என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ருக்மணி லட்சுமிபதி சாலையானது பாந்தியன் ரவுண்டானாவிலிருந்து மாண்டியத் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
- மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனிலிருந்து வரும் வாகனங்கள் ருக்மணி லட்சுமிபதி சாலையின் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சென்னை:
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் பாந்தியன் ரவுண்டானா பகுதியானது 5 முனை சந்திப்பு மற்றும் 2 ரவுண்டானாக்களை உள்ளடக்கியதாகும். எனவே, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதை சீர்படுத்த தற்காலிகமாக நாளை (9-ந்தேதி) காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
* ருக்மணி லட்சுமிபதி சாலையானது பாந்தியன் ரவுண்டானாவிலிருந்து மாண்டியத் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
* ருக்மணி லட்சுமிபதி சாலையில் எத்திராஜ் சாலையில் இருந்து வரும் வாகனங்களை ருக்மணி லட்சுமிபதி சாலை மற்றும் மாண்டியத் சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திரும்பி மாண்டியத் சாலை வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் சர்வீஸ் சாலை சென்று பாந்தியன் சாலை வழியாக பாந்தியன் ரவுண்டானா செல்லலாம்.
* மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனிலிருந்து வரும் வாகனங்கள் ருக்மணி லட்சுமிபதி சாலையின் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது.
தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு சார்பில் ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான டோக்கன் வினியோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த உடன், அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- எப்.சி. புதுப்பிக்க முடியாமல் ஏறத்தாழ 30 ஆயிரம் லாரிகள் கடந்த ஒரு மாதகாலமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
நாமக்கல்:
15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி, பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் (எப்.சி.) ரூ.2,500 இருந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தியது.
அதன்படி 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள் மற்றும் பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் ரூ.12,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் உயர்ந்து இருப்பதால், லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் சான்றிதழை புதுப்பிக்காமல் வைத்து உள்ளனர். இதனால் ஒன்றிரண்டு பழைய லாரிகளை வைத்து தொழில் செய்து குடும்பத்தை நடத்தி கொண்டு இருக்கும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது:-
தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்ந்து இருப்பதால், ஒரு லாரி வைத்து தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் எப்.சி. புதுப்பிக்க முடியாமல் ஏறத்தாழ 30 ஆயிரம் லாரிகள் கடந்த ஒரு மாதகாலமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
எனவே லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உயர்த்தப்பட்ட எப்.சி. கட்டணத்தை குறைக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே போதிய லோடு கிடைக்காமல் ஆயிரக்கணக்கில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்.சி. கட்டண உயர்வால் மேலும் 30 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது லாரி உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
- தோரணம் உள்ளிட்ட பொருட்கள் குடியாத்தம் பகுதியிலிருந்து வரும் விவசாயிகளால் விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
- சிறப்புச் சந்தைக்கு தேவையான வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமானது, அங்காடி நிர்வாகக் குழுவின் மூலமாக நடப்பாண்டிலும் பொங்கல் சிறப்பு சந்தையை இன்று முதல் 17-ந்தேதி (சனிக்கிழமை) வரை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறப்பு சந்தைக்கான கரும்பு விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை மற்றும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து ஆகியவை ஈரோடு, சேலம் மற்றும் ஆந்திராவில் இருந்தும் வரவழைக்கப்படுகிறது. தோரணம் உள்ளிட்ட பொருட்கள் குடியாத்தம் பகுதியிலிருந்து வரும் விவசாயிகளால் விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இச்சிறப்புச் சந்தைக்கு தேவையான வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலின்றி வியாபாரம் மேற்கொள்ளும் வகையில் போலீசார் மூலம் நடவடிக்கை எடுப்பதோடு, அங்காடி நிர்வாகக் குழு ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என அங்காடி நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
- வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக!
- எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து வெல்வோம் ஒன்றாக!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது,
தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக!
வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து வெல்வோம் ஒன்றாக! என்று கூறியுள்ளார்.
சென்னை:
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதையடுத்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது படத்தயாரிப்பு நிர்வாணம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால், 'U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள். அதனடிப்படையில் தணிக்கை வாரியம் கூறிய அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டது.
அதனை கண்காணிப்பு அதிகாரியும் உறுதி செய்தார். ஆனால் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை" என வாதம் வைத்தார்.
இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் கோரமுடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ஏன் படத்தை ஜனவரி 10-ம் தேதிக்கு ரிலீஸ் செய்யக்கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே? எனக்கூறி வழக்கை இன்று ஒத்திவைத்தார்.

இந்த வழக்கின் மீதான இன்றைய விசாரணையின் முடிவில், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, நாளை காலை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றதழ் கிடைக்காத நிலையில் ஜனநாயகன் படம் ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஐரோப்பபிய நாடுகளில் ஜனவரி 9-ம் தேதி ஜனநாயகன் வெளியாகாது என விநியோகஸ்தர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷய, ஸ்பெயின், நார்வே, போலாந்து உள்பட 39க்கும் அதிக நாடுகளில் ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு விருதும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் கொண்டது.
- தினமும் மாலையில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, நாளை (ஜனவரி 8) தொடங்கி ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை, நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

புத்தக கண்காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் தமிழ் பதிப்பகங்கள் மற்றும் பென்குயின் (Penguin), ஹார்ப்பர் காலின்ஸ் (HarperCollins) போன்ற சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. தினமும் மாலையில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும்.
இந்த ஆண்டு முதன்முறையாக குழந்தைகளுக்காக தனி பூங்கா (Children's Park) மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் 'Queer' பதிப்பகத்திற்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி (BAPASI) விருதுகளுக்கான வெற்றியாளர்கள் பட்டியலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

அதன்படி,
கவிதை - கவிஞர் நா. சுகுமாரன்
சிறுகதை -எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
நாவல் -எழுத்தாளர் ரா.முருகன்
உரைநடை -பேராசிரியர் பாரதிபுத்திரன் (ச.பாலுசாமி)
நாடகம் - கே.எஸ். கருணா பிரசாத்
மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்பாளர் வ.கீதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு விருதும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் கொண்டது குறிப்பிடத்தக்கது.
- நெல்லையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை நெல்லை சென்றடைகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, ஜனவரி 12,13,19 மற்றும் 20ம் தேதிகளில் நெல்லையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
நெல்லையில் இருந்து 12, 19ம் தேதிகளில் அதிகாலை 12.30க்கு புறப்படும் சிறப்பு ரெயில் பிற்பகல் 1.30க்கு தாம்பரம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் பிற்பகல் 4.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 8 மணிக்கு நெல்லை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து 13, 20ம் தேத அதிகாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு ரெயில் பிற்பகல 2 மணிக் தாம்பரம் செல்லும் என கூறப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை நெல்லை சென்றடைகிறது.
நெல்லையில் இருந்து 14ம் தேதி அதிகாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு ரெயில் பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு செல்கிறது.
மறுமார்க்கத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.
- வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.
- கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.
இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பா.ம.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் ஒன்றையும் கொடுக்க அ.தி.மு.க தலைமை சம்மதம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பாமகவுக்கு ராமதாஸ் மட்டுமே தலைவர் என்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சட்ட விரோதம் என பாமக தலைவர் ராமதாஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு ராமதாஸ் மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.
17.12.2025 முதல் ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.
ராமதாஸ் மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர்.
இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே 10, 2026 அன்று முடிவடைகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணிகள் (Special Intensive Revision) தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் பட்டியல் வெளியான பிறகு, பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் பாதுகாப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.
சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் தமிழகம் வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்
மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே 10, 2026 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு அமைய வேண்டும்.
பொதுவாக ஏப்ரல் மாதக் கோடை விடுமுறை மற்றும் தேர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேதிகள் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொலைபேசி வழியாக 6,598 பரிந்துரைகளும் கோரிக்கைகளும் வந்துள்ளன.
- ஏ.ஐ. வழியாக 5680 கோரிக்கைகளும் பரிந்துரைகள் வந்துள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு கடந்த 4 நாட்களில் பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் விவரம்:
3-ந் தேதி முதல் 6ம் தேதி வரை தொலைபேசி வழியாக 6,598 பரிந்துரைகளும் கோரிக்கைகளும் வந்துள்ளன. வாட்ஸ் அப் வழியாக 29,036, மின்னஞ்சல் வழியாக 1046, இணையதளம் வழியாக 8266 கியூ.ஆர்.கோடு வழியாக வழியாக 1394, ஏ.ஐ. வழியாக 5680 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் வந்துள்ளது.
கடந்த 4 நாட்களில் இதுவரை மொத்தம் 52,080 பரிந்துரைகளும், கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டிகளை சில தனிநபர்கள் நடத்தியதின் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது.
- பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அவனியாபுரம் கிராமத்தில் தை மாதம் முதல் நாள் (15-ந்தேதி) தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.
இது கடந்த 100 ஆண்டுக்கும் மேலாக கிராம பொதுமக்கள் சார்பாக நடப்பது வழக்கம். மேலும் கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்த பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் பிரதான ஜல்லிக்கட்டு சங்கம் என்ற தனிநபர் சங்கத்தினை புதிதாக உருவாக்கி ஒரு குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் மட்டும் மேற்படி விழாவினை ஆக்கிரமிப்பு செய்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்தினார். அதற்கு ஆட்சேபனை தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்தவும் அதில் 16 பேர் கொண்ட ஆலோசனை குழு சேர்த்து நடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகிறது.
எனவே வருகிற 15-ந் தேதியன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த, அவனியாபுரம் கிராமம் மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது கமிட்டிக்கு ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த அனுமதி வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தோம். நடவடிக்கை இல்லை.
மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. எனவே அவனியாபுரம் கிராமம் மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது கமிட்டிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவில் ஜல்லிக்கட்டு போட்டி ஐ.பி.எல். விளையாட்டு கிடையாது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை சில தனிநபர்கள் நடத்தியதின் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. எனவே இதனை அரசு நடத்துவது தான் நல்லது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் உலகப் புகழ்பெற்றது இவ்வாறு உள்ள சூழலில் இந்த விழாக்களை தனி நபர்கள் நடத்துவது பொருத்தமாக இருக்காது. எனவே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு நிர்வாகமே நடத்துவது தான் சரியாக இருக்கும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.






