர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதன் மூலம் அதை அடக்க திமுக அரசு முயல்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு சென்னை மாநகராட்சி மேயர், நகராட்சி நிர்வாகத்துறை, மின்துறை ஆகியவற்றின் அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோரின் அலட்சியமும், செயல்பாடின்மையும் தான் காரணம் என்பதால் இந்த இழப்பீட்டுத் தொகையை அவர்களிடமிருந்து வசூலித்து வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 'விடியல் ஆட்சியில்' மின்சார வாரியம் விழித்துக் கொண்டு தான் இருக்கிறதா?
- ஆகஸ்ட் மழைக்கே சென்னை அல்லாடுகிறது என்றால் டிசம்பரில் தலைநகரின் கதி என்ன?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழைநீரில், மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததால், பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் பலியான சம்பவம் மனதை பதைபதைக்க வைக்கிறது. இறந்த தூய்மைப் பணியாளர் திருமதி. வரலட்சுமி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இந்த கனத்த தருணத்தில் ஒரு கட்சித் தலைவர் என்பதைத் தாண்டி, சாதாரண குடிமகனாக மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. ஒரு நாள் மழைக்கே ஓர் அப்பாவி உயிர் பலியாகும் அளவிற்கு, ஒரு மாநிலத் தலைநகரின் நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதா? அதிலும் சென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்து, கடந்த 7 வாரங்களில் மட்டும் 5 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கையில், 'விடியல் ஆட்சியில்' மின்சார வாரியம் விழித்துக் கொண்டு தான் இருக்கிறதா? ஆகஸ்ட் மழைக்கே சென்னை அல்லாடுகிறது என்றால் டிசம்பரில் தலைநகரின் கதி என்ன? மழைநீர் தேங்கினால் என்ன, மின்சாரம் பாய்ந்தால் என்ன, தெருவில் நடந்து செல்லப்போவது ஏழை, எளிய மக்கள் தானே, எக்கேடு கெட்டால் என்ன என்ற அலட்சிய எண்ணமா?
'தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு சென்னை' என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இதயத்தின் மீது விழும் எலெக்ட்ரிக் ஷாக்கையும் கவனிக்க வேண்டும்! மறைந்த தூய்மைப் பணியாளரின் குழந்தைகள் அழும் கதறலொலியைக் கேட்ட பின்பாவது, விளம்பரத்தையும் சமூக வலைத்தளத்தையும் விட்டு வெளியே வந்து, இது போல மேலும் பல உயிர்கள் காவு வாங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, மழைக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்! என்று வலியுறுத்தி உள்ளார்.
- தென்மேற்கு வங்கக்கடலின் மேல்பகுதியில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- காரைக்கால் பகுதியில் மாலையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. மாலையிலும் நல்ல மழை பெய்தது. மாலை 6 மணிக்கு பிறகு சென்னை மாநகர் முழுவதும் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.
சென்னை மாநகர பகுதிகளான எழும்பூர், புரசைவாக்கம், பாரிமுனை, கோயம்பேடு,அண்ணா நகர், முகப்பேர், அயனாவ ரம் வில்லிவாக்கம், அசோக் நகர், மயிலாப்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும். புற நகர் பகுதிகளான செங்குன் றம் சோழவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் இரவில் பெய்ய தொடங்கிய மழை விடியவிடிய பெய்தது.
இன்று காலையிலும் மழை நீடித்தது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சென்னையில் 17 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. அதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி போக்குவரத்தை சீராக்கினார்கள்.
இந்நிலையில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடலின் மேல்பகுதியில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று மாலையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளையில் இருந்து 2 நாட்களுக்கு லேசான மற்றும் மிதமாக மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






