என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 20-ந்தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார்.
- ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் அங்கு புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் வருகிற 19-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற்ற உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் நடைபெறும் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்து 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.
அதன்படி, இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். வருகிற 19-ந்தேதி நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பின்னர், 20-ந்தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். மேலும் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் அங்கு புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
- ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை நடைபெறும்.
அலங்காநல்லூர்:
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 7 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பாக உள்ள வாடிவாசல் திடலில் அரசு வழிகாட்டுதல்படி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, எம்.எல். ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், தளபதி, தமிழரசி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து சுவாமி காளைகளான முனியாண்டி சுவாமி கோவில் காளை, அருவிமலை கெங்கையம் மன், கருப்பசாமி கோவில் காளை, வலசை கருப்பு சாமி கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.
ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 1,000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. இதேபோல் தகுதி பெற்ற 600 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் லாரி, வேன்களில் கொண்டுவரப்பட்டு அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை போட்டி தொடங்கியதும் ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. கழுத்தில் மாலை, பட்டுத்துணி சகிதமாக சீறிப்பாய்ந்து வந்த நாட்டின காளைகள் துள்ளிக்குதித்து வீரத்தை காட்டியது. பெரும்பாலான காளைகள் தேங்காய் நார் பரப்பப்பட்ட களத்தில் கால்களை வாரி இறைத்து தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை பறை சாற்றியது.
யாருக்கும் பிடிபடாமல் வளர்ப்பாளர்களின் அழைப்புக்கு செவி சாய்த்து அவர்களுடன் வெற்றியுடன் புறப்பட்டு சென்றது மேடையில் அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்த அமைச்சர்கள் மற்றும் பார்வையாளர்களை வியப்படைய செய்தது. களத்தில் இறங்கி விட்டால் போட்டிதான் என்ற உணர்வில் காளையும், காளையர்களும் மல்லுக்கட்டிய காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது.
சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது. முதல் சுற்றில் 2 காளைகளை அடக்கிய மதுரை ஊர்சேரியை சேர்ந்த சரவணக்குமார் முதலிடம் பிடித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, விலை உயர்ந்த டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசு களைப் பெற்றனர்.
அதிக காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் சிறந்த காளைக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த காளை, மற்றும் மாடுபிடி வீரருக்கு இரண்டாம் பரிசாக பைக் வழங்க உள்ளனர்.
சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்து தங்க நாணயம், அண்டா, மிக்ஸி, சைக்கிள், டி.வி., மின் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை நடைபெறும்.
காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் அமருவதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. காயம் அடைந்த வீரர்களை ஏற்றிச் செல்ல 10-க்கும் ஆம்புலன்ஸ் வசதி வாடிவாசல் அருகிலேயே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் அலங்காநல்லூர் பேரூராட்சி பணியாளர்கள் வாடிவாசலை தூய்மைப்படுத்தினர்.
தென்மண்டல ஐ.ஜி.நரேந்திரன் நாயர் மேற்பார்வையில், மதுரை சரக டி.ஐ.ஜி. ரம்யா பாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலையில் 10 கூடுதல் சூப்பிரண்டுகள், 55 துணை சூப்பிரண்டுகள், 10 கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 80 இன்ஸ்பெக்டர்கள், 185 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.
- 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களில் உள்ள பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.
"40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.
தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தைத் தமிழில் ஆக்கி அளிக்கவும் பெரும் பொருட்செலவில் அரசு முன்னெடுக்கும் இந்த உலக அளவிலான அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்" என தெரிவித்துள்ளார்.
- மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம்.
- இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளுவர் திருநாளுக்கு பெருகி வரும் ஆதரவு திருவள்ளுவரின் செல்வாக்கு பெருகுவதை காட்டுகிறது. திருவள்ளுவர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட இரு மொழி கொள்கை குறித்து பேச வேண்டும். திருக்குறளை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம். மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம் எனக் கூறினார்.
இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள். இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்வர்கள் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். அங்கிருந்து இங்கு தொழிலுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவது மொழி என்பது சூழலாலே உருவாகிறது என்றார்.
எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதுபோல் வடமொழி நிலத்தை அரித்து விட்டது. அப்படி நாங்கள் அதிகம் இழந்திருக்கிறோம். இனியும் எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க தயாராக இல்லை. இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை. அச்சம் தான் உள்ளது. இந்த நியாயமான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
- 14 காளைகளை அடக்கி பொதும்பு பிரபாகரன் முதல் இடம் பிடித்தார்
- 11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் இரண்டாம் இடம் பிடித்தார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடக்கும் போட்டிகள் பிரபலமானவை.
மாட்டு பொங்கலான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவடைந்தது.
முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் கார் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், பைக், தங்கக்காசு, ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி பெட்டி என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதில் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்தார். 2020, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களிலும் முதலிடம் பிடித்தவர் பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் 2-ஆம் இடத்தில் உள்ளார். அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக கிடைத்தது.
கொந்தகை பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகளை அடக்கி 3-வதாக இடம் பிடித்தார்.
சிறந்த காளையாக புதுக்கோட்டை ராயவயல் சின்னகருப்பு காளைக்கு முதல் பரிசை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 42 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
- பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும்.
- அவனியாபுரம் ஜல்லிகட்டு சிறப்பாக நடைபெற்ற நிலையில் இன்று பாலமேடு ஜல்லி கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
மதுரை எலியார்பத்தியில் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில், காளை குத்தி ஒருவர் உயிரிழந்துள்ளார். எலியார்பத்தி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர், வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அங்கு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் இருந்து ஓடிவந்த காளை, ரமேஷ் என்ற இளைஞரின் இடது மார்பில் முட்டியது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த ரமேஷ்-க்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், ஒரு வயதில் பெண்குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.
- வருடந்தோறும் மாட்டுபொங்கல் தினத்தன்று இங்கு குதிரை பொங்கல் விழா கொண்டாடப்படும்.
- குதிரைகளுக்கு முழு ஓய்வு அளித்து அதை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை மற்றும் அதனை சுற்றி 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து வசதி இல்லாத இங்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குதிரைகளை பயன்டுத்தி வருகின்றனர். இங்கு மா, பலா, எலுமிச்சை, சவ்சவ், அவரை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை விளை நிலங்களில் இருந்து சந்தைகளுக்கு கொண்டு வரவும், மீண்டும் தங்கள் ஊருக்கு வந்து செல்லவும் குதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர். வருடந்தோறும் மாட்டுபொங்கல் தினத்தன்று இங்கு குதிரை பொங்கல் விழா கொண்டாடப்படும். அதன்படி இன்று கிராம மக்கள் குதிரை பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
இது குறித்து சிறுமலையை சேர்ந்த விவசாயி தங்கபாண்டி கூறுகையில்,
மலைப்பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் விவசாய நிலங்களில் விளைவிக்கக்கூடிய மலை பயிர்களான வாழை, பலா, எலுமிச்சை, சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை குதிரைகளில் ஏற்றி பழையூர், புதூர், தென்மலை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு வருகின்றோம். இவ்வாறு விவசாயிகளுக்கு உதவும் குதிரைகளை இன்று குளிக்க வைத்து வண்ண வண்ண கலரில் பொட்டுவைத்து, மாலை அணிவித்து, சலங்கை கட்டி அலங்காரம் செய்து அவை உண்பதற்கு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறோம்.

மேலும் இன்று குதிரைகளுக்கு முழு ஓய்வு அளித்து அதை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம். எந்த வேலையும் கொடுக்க மாட்டோம். எங்கள் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய குதிரைகளை தெய்வமாக வழிபட்டு பொங்கல் வைத்து கொண்டாடி வருகிறோம். மேலும் எங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் கால்நடைகளுக்கு சிறுமலையில் கால்நடை மருத்துவமனை இல்லாததால் வாடகை வாகனம் பிடித்து மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு வீண் செலவு ஏற்படுகிறது. எனவே சிறுமலையில் கால்நடை மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- தி.மு.க. பைல்ஸ்-3 என்ற புதிய ஆடியோ உரையாடலை வெளியிட்டுள்ளார்.
- வரும் நாட்களில் இது தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்கள் வெளி வரும்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் 2 முறை பட்டியல்கள் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் வெளியிட்ட பட்டியலில் தி.மு.க. பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியல் விவரம் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டன.
ஆனால் அண்ணாமலை தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும் வழக்கை எதிர் கொள்ள தயார் என்றும் கூறி பதில் நோட்டீஸ் அனுப்பினார்.
தி.மு.க. எம்.பி.யும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அண்ணாமலையிடம் நஷ்ட ஈடு கேட்டும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் தி.மு.க. பைல்ஸ் இன்னும் தொடரும் என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் பொங்கல் தினமான நேற்று தி.மு.க. பைல்ஸ்-3 என்ற புதிய ஆடியோ உரையாடலை வெளியிட்டுள்ளார்.
இதில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியும் முன்னாள் உளவுத் துறை ஐ.ஜி.யுமான ஜாபர்சேட் ஆகியோரிடையே நடக்கும் உரையாடல் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த உரையாடலையும் வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பலவற்றில் இதுவும் ஒன்று. இந்த கூட்டணி 2004 முதல் 2014 வரை வேறு பெயரில் இருந்தது.
டி.ஆர்.பாலு, ஜாபர்சேட் உரையாடலில் 2 ஜி விசாரணையில் சி.பி.ஐ. ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க. காங்கிரஸ் முடிவு செய்து விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டுள்ளன.
வரும் நாட்களில் இது தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்கள் வெளி வரும். நாளை ரெய்டுக்கு வர வேண்டாம். நாம் தயாராக இருக்கும் போது தகவல் சொல்லிவிடலாம் என்றெல்லாம் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மூலம் எப்படியெல்லாம் வழக்கை நீர்த்து போக செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகளை வளர்க்க தன்னந்தனியாக கடுமையாக சிரமப்பட்டேன்.
- பெண் வங்கி ஊழியர் நிலத்தை தானமாக வழங்கிய இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
மதுரை:
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் போன்ற தரும காரியங்களை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது கோடி புண்ணியங்களை செய்வதற்கான பலனை அளிக்கும் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கி உள்ளார். அவரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பெருமைக்கு சொந்தக்காரர் மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் (வயது52) ஆவார். இவர் தல்லாக்குளம் பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வங்கியில் பணியாற்றியபோது கடந்த 1991-ம் ஆண்டு இறந்தார்.
இதையடுத்து ஆயி பூரணத்திற்கு அதே வங்கியில் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. கணவர் இறந்த நிலையில் மகள் ஜனனியை பாசத்தோடு வளர்த்து வந்த ஆயி அம்மாளுக்கு மீண்டும் பேரிடி காத்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகள் ஜனனி திடீரென இறந்தார். இது ஆயி பூரணத்தை பெருமளவில் பாதித்தது. தனது மகள் இருக்கும்போது மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என அடிக்கடி தாய் ஆயி பூரணத்திடம் கூறி வந்துள்ளார்.
மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மதுரை மாவட்டம் கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தனக்கு சொந்தமான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.
வங்கி பெண் ஊழியரின் இந்த கொடை செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆயி பூரணம் கூறியதாவது:-
எனது கணவர் இறந்தபோது மகள் ஜனனிக்கு 1½ வயது. மகளை வளர்க்க தன்னந்தனியாக கடுமையாக சிரமப்பட்டேன். சிறு வயது முதலே எனது மகள் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அடிக்கடி கூறி வந்தார். எனது தந்தைக்கும் அதே நோக்கம் இருந்தது.
அவர் மூலம் பலர் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெற்று பயனடைந்துள்ளனர். எனது தந்தை வழியிலும், மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையிலும் திருமணத்தின்போது எனக்கு சீதனமாக வழங்கப்பட்ட நிலத்தை நான் படித்த பள்ளியான கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு தானமாக வழங்கி உள்ளேன்.
உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எனக்கு சொந்தமான இடத்தை கல்வித்துறை பேரில் பத்திரம் பதிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஒப்படைத்துள்ளேன். இம்முயற்சிக்கு எனது உறவினர்கள் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். யாரும் தடை போடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த ஆயி பூரணம் வெளி உலகம் அதிகம் அறியாதவர். தான் உண்டு, தன் குடும்பம் வேலை என வாழ்ந்து வருகிறார். இவரது கொடை செயலை அறிந்து மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராட்ட வங்கிக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். ஆனால் வந்தது எம்.பி. என்று கூட அறியாமல் ஆயி பூரணம்மாள் இருந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் எடுத்து கூறிய பின்பு தான் தனக்கு வாழ்த்து கூற எம்.பி. வந்துள்ளார் என ஆயி பூரணம்மாளுக்கு தெரிய வந்துள்ளது. பெண் வங்கி ஊழியர் நிலத்தை தானமாக வழங்கிய இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அதற்கு முத்தாய்ப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயி பூரணத்தை பாராட்டி உள்ளார்.
மேலும் முதலமைச்சர் சிறப்பு விருது ஆயி அம்மாளுக்கு வருகிற குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
- அனைத்து பிரகாரங்களையும் சுற்றி வந்த கவர்னர் ஆர்.என்.ரவி மூலவர் மற்றும் உற்சவரை தரிசனம் செய்தார்.
- கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு தரப்பட்டது.
ராமேசுவரம்:
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் சென்றார். அங்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து திருப்புல்லாணியில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த ராமாயண காவியத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஆதிஜெகநாத பெருமாள் கோவிலுக்கு சென்றார்.
அங்கு அனைத்து பிரகாரங்களையும் சுற்றி வந்த கவர்னர் ஆர்.என்.ரவி மூலவர் மற்றும் உற்சவரை தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலுக்கு சென்றார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு தரப்பட்டது. கோவில் மூலவரை தரிசனம் செய்த கவர்னருக்கு பட்டர்கள் பிரசாதம் வழங்கினர்.
பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த கவர்னர் ராமநாத சாமி கோவில் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்திருந்த தூய்மை பாரத திட்டத்தின்கீழ் நடைபெற்ற பணியில் கலந்துகொண்டார். மேலும் அதில் பங்கேற்ற தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
மீண்டும் ராமேசுவரத்தில் இருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். முன்னதாக திருப்புல்லாணி, ராமேசுவரம் கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷட்டர்கள் முழுமையாக சீரமைக்கப் படவில்லை என்று தெரிகிறது.
- உபரி நீர் செல்லும் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டிஏரி. இந்த நீர் தேக்கம் 1944-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஏரி நிரம்பினால் அதில் இருந்து உபரி நீர்வெளியேறும் வகையில் 800 அடி நீளத்தில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்கள் உள்ளன.
பூண்டி ஏரி கட்டப்பட்டதில் இருந்து இதுவரை ஷட்டர்கள் முழுமையாக சீரமைக்கப் படவில்லை என்று தெரிகிறது. அதில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடியில் தற்போது 3085 மில்லியன் கன அடி(3 டி.எம்.சி) நீர் இருப்பு உள்ளது.
தற்போது மழை இல்லாதததால் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உபரி நீர் செல்லும் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஷட்டர்ககளில் இருந்து 30 கன அடி வரை வீணாக உபரி நீராக வெளியேறி வருகிறது.
எனவே பொதுப் பணித்துறையினர் பூண்டி ஏரியில் உள்ள ஷட்டர்களில் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து தெய்வங்களான 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
- பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாரம்பரியம் மிகுந்த ஊராகும்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் வாய்ந்ததாகும்.
காளையாக இருந்தாலும், காளையர்களாக இருந்தாலும் வீரத்தை மட்டுமின்றி அன்பையும், பாசத்தையும், விசுவாசத்தையும் மண்ணில் விதைக்கும் திருவிழாவாகவே இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் பொங்கல் தினமான நேற்று அவனியாபுரத்தை தொடர்ந்து, இன்று பாலமேட்டில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் அரசு வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து தெய்வங்களான 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான காளைகள் மட்டுமே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 1,000 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அதேபோல் தகுதிபெற்ற 700 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் லாரி, வேன்களில் கொண்டு வரப்பட்டு இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. இந்த காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாரம்பரியம் மிகுந்த ஊராகும். அவனியாபுரம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட போதிலும், அதிக அளவிலான காளைகள் பாலமேட்டில்தான் அவிழ்க்கப்படுகிறது. அதன்படி நன்கு பயிற்சி பெற்ற காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்தன. அதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
திமிலை உயர்த்தி கெத்து காட்டிய காளைகளின் அருகில் செல்லக்கூட அச்சப்பட்ட மாடுபிடி வீரர்கள் தடுப்புக்கட்டைகள் மீது ஏறி நின்று கொண்ட காட்சிகளையும் அவ்வப் போது காணமுடிந்தது. தில்லும், தெம்பும் இருந்தால் என்னை அடக்கிப்பார் என்று சீறியபடி காளைகள் களமாடியதை உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பார்த்து ரசித்தனர்.
இதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றனர். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது. படுகாயம் அடையும் வீரர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தன.

போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, விலை உயர்ந்த டிவி, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடி படாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளைப் பெற்றனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் இரண்டாம் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கன்று குட்டியுடன் மாடு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் பைக் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு சமூக ஆர்வலர் பொன்குமார் சார்பில் காங்கேயம் மயிலை பசு மற்றும் கிடாரி கன்று குட்டி வழங்க உள்ளனர். சீறிப் பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் மடக்கி பிடித்து தங்க நாணயம் முதல் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட் களை பரிசாக பெற்று சென்றனர்.
காளைகளுக்கும், மாடு பிடி வீரக்ளுக்கும் காயம் ஏற்படாதவாறு தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் அமருவதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் கேலரிகள் அமைக்கப்பட்டி ருந்தது.






